திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு எனும் ஊரில் அமைந்துள்ளது வேதபுரீஸ்வரர் கோவில். திருவோத்தூர் ஈசனின் பெயர் வேதபுரீஸ்வரர், வேதநாதர் எனவும், அம்பிகையின் பெயர் இளமுலை அம்பிகை. தல விருட்சம் பனைமரம். தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு திருத்தலத்தில் இது 8வது தலமாகும். காஞ்சிபுரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் திருவோத்தூர் உள்ளது. செய்யாற்றின் வடகரையில் அமைந்துள்ள மிகவும் பழமையான ஆலயம் இது. திருஞானசம்பந்தர் இங்கு ஒரு தேவாரப் பதிகம் பாடியுள்ளார். அருணகிரிநாதர் இத்தலத்து முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.
பெயர் காரணம்:
சிவபெருமான் இத்தலத்தில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதப்பொருளை விளக்கி அருளிய காரணத்தால் இத்தலம் "திருவோத்தூர்" எனப்பட்டது. தற்போது "திருவத்திபுரம்" என அழைக்கப்படுகிறது. சேயாறு முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டு இத்தலத்தின் தீர்த்தமாக உள்ளதால் இவ்வூர் "செய்யாறு" என அழைக்கப்படுகிறது
தல சிறப்பு:
இங்கு ஈசன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சுவாமி மீது தினமும் சூரிய ஒளி படுவது இத்தலத்தின் விசேஷமாகும். வேறு எந்த தலத்திலும் காண முடியாத சிறப்பம்சம் இக்கோவிலின் மகாமண்டபத்தில் நின்று சுவாமி, அம்பாள், முருகன், கணபதி, நவக்கிரகங்கள், தலமரம் என அனைத்தையும் ஒரே இடத்தில் நின்று தரிசிக்க முடியும் என்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
இங்குள்ள நந்தி சிவ பக்தனான தொண்டைமான் என்ற மன்னனுக்காக ஈசனின் ஆணைப்படி படைத்துணையாக சென்றதால் இங்கு நந்தி சிவனுக்கு எதிர் திசையில் திரும்பியுள்ளார்.
விசேஷமான 11 தலையுள்ள நாகலிங்கம்:
கீழே பூமாதேவி, அதற்கு மேல் மீன், அதன் மேல் ஆமை, அதற்கு மேல் 11 யானைகள், அதன் மேல் 11 சர்பம், அதன் மேல் லிங்கம், லிங்கத்திற்கு மேல் 11 சர்ப்ப தலைகள் என வித்தியாசமான அமைப்புடன் அமைந்துள்ளது. இங்கு நாக தோஷம் உள்ளவர்கள் அபிஷேகம் செய்ய திருமணத் தடை நீங்கும். இங்குள்ள பனை மரத்தின் பனம்பழங்களை சாப்பிட குழந்தை பாக்கியம் கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளதால் வெளிநாட்டில் இருக்கும் பக்தர்களுக்கு கூட அனுப்பப்பட்டு வருகிறது.
இத்தலம் சேயாத்தின் கரையில் உள்ளதால் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு கோவிலின் சுவர்கள் பாழானது. இதனால் வருத்தம் அடைந்த சிவனடியார் ஒருவர் ஆற்றின் கரையை உயர்த்தியதுடன் கரை கரைந்து போகாமல் இருக்க பனங்கொட்டைகளை நட்டு பனை மரங்களை வளர்த்தார். பனை மரங்கள் அனைத்தும் ஆண் பனைகளாய் காய்க்காது இருப்பதை கண்ட சமணர்கள் எள்ளி நகைத்து இழிவாய் பேசினர். இதனால் வருத்தமடைந்த சிவனடியார், திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்த பொழுது இதைப்பற்றி கூற உடனே சம்பந்தர் முக்கண் மூர்த்தியின் முன்பு பணிந்து பதிகம் பாடினார்.
"பூத்தேர்ந்தாயன"என்று தொடங்கும் திருப்பதிகத்தினால் போற்றித் துதித்து திருக்கடை காப்பு பாடலில் "குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்" என்று துவங்கிய மறுகணமே அங்கிருந்த ஆண் பனைகள் யாவும் இறைவனின் திருவருளால் நிறைந்த குலைகளை உடைய பெண்பனைகளாக மாற அனைவரும் அதிசயத்தனர். சமணர்கள் பிழை பொறுக்க வேண்டியதோடு சைவ சமயத்தின் சிறப்பினை அறிந்து சைவ சமயத்திற்கு மதம் மாறி ஞானசம்பந்தரைப் போற்றினர். இதற்கு சான்றாக அம்மன் சன்னதிக்கு முன் "கருங்கல் பனைமரம்" பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.