வழித்துணை நாதர்!

வழித்துணை நாதர்
வழித்துணை நாதர்

றைவன் எங்கும் இருக்கிறான். தன்னை அடைக்கலமாகக் கொண்ட அடியார்களின் வழித்துணையாக உடனிருக்கிறான்’ என்றெல்லாம் பெரியோர்கள் சொல்கிறார்கள். அதை உணர்த்தும் விதமாக வழித்துணை நாதராக மார்க்கபந்தீஸ்வரர் என்கிற திருநாமத்துடன் சிவபிரான் அருள்பாலிக்கும் திருத்தலம்தான், விரிஞ்சிபுரம். அத்வைத சித்தாந்தத்தில் சிறந்த புலமை பெற்றிருந்த அப்பைய தீட்சிதர் பிறந்த தலம் இது. 1,300 ஆண்டுகள் பழைமையான இத்தலம் விரிஞ்சிபுரம் என்ற பெயர் பெற்றது எப்படி?

விரிஞ்சன் (பிரம்மன்) பரமசிவனின் அடியையும், விஷ்ணு முடியையும் காண பாதாளத்துக்கும், ஆகாயத்துக்கும் சென்றதும், விஷ்ணு அடியைக் காண முடியாத உண்மையை ஒப்புக்கொள்ள, பிரம்மன் கீழே விழுந்த தாழம்பூவுடன் வந்து பொய்யுரைத்ததும் நாம் அறிவோம். அந்த நான்முகனுக்கு தன் முடியைக் காட்டி அருளிய தலமே இது. அதன்பொருட்டே இத் தலம் விரிஞ்சிபுரம் ஆயிற்று. கௌரி தேவி இத்தல இறைவனை வழிபட்டு இங்குள்ள தீர்த்தத்தை உருவாக்கியதால் கௌரிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. விஷ்ணுபுரம், மார்க்கபந்தீஸ்வரம் என்பவை வேறு பெயர்கள். இத்தலப் பெருமைகள் அருணாச்சல புராணம், சிவரஹசியம், காஞ்சி புராணம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாலயத்தில் இறைவனை ஆராதித்து வந்த சிவநாதன் - நயினானந்தினி தம்பதியர்க்கு சிவசர்மா என்ற மகனாகப் பிறந்தார் படைக்கும் கடவுளான பிரம்மன். மகனுக்கு உபநயனம் செய்யும் முன்பே தந்தை இறந்துவிட, தொடர்ந்து பூஜை செய்வது தடைப்பட்டது. தன் மகனுக்கு பிரம்மோபதேசம் செய்து வைக்கும்படி நயினானந்தினி தன் உறவினரை வேண்ட, அவர்களோ ஆலய பராமரிப்பை தாமே ஏற்றுக்கொள்ளப் போவதாகக் கூறினர்.

மனம் நொந்த அந்தத் தாய் சிவபெருமானை வேண்டி நின்றாள். அவள் கனவில் தோன்றிய ஈசன், மறுநாள் சிவசர்மனை பிரம்ம தீர்த்தத்தில் நீராட்டி அழைத்துவரச் சொன்னார். அவளும் அப்படியே செய்து காத்திருக்க, ஈசன் வயோதிக வடிவில் அங்கு வந்து சிறுவனுக்கு பிரம் மோபதேசமும், சிவமந்திர தீட்சையும் செய்து வைத்து பின் அவ்வாலயக் குளத்தினுள் சென்று மறைந்து விட்டார்.

அவ்வூர் மன்னரின் கனவில் தோன்றிய இறைவன் சிவசர் மாவை ஊர்வலமாக ஆலயம் அழைத்துச் செல்லப் பணித்தார். அவ்வாறே ஆலயத்தை நெருங்கியதும், பூட்டியிருந்த ஆலயக் கதவு தானாகவே திறந்தது. தீர்த்தக் குடத்துடன் உட்சென்ற பாலகன் இறைவனிடம் தீட்சை பெற்றதால், பூஜைகளை மரபு மாறாமல் செய்யலானான். அபிஷேகம் செய்ய தன் உயரம் போதாமல் வருந்தினான். பாலனுக்கு அருள பரமசிவனும் தன் பாணத்தை சற்றே சாய்த்து அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டார். சிருஷ்டிகர்த்தாவாக இருந்தபோது காட்டாத தன் திருமுடியை, சிறுவனாக வந்து வணங்கிக் கேட்டபோது காட்டி அபிஷேகத்தை ஏற்றருளிய நாள் கார்த்திகை கடைசி ஞாயிறு. அதே கோலத்தில் இன்றும் தலைமுடி சாய்ந்த மகாலிங்கமாக ஸ்ரீமார்க்க பந்தீஸ்வரர் காட்சி தருகிறார்.

இந்தப் பெயர் ஏற்பட ஒரு வரலாறு உள்ளது. குண்டல தேசத்து மிளகு வியாபாரியான தனபாலன் சிறந்த சிவபக்தன். அவனது மிளகு மூட்டைகளை வழிப்பறித் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். ஈசனிடம் முறையிட்ட தனபாலனுக்காக ஒரு வீரன் வடிவில் அவனுக்கு துணையாக வந்து அவர்களிடமிருந்து மிளகு மூட்டைகளைக் காப்பாற்றிக் கொடுத்ததுடன், காஞ்சிபுரம் வரை அவனுக்குத் துணையாகச் சென்றதால் மார்க்கபந்தீஸ்வரர் அதாவது வழித்துணைநாதர் என்ற பெயர் ஏற்பட்டது.

சிவசர்மா
சிவசர்மா

110 அடி உயரத்தில் கிழக்கு நோக்கிய ஏழு நிலை களைக் கொண்ட ராஜகோபுரம். ஐந்து பிராகாரங்களைக் கொண்ட ஆலயத்தின் நெடிதுயர்ந்த மதில் சுவர்கள், ‘விரிஞ்சிபுரம் மதில் அழகு’ என்ற வழக்குமொழிக் கேற்ப ஆலயத்துக்கு அழகு சேர்க்கிறது. பல அழகிய மண்டபங்கள் அற்புதமான சிற்பக் கலையுடன் காட்சி அளிக்கின்றன. சுவாமிக்கும், அம்மனுக்குமென இரண்டு த்வஜஸ்தம்பங்களும், பலிபீடம், நந்தியும் உள்ளன.

சுற்றி வரும்போது 14 தூண்களைக் கொண்ட சக்தி மண்டபமும், சிம்மத்தின் முகம் கொண்ட குளமும் அமைந்துள்ளது. இந்த சிம்ம தீர்த்தமே மகளிரின் மழலை இல்லாக் குறையை தீர்க்கும் அற்புதக் குளம். கார்த்திகை மாதக் கடை ஞாயிறு அன்று குழந்தை இல்லாதவர்கள் பிரம்ம தீர்த்தத்திலும், சூலி தீர்த்தத்திலும், சிம்ம தீர்த்தத்திலும் குளித்து விட்டு இரவு ஆலயத்திலேயே உறங்க வேண்டும். அவர்கள் கனவில் இறைவன் தோன்றி அருள் செய்து அவர்களின் குறையை நீக்கி பிள்ளைப் பேறு தருவார் என்பது ஐதீகம். பலருக்கும் இது இன்று வரை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆதிசங்கரரால் பீஜாக்ஷர பிரதிஷ்டை செய்யப்பட தீர்த்தம் இது எனக் கூறப்படுகிறது.

இறைவனின் கருவறை, கஜப்பிருஷ்ட விமானம். மூலஸ்தானத்தில் சற்றே தலையைத் தாழ்த்தி சுயம்பு ரூப மாக பெரிய லிங்க வடிவில் காட்சி தருகிறார் இறைவன். பிரம்மனுக்கு மட்டுமல்ல, நம் குறைகளையும் உன்னிப்பாகக் கேட்டு நிறைவேற்றும் பொருட்டே தலையைத் தாழ்த்தி அருள் செய்வது போன்று தோன்றும் கருணாகடாட்சம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
வீட்டை தாவரங்களால் அலங்கரிக்க வேண்டுமா? இந்த 4 விஷயங்களை அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
வழித்துணை நாதர்

இறைவன் திருமுடிக்குமேல் காணப்படும் ருத்ராட்சப் பந்தல் அதிசய அற்புதம். கர்ப்பக்கிரகத்தை சுற்றிலும் கோஷ்ட தெய்வங்களாக கணபதி, தட்சிணாமூர்த்தி, துர்கை, வாசுதேவபெருமாள் ஆகியோர் கவினுறக் காட்சி தருகின்றனர். இரண்டாம் பிராகாரத்தில் அமைந்துள்ள பிட்சாண்டவர் சன்னிதி கலை வண்ணத்துடன் திகழ்கிறது.

மரகதாம்பிகைக்கு கிழக்கு நோக்கிய தனி சன்னிதி. மூன்று அடி உயரத்தில் அழகு மிளிரும் முகத்துடன் அதரங்களில் நகை சிந்த, நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் திவ்ய தரிசனம் தருகிறாள் மரகதாம்பிகை. அம்மன் சந்நிதியில் ஒரு நிலவறை இருப்பதாகவும், அது வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்துக்குச் செல் வதாகவும் கூறப்படுகிறது. தல விருட்சமான பனைமரம் அதிசயமானது. இதன் காய்கள் ஒரு வருடம் கருப்பாகவும், அடுத்த வருடம் வெள்ளையாகவும் காய்க்கிறது.

அருமையான சிற்பக்கலை. 13ம் நூறாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டு, பின் பல்லவ, விஜயநகர மன்னர்களால் மேம்படுத்தப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆலயம் முழுதும் மண்டபங்களிலும், தூண்களிலும் உள்ள ஒவ்வொரு கல்லும், சிற்பங்களும் கதை பேசுவதாக அமைந்துள்ளது. வெளிப்பிராகாரத்தில் அமைந்துள்ள காலம் காட்டும் கல்லில் அக்காலத்தில் நிழல் விழுவதை வைத்து நேரம் கண்டுபிடிப்பார்களாம். இங்குள்ள

சகஸ்ர மகாலிங்கம் அற்புத தரிசனம். தெற்கில் இருக் கும் சிறிய ராஜகோபுரம் வழியாக இன்றும் இரவில் சித்தர்கள் வந்து வழிபடுவதாகக் கூறப்படுகிறது.

பங்குனியில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம். கார்த்திகை மாதம் கடை ஞாயிறு திருவிழா, சிவராத் திரி, நவராத்திரி, ஆடி, தை வெள்ளிகள்,கார்த்திகை தீபம், பிரதோஷம் ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன. சுவாமிக்கு அபிஷேகம், அம்மனுக்கு மஞ்சள் காப்பு, புடவை சாத்துதல், அன்னதானம் செய்தல் ஆகியவை இங்கு சிறப்பான வேண்டுதல்களாகும்.

குழந்தை வரத்துக்கும், திருமண வரம் கிடைக்கவும் இங்கு பக்தர்கள் வழிபடுகிறார்கள். பிரம்மனுக்கு ஈசனே பிரம்மோபதேசம் செய்த தலமானதால் குழந் தைகளுக்கு பூணூல் போடவும், பெரியவர்கள் மந்திர தீட்சை எடுத்துக் கொள்ளவும், வித்யாரம்பத்துக்கும் இத்தலம் மிகச் சிறப்பானதாகும்.

-ராதா பாலு

பின்குறிப்பு:-

தீபம் அக்டோபார் 2015 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com