வெட்டவெளியில் அருள்பாலிக்கும் வெக்காளி அம்மன்!

Uraiyur Vekkaliyamman
Uraiyur Vekkaliyamman
Published on

லைக்கு மேல் கூரை இல்லாமல் வெட்டவெளியில் வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வெக்காளியம்மன் கோயில் திருச்சிக்கு அருகே உறையூரில் உள்ளது. இது திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ளது.  உறையூர் முற்காலத்தில் சோழர்களின் தலைநகரமாக இருந்தது. உறையூருக்கு வாகபுரி, கோழியூர் என்ற பெயர்களும் உண்டு.

இந்தக் கோயிலின் தல புராணப்படி, ஒரு காலத்தில் உறையூரை சோழ மன்னன் ஆட்சி செய்த காலத்தில் சாரமா முனிவர் என்பவர் இங்கே ஒரு நந்தவனம் அமைத்து பல அரியவிதமான மலர்ச் செடிகளை வளர்த்தார். இவர் திருச்சி மலைக்கோட்டையிலுள்ள ஸ்ரீ தாயுமான சுவாமிகளின் பக்தர் ஆனதால், தினமும் இந்த மலர்களை கொய்து, மாலை கட்டி ஸ்ரீ தாயுமானவருக்கு அர்ப்பணித்து வந்தார்.

இந்த அரிய மலர்களைப் பார்த்த பராந்தகன் என்பவன் அவற்றைப் பறித்து மன்னருக்குக் கொண்டு போய் கொடுத்தான். இதன் மூலம் மன்னரின் நன்மதிப்பைப் பெற முயற்சி செய்தான். இந்த அரிய வகை அழகிய மலர்களைப் பார்த்த மன்னர் தனது மனைவி புவனமாதேவிக்கு இதை சூடிக்கொள்ள கொடுத்தார். முனிவர் மலர்கள் நந்தவனத்திலிருந்து திருடுபோவதைப் பற்றி மன்னரிடம் சென்று முறையிட்டார். ஆனால், மன்னர் இதைப் பொருட்படுத்தாததால், முனிவர் நேரே சென்று ஸ்ரீ தாயுமானவரிடம் முறையிட்டார்.

நடந்ததைக் கேட்டு கோபமுற்ற ஸ்ரீ தாயுமான சுவாமிகள் மேற்கு முகமாகத் திரும்பிப் பார்க்க நெருப்பு மழை பொழிந்தது. ஊரிலிருந்த மக்கள் அனைவரும் தப்பியோடினர். உறையூரை மண்  புயல் மூட, மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள அந்த ஊர் காவல் தெய்வமான ஸ்ரீ வெக்காளியம்மனிடம் தஞ்சம் புகுந்தனர். அம்மன் ஸ்ரீ தாயுமானவரின் சினத்தைத் தணிக்க முழு நிலவாக மாறினாள். அன்னையின் குளிர்ந்த பார்வையால் இறைவன் அமைதிகொள்ள, நெருப்பு மழை நின்றது. உஷ்ணம் தாங்கமாட்டாமல் கர்ப்பிணியாக இருந்த ராணி புவனமாதேவி ஆற்றில் குதிக்க, ஒரு அந்தணரால் அவள் காப்பாற்றப்பட்டு சுகப்பிரசவமும் ஆனது. தன்னைக் காப்பாற்றியது ஸ்ரீ வெக்காளி அம்மனே என்று மனதார நம்பி ராணி ஸ்ரீ வெக்காளி அம்மனின் பக்தையானாள்.

தங்களைக் காத்த ஸ்ரீ வெக்காளியம்மனை உறையூர் மக்கள் மனமார துதித்து வணங்கினார்கள். மக்கள் எல்லோரும் வீடு வாசல்களை இழந்து வெட்டவெளியில் நின்றதால், அம்மனும் அவர்களைப் போலவே வெட்டவெளியில் வானமே கூரையாக குடிகொண்டு நிற்கிறாள். பொதுவாக, வெட்டவெளியிலுள்ள அம்மன் கோயில்களில் அம்மன் இடது காலை மடித்து அமர்ந்து தரிசனம் தருவாள். இங்கே வலது காலை மடித்து வைத்து இடது காலை ஒரு அசுரன் மேல் வைத்த கோலத்தில் அம்மன் தரிசனம் தருகிறாள். இந்தக் கோயிலில் தல விருட்சமோ, தீர்த்தமோ இல்லை.

இதையும் படியுங்கள்:
இந்த உணவுகளை ஒருபோதும் உங்க குழந்தைகளுக்குக் கொடுத்துடாதீங்க! 
Uraiyur Vekkaliyamman

அம்மன் வெட்டவெளியில் இருப்பதைப் பொறுக்க மாட்டாமல் பக்தர்கள் பல முறை மேற்கூரை அமைக்க முயன்றனர். ஆனால், அம்மனின் சக்தி அதை நடக்க விடாமல் தடுத்து எரித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கோயிலின் மற்றும் ஒரு விசேஷமாக, இங்கே பக்தர்கள் தங்கள் குறைகளை, கோரிக்கைகளை ஒரு கடிதமாக எழுதி அம்மனிடம் சமர்ப்பிக்கின்றனர். அவை நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் நிறைவேறுவதாக நம்பிக்கை நிலவுகிறது.

இக்கோயிலில் விசுவநாதர், விசாலாட்சியம்மன், காத்தவராயன், பெரியண்ணன் ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளது. நவக்கிரக சன்னிதியும் உள்ளது. இக்கோயிலில் சித்திரை மாதம் ஐந்து நாட்கள் விழா, பங்குனியில் பூச்சொரிதல் விழா, வைகாசி கடைசி வெள்ளியில் மாம்பழ அபிஷேகம், புரட்டாசியில் நவராத்திரி, மற்றும் தை, ஆடி மாதங்களில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் சிறப்பு நாட்களாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com