
திருமலை உருவாக காரணம், அதன் பெருமைகள், அங்கு நடத்தப்படும் உற்சவங்கள் என ஒவ்வொன்றிற்கும் திருப்பதி ஏழுமலையானை பற்றி விதவிதமான கதைகள் சொல்லப்படுகின்றன. அந்த வகையில் குபேரனிடம் பணக்கார கடவுள் ஏழுமலையான் வாங்கிய கடன் எப்போது அடையும் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
பவித்ரோற்சவம்
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் வருடம் தோறும் ஏழுமலையானுக்கு நடைபெறும் பூஜைகள், மந்திரங்கள் , உபசாரங்கள் ஆகியவற்றில் ஏதாவது தவறு நேர்ந்தால் அதனால் ஏற்படும் தோஷத்தை அல்லது பாவங்களை நீக்குவதற்காக சடங்குகள் செய்யப்படும் பவித்ரோற்சவம் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வெகு விமரிசையாக நடைபெறும்.
சீனிவாசன் அவதாரம்
பூலோகத்தில் சீனிவாசராக அவதரித்த வெங்கடேச பெருமாள் ஆகாச ராஜனுக்கு மகளாக அவதரித்த மகாலட்சுமியின் அவதாரமான பத்மாவதி தாயாரை மணப்பதற்காக பெரிய தொகையை வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என சீனிவாசனிடம் கேட்டார் ஆகாச ராஜன்.
ஏழுமலையானுக்கு குபேரன் விதித்த நிபந்தனை
பத்மாவதியை மணம் முடிக்க குபேரனின் உதவியை நாடிய வெங்கடேச பெருமாளுக்கு குபேரன் ஒரு கோடியே 14 லட்சம் தங்க காசுகளை ஒரு நிபந்தனையுடன் கடனாகக் கொடுத்தார். கலியுகம் முடியும் வரை, கடனாக வாங்கிய தொகையை வட்டியுடன் சேர்த்து திருப்பித் தரும் வரை, பூலோகத்திலேயே இருக்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.
ஏழுமலையானின் கடன் உணர்த்தும் உண்மைகள்
குபேரனிடம் ஏழுமலையான் வாங்கிய கடன் என்பது மூன்று விஷயங்களை உணர்த்துகிறது. ஒன்று கடவுளே மனித உருவில் வந்தாலும் கடன் உள்ளிட்ட கர்ம வினைகளுக்கு உட்பட்டுத் தான் ஆக வேண்டும். இரண்டாமாவது, தன் மீது அன்பு வைப்பவர்களுக்காக இறைவன் எதையும் செய்வார் என்பது. மூன்றாவது, திருமலைக்கு வரும். பக்தர்களை மட்டுமல்ல, கலியுகம் முடியும் வரை தொலைவில் இருந்தும் தன்னை நினைக்கும் பக்தர்களை காக்க பெருமாள் பூமியில் தான் இருப்பார்.
ஏழுமலையான் கடன் எப்போது அடையும்?
குபேரனிடம் வாங்கிய கடனுக்கு பெருமாள் இன்று வரை வட்டி மட்டும்தான் கட்டிக் கொண்டிருக்கிறார். தான் பட்ட கடனை பக்தர்கள் காணிக்கையாக கலியுகத்தில் செலுத்தி அடைப்பார்கள் என்று பெருமாள் சொன்னதாக சில கதைகளும் குபேரனிடம் வாங்கிய கடனை பெருமாள் எப்போதோ அடைத்து விட்டார் என்றும் கதைகள் சொல்லப்படுகின்றன. தூணிலும் துரும்பிலும் இருக்கும் பரந்தாமனுக்கு குபேரன் விதித்த நிபந்தனைகளின் படி, ஏழுமலையானின் கடன் கலியுகம் முடியும் நேரத்தில் தான் அடையும்.
அதுவரை ஏழுமலையானாக மக்களை காக்க பூமியிலேயே இருப்பார் பெருமாள். கலியுகம் முடியும் நேரத்தில், தனது பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தையும் நிகழ்த்திய பிறகு தான் மீண்டும் வைகுண்டத்திற்கு பெருமாள் திரும்புவார் எனவும் சில நம்பிக்கைகளின் அடிப்படையில் சொல்லப்படுகிறது.