வைகாசி மாதத்தில் வரும் பதினாறாவது நட்சத்திரமாகிய விசாகத்தில் முருகப்பொருமான் அவதரிக்க, இது வைகாசி விசாகத் திருவிழாவாக அனைத்து முருகப்பொருமான் திருத்தலங்களிலும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. இன்று வைகாசி விசாகத் திருநாள். விசாக நட்சத்திரத்தில் பிறந்த காரணம், ‘விசாகன்’ என்றும் முருகனுக்குப் பெயர் உண்டு. ‘வி’ என்றால் பறவை (அதாவது மயில்) ‘சாகன்’ என்றால் பயணம். மயில் மீது பயணம் செய்யும் காரணம் இதுதான்.
சிவபெருமானின், ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேயம்,,சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களுண்டு. அதோ முகம் என்கிற ஆறாவது முகமும் வெளிப்பட, இந்த ஆறு முகங்களின் நெற்றிக் கண்களில் இருந்து வெளிப்பட்ட அக்னிப் பிழம்பில் அவதரித்தவர் முருகப்பெருமான். ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர். நல்ல வைகாசி வெயியில் பிறந்த காரணம், இது முருகனின் ‘உஷ்ணாவதாரம்’ எனக் கூறப்படுகிறது.
திருசெந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறுகின்றன. இத்திருவிழா சமயம் நடக்கும் முக்கியமான நிகழ்வு , ‘சாப விமோசனம்’ ஆகும். இதன் புராணக் கதை விபரம் வருமாறு…
பராசர முனிவருக்கு பிறந்த ஆறு குழந்தைகளும் சுட்டித்தனம் செய்வதில் வல்லவர்கள். ஒரு நாள் குளத்தில் குளிக்கையில், அவர்கள் நீரினை அசுத்தம் செய்து விளையாட, அதில் வாழ்ந்து வந்த மீன்களும், தவளைகளும் வேதனைப்பட்டன. “நீரை அசுத்தப்படுத்துவது தவறு. தண்ணீர் கடவுளுக்குச் சமம். நீரை வழிபட வேண்டுமே தவிர, இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது. நீராடியது போதும். வெளியே வாருங்கள்” என பராசர முனிவர் கூற, அவர் அதைக் கேட்காமல், மேலும், குளத்தில் கும்மாளமிட, பல மீன்கள் இறந்து போயின. பராசர முனிவர் கோபம் கொண்டு, தனது ஆறு புத்திரர்களையும் மீன்களாக மாறக்கடவது என சாபமிட்டார். தவறுக்கு வருந்திய அவர்கள், சாப விமோசனம் எப்போது கிடைக்குமென கேட்க, பார்வதி தேவி அருளால் விமோசனம் கிடைக்குமென பராசரர் கூறினார்.
மீன்களாக மாறிய ஆறு பேர்களும் நெடுங்காலம் நீரிலேயே வாழ்ந்து வந்தனர். ஒரு சமயம், சிவலோகத்தில் பார்வதி தேவியார், முருகனுக்கு ஞானப்பால் ஊட்டுகையில் அதிலிருந்து ஒரு சொட்டு முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழ, அதை மீன்கள் பருக, ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள். அவர்கள் சிவபெருமானுக்கு நன்றி செலுத்துகையில் அவர், “நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள். முருகக் கடவுள் அருள்புரிவார்” என்று அசரீரியாக ஒலிக்க, திருச்செந்தூர் சென்று அவர்கள் தவம் மேற்கொண்டனர். அவர்களுக்கு முருகப்பெருமானின் அருள் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி நிறைந்த நாளில் கிடைத்தது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருக்கும் வசந்த மண்டபத்தில் உள்ள நீர் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளைப் போடுவார்கள். முருகனின் வாயிலிருந்து சிந்திய ஒரு சொட்டு பாலை அருந்திய மீன்கள் சாப விமோசனம் பெற்று ஆறு முனிவர்களாக மாறுவார்கள். இதற்காக ஆறு முனிவர்களின் உருவ பொம்மைகள் அங்கே தயாராக வைத்து இருப்பார்கள். பராசர முனிவரின் குமாரர்களை நினைவுபடுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் மிக விமரிசையாக நடைபெறும். இதனைக் காண இன்று ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருவார்கள்.
‘ஆறிரு தடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க – வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க – செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
யானைதன் அணங்கு வாழ்க
மாறில்லா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம்’
வைகாசி விசாகத் தினத்தன்று முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் விலகுமென புராணங்கள் கூறுகின்றன. ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வார் விசாக நாளில் ஆழ்வார்திருநகரியில் அவதரித்த காரணம், வைணவத் திருத்தலத்திலும் வைகாசி விசாகத் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஆந்திரா, விசாகப்பட்டினம் அருகிலுள்ள சிம்மாசல அஹோபில நரசிங்க மூர்த்தியை விக்கிரக உருவில் வைகாசி விசாகத்தன்றுதான் தரிசிக்க முடியும். திருமஞ்சனம் நடைபெற்று அலங்காரங்கள் செய்யப்படும்.
யமதர்மராஜா அவதரித்த நாளும் வைகாசி விசாகமென்பதால் யமதர்மருக்கு இன்று தனி பூஜை செய்வது வழக்கம். இதன் மூலம் நோய் நொடிகள் இல்லாமல் வாழலாம் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும்.
பக்தர்கள் விரதமிருந்து இன்று முருகனுக்கு பால் காவடி, பால் குடம் எடுப்பார்கள். சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் சாதம், பானகம், தயிர் சாதம் போன்றவைகளை நிவேதனம் செய்து, மற்றவர்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள். பலர் குடை, செருப்பு போன்றவற்றை தானமாக வழங்குவதுமுண்டு.