வாழ்வின் வசந்தத்தை ஏந்தி வரும் வசந்த நவராத்திரி!

வாழ்வின் வசந்தத்தை ஏந்தி வரும் வசந்த நவராத்திரி!

வராத்திரி நம் பாரதத்தின் பிரசித்தி பெற்ற பண்டிகை. வருடத்தில் நான்கு முறை நவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆனி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமை முதல் நவமி வரையிலான ஒன்பது நாட்கள் ஆஷாட நவராத்திரி என்றும் வாராஹி நவராத்திரி என்றும் வழங்கப்படுகிறது. இந்த ஒன்பது நாட்கள் வாராஹி அம்மனுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.  புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமை முதல் நவமி வரையிலான ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரியாகும். இதில் துர்கா, லட்சுமி, சரஸ்வதிக்கு வழிபாடு செய்யப்படுகிறது. தை மாத அமாவாசைக்குப் பின் வரும் பிரதமை முதல் நவமி வரையிலான ஒன்பது நாட்கள் சியாமளா நவராத்திரி. இத்தினங்கள் அன்னை ராஜமாதங்கி தேவியை வழிபடும் நாட்களாக அமைகின்றன. கடைசியாக, பங்குனி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமை முதல் நவமி வரையில் கொண்டாடப்படுவது சைத்ர நவராத்திரி என்றும் வசந்த நவராத்திரி என்றும் வழங்கப்படுகிறது. இந்த நாட்களில் அன்னை துர்கையை ஒன்பது வடிவங்களில் வழிபடுகிறார்கள்.

இம்மாதம் நாளை முதல் ஆரம்பிக்கும் வசந்த நவராத்திரி வட இந்தியாவில் மிகவும் விசேஷம். இது அங்கே, ‘சைத்ர நவராத்திரி’ என்னும் பெயரில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அனைத்து நவராத்திரிகளுமே அன்னை துர்கையை வழிபடுவதாகவே அமைந்திருக்கிறது. இந்த வருடம் வசந்த நவராத்திரி என்னும் சைத்ர நவராத்திரி நாளை மார்ச் 22 முதல் (பிரதமை) மார்ச் 30ம் தேதி வரை கொண்டாடப்படும். ஒவ்வொரு வருடமும் இந்த நவராத்திரியின் ஆரம்பம் யுகாதி மற்றும் குடீபாட்வா போன்ற ஆந்திர, மஹாராஷ்டிர புது வருடப் பிறப்பு தினங்களின் போது அமைகிறது. நவராத்திரியின் முடிவு நாள் அன்று ஸ்ரீ ராமநவமி பண்டிகை வருவது வசந்த நவராத்திரியின் மற்றொரு விசேஷம்.

நாம் சாரதா நவராத்திரி என்னும் பெயரில் கொண்டாடும் புரட்டாசி மாத நவராத்திரியின்போது, அதுவும் தென்னகத்தில் மட்டுமே கொலு வைப்பது வழக்கம்.  மற்றபடி முதல் நாள் நல்ல நேரம் பார்த்து கலசம் வைப்பது, ஒன்பது நாட்களும் நித்ய பூஜை, வழிபாடு செய்வது எல்லாமே நான்கு நவராத்திரிகளுக்கும் பொதுவானவைதான். வசந்த நவராத்திரியின்போது துர்கா தேவியின் ஒன்பது விதமான வடிவங்கள் வழிபடப்படுகின்றன. இவை, ஷைலபுத்ரி, பிரம்மசாரிணி, சந்திரகாந்தா, குஷ்மாந்தா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்ரி, மஹாகௌரி மற்றும் சித்திதாத்ரி ஆகும்.

ஷைலபுத்ரி என்பவள் ஹிமவானின் புத்ரியாகவும், பிரம்மசாரிணி என்பவள் பார்வதி மாதா ஒரு சாப விமோசனத்துக்காக தவம் இருந்தபோதும் எடுத்த அவதாரமாகும். சந்திரகாந்தா மாதா அசுரர்களை வதம் செய்ய புலியின் மீது பத்து கரங்களுடன் வில் அம்பு, திரிசூலம், கத்தி போன்ற ஆயுதங்களை ஏந்தி வருபவள். மாதா குஷ்மாந்தா இந்தப் பிரபஞ்சத்தையே உருவாக்கி எல்லோரையும் காப்பவள் என்று கூறப்படுகிறது. ஸ்கந்தமாதா என்னும் அவதாரத்தில் தேவிக்கு நான்கு கரங்கள், மூன்று விழிகள் இருப்பதாகவும் அவள் சிங்கத்தின் மீது ஏறி வருவதாகவும் வழிபடுகிறார்கள். மகிஷாசுரனை வதம் செய்த வடிவமாக அன்னை காத்யாயினியின் வடிவம் வழிபடப்படுகிறது. காளராத்திரி மாதாதான் ஒன்பது வடிவங்களிலும் மிகவும் உக்கிரமானவளாகக் கருதப்படுகிறாள். இவள் அனைத்து அசுர சக்திகள், எதிர்மறை சக்திகளை அழிப்பவள். அன்னை மஹாகௌரி சாந்தமானவள். பக்தர்களுக்கு அனைத்துச் செல்வங்களையும் அளிப்பவள். கடைசி நாள் அன்று வழிபடப்படும் அன்னை சித்திதாத்ரி அர்த்தநாரீஸ்வரராக இருக்கும் சிவனின் பாதி வடிவமாக திகழ்பவள் என்று கூறப்படுகிறது.

வடக்கே சுமங்கலிப் பெண்கள் மேற்கண்ட ஒன்பது நாட்களும் விரதம் இருந்து வசந்த நவராத்திரியின்போது அம்பிகைக்கு வழிபாடு நடத்துகிறார்கள். நவராத்திரி என்பதே தீயவற்றை ஒழித்து, நல்லதை நிலைநாட்டுவதுதான். பொதுவாக, இந்த வசந்த நவராத்திரியைப் பற்றி சொல்லப்படுவது, மஹிஷாசுர வதத்துக்குப் பிறகு வரும் நவராத்திரி இதுதான் என்று. அசுரனை வதம் செய்த துர்கைக்கு நன்றியுடன் வழிபாடு செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறுவதே சைத்ர நவராத்திரி என்னும் வசந்த நவராத்திரி வழிபாடாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com