வேலுக்கு வளைகாப்பு நடைபெறும் முருகன் திருக்கோயில்!

Velukku Valaikaappu Nadaiperum Murugan Thirukoyil
Velukku Valaikaappu Nadaiperum Murugan Thirukoyilhttps://www.youtube.com

புதுக்கோட்டை - காரையூர் சாலையில் சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குமரமலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோயில். கொள்ளையழகுடன் காட்சி தரும் முருகப்பெருமானின் இத்திருக்கோயில் புராணத்தின்படி, பசுபதி என்னும் ஒரு தீவிர முருக பக்தர் வருடா வருடம் காவடி எடுத்து கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பழநி மலைக்கு பாத யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக் கொண்டிருந்தார். 80 வயதாகி விட்ட நிலையில் ஒருமுறை கார்த்திகை தீபத்தன்று பழநிக்கு காவடி எடுத்துச் செல்ல முடியாத அளவிற்கு அவர் உடல் சோர்ந்தார்.

"பழநிக்குச் சென்று முருகனை வழிபட முடியவில்லையே? இனி நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்" என்று மனம் நொந்த அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், "இத்தனை ஆண்டுகளாக என்னைத் தேடி நீ வந்தாய்! இப்போது உன்னைத் தேடி நான் வந்திருக்கிறேன்.  உனது ஊருக்கு அருகிலுள்ள குன்றில் சங்குச் செடிகள் வளர்ந்து கிடக்கும் இடத்தில் நான் இருக்கிறேன். நீ அங்கு வந்து என்னை தரிசனம் செய்து வழிபடு! நான் அங்கு குடிகொண்டதற்கு அடையாளமாக  அந்த இடத்தில் ஒரு விபூதிப் பை, ருத்திராட்ச மாலை, பிரம்பு, எலுமிச்சம் பழம் ஆகியவை இருக்கும். அந்த இடத்தில் மேற்கு நோக்கி ஒரு வேல் வைத்து நீயும், இப்பகுதி மக்களும் வழிபடுங்கள். இனி இந்தக் குன்று, 'குமரமலை' என்ற பெயருடன் விளங்கும்" என்று கூறினாராம்.

அடுத்த நாள் காலை பசுபதி கனவில் முருகன் சொன்ன விபூதிப் பை, ருத்திராட்சம் போன்ற அடையாளங்களுடன் சங்குச் செடிகளிடையே இருந்த இடத்தைக் கண்டுபிடித்து, "ஆஹா! குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமல்லவா?" என்று மனம் நெகிழ்ந்து போனார் பசுபதி. அங்கே ஸ்ரீ முருகப்பெருமான் சொற்படி ஒரு வேல் வைத்து பிரதிஷ்டை செய்தார்.

அதே நாளில் அந்த ஊர் அரசர் தொண்டைமான் கனவிலும் முருகன் தோன்றி தனது பக்தர்  ஒருவருக்காக தான் ஒரு குன்றில் சங்குச் செடிகளுக்கிடையே தோன்றியிருப்பதாகத் தெரிவித்தார். அடுத்த நாள் அங்கு சென்று பார்த்த அரசர் தொண்டைமான், தான் கனவில் கண்டது உண்மைதான் என்று தெரிந்து அங்கே ஒரு ஆலயம் எழுப்பத்  தீர்மானித்தார்.

‘அங்கிருந்த வேலை எடுத்து விட்டு அந்த இடத்தில் பழநி தண்டாயுதபாணியின் திருவுருவச் சிலையை பிரதிஷ்டை செய்யலாமா?’ என்ற பசுபதியின் கேள்விக்கும் முருகனிடமிருந்து பதில் கிடைத்தது. ராமநாதபுரம் மாவட்டம் ஒரு சிற்றூரில் வசிக்கும் சிற்பியின் பெயரைச் சொல்லி, "அவர் ஒரு முருகன் சிலையை வடிவமைத்து இருக்கிறார். அதை நான் சொன்னதாகச் சொல்லி  வாங்கி வா. வேல் இருக்கும் இடத்தில் அந்தச் சிலையை வைத்து வழிபாடு செய்யுங்கள்" என்று கூறினார் முருகப்பெருமான்.

அரசர் தொண்டைமான் அந்த இடத்தில் கோயில் கட்டி பாலமுருகன் சிலையை பிரதிஷ்டை செய்தார். 50 படிகள் ஏறி குன்றின் மேல் சென்றால் கொள்ளையழகுடன் குமரமலையான் அங்கே காட்சி தருகிறார். சுவாமியின் திருநாமம் பாலதண்டாயுதபாணி. தனது பக்தர் பழநி முருகனை தரிசிப்பதற்காக அவர் இருக்கும் இடத்திற்கருகேயுள்ள குன்றில் கோயில் கொண்ட இந்த பாலதண்டாயுதபாணி,  பழநி முருகனைப் போல சிறுவனாக காட்சியளித்தபோதிலும் தோற்றத்தில் வித்தியாசம் தெரிகிறது. இந்த கொள்ளை அழகு குமரமலை முருகன் தலையில் முடியுடன், குறும்பு கொப்பளிக்கும் முகத்தில் குறுஞ்சிரிப்புடன், இடுப்பை ஒடித்து ஒயிலாக  ஒரு பக்கமாக தலையை சாய்த்து காட்சியளிக்கிறார்.

இதையும் படியுங்கள்:
பெருங்காயத்தின் 10 பெரும் பலன்கள்!
Velukku Valaikaappu Nadaiperum Murugan Thirukoyil

இக்கோயிலில் குழந்தை பாக்கியத்திற்காக, வாத நோய் நீங்குவதற்காக, கணவன் மனைவி  ஒற்றுமைக்காக என எல்லாவற்றுக்கும் விசேஷமாக பிரார்த்தனை செய்து வழிபடுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் வளைகாப்பு தினத்தன்று இங்கே வந்து இங்கேயுள்ள வேலுக்கு வளைகளை அணிவித்து சுகப்பிரசவத்திற்காக பிரார்த்தனை செய்வது இந்தத் தலத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.

இக்கோயில் மலை மீது சங்கு வடிவிலான சுனைத்தீர்த்தம் உள்ளது.  இதில் ஆண்டு முழுவது தண்ணீர் உள்ளது. சுவாமி அபிஷேகத்திற்கு இங்கேயிருந்தே தேவையான புனித நீர் எடுக்கப்படுகிறது. கோயிலில் வழங்கப்படும் இந்த தீர்த்தத்தை பக்தர்கள் பருகுவதன் மூலம் நோய் நொடிகள் நீங்குவதாக நம்பிக்கையுள்ளது. ஊரை விட்டு சற்றே விலகியிருக்கும் இந்த குன்றுக் கோயில், தெய்வ சான்னித்தியத்துடன் மிகவும் அமைதியாக பக்தர்கள் உட்கார்ந்து தியானம் செய்யும் இடமாக விளங்குகிறது.

பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும் இக்கோயிலில் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மாதம்தோறும் கார்த்திகை, சஷ்டி தவிர வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்றவை இந்தத் தலத்தில் முக்கியமான விழாக்களாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com