துன்பத்தைத் துடைக்கும் வழி!

துன்பத்தைத் துடைக்கும் வழி!
Published on

'துன்பத்துக்குக் காரணம் அறியாமை; இன்பத்துக்குக் காரணம் அறிவு. அதனால் ஞானிகள் துன்புறுவதில்லை. 'ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்' என்று நறுந்தொகை நவிழ்கின்றது. எனவே, வாழ்வில் நமக்கு ஏற்படும் துன்பத்தைத் துடைக்க வேண்டுமானால் ஞானத்தைப் பெற வேண்டும். ஞானத்தைப் பெறுவதற்கு மூன்று வழிகள் உண்டு. ஒன்று ஞானிகளோடு தொடர்பு கொள்வது, இரண்டாவது ஞான நூல்களை ஓதுதல், மூன்றாவது புண்ணிய நதிகளில் நீராடி, புண்ணிய தலங்களை தரிசித்தல்.

இந்த முறையில் தல யாத்திரை ஒருவருக்கு ஞானத்தைத் தருகின்றது. தல யாத்திரை புரியும்போது பல்வேறு மனிதர்களுடன் பழகும் வாய்ப்புக் கிட்டுவதால் உலக அனுபவமும் கிடைக்கின்றது. அதோடு, பசி, தாகத்தைப் பொறுத்துக் கொள்கின்ற சகிப்புத்தன்மை ஏற்படுகின்றது. பெரும் தனவான்கள் வீட்டில் இருப்பவர்கள் நேரம் தவறாமல் உண்டு உறங்குவர். அவர்களுக்குப் பசி, தாகம் இன்னதென்றே தெரிய வழி இல்லை. ஆனால், புனித யாத்திரையில் கையில் பணம் இருக்கும், பையில் பண்டம் இருக்கும். ஆனால், பசியாற்றிக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். அப்போதுதான் பசியின் அருமையை ஒருவரால் அறிய முடிகின்றது.

ஒருவர் தமது பசியின் துயரை அறிந்தால், மற்ற வறியவர் ஒருவரின் பசியை அகற்றும் கருணை அவருக்குத் தன்னால் பிறக்கின்றது. மேலும், புனித யாத்திரையில் பல மொழிகளை உணர்ந்து அறியும் இன்றியமையாத ஒரு நிலைமையும் அவருக்குக் கிடைக்கின்றது. இவை தவிர, பல வகையான புதிய புதிய தெய்வங்களையும், காட்சிகளையும், மனிதர்களையும் காணக் கிடைக்கும் வாய்ப்பும் அமைகிறது" என்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com