விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் மும்மரமாக நடந்து வருகின்றன.
வீட்டில் வைத்து வணங்குவதற்கான சிறிய சிலைகள் தயாராவதுபோல் வீதிகளில் வைத்து வணங்க பெரிய சிலைகளும் தயாராகி வருகின்றன.
எலி, நந்தி, டிராகன், மான், மயில், குதிரை போன்ற வாகனங்களில் பிள்ளையார் அமர்ந்திருப்பதுபோல் பல வடிவங்களில் பிள்ளையார் சிலைகள் தயாராகி வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் சுண்டக்காமுத்தூர், செல்வபுரம், தெலுங்குபாளையம் போன்ற இடங்களில் விநாயகர் சிலைகள் உருவாகி வருகின்றன.
புதுச்சேரியில் கூனிமுக்கு கிராமத்தில் நான்கு தலைமுறைகளாக விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் உள்ள பல குடும்பங்கள் பாரம்பரியமாக விநாயகர் சிலைகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மரவள்ளிக் கிழங்கு மாவு, ஓடக்கல் மாவு, பேப்பர் கூழ், தேங்காய் நார், மூங்கில் குச்சிகள் போன்ற பொருட்களைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
ஏர் கலப்பையுடன் இரண்டு மாடுகளைக் கொண்டு உழவுப் பணி செய்யும் விவசாயி வடிவம், சிவன் சிலையை கையில் உயர்த்திப் பிடித்து இருக்கும் விநாயகர் உருவம், குதிரை வாகனத்தில் மயில் வாகனத்தில் அமர்ந்திருக்கும் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிக்கப்படுகின்றன.
இந்த ஆண்டின் புதிய வரவாக குபேரன் லட்சுமியுடன் நடுப்பகுதியில் விநாயகர் வீற்றிருப்பதுபோல் குபேர லட்சுமி விநாயகர் சிலை, சிங்கங்கள் பறப்பதுபோல விநாயகருடன் கூடிய சிலை, ஆஞ்சநேய விநாயகர், சிவன் விநாயகர், வீரசிவாஜி உருவில் வாள் ஏந்தி நிற்கும் விநாயகர் சிலைகள் என்று புதிய வடிவில் விநாயகர் சிலைகள் வர காத்திருக்கின்றன.
மூலப் பொருட்களின் விலை உயர்வால் தயாரிப்பு செலவும் உயர்ந்துள்ளதால் இந்த வருடம் விநாயகர் சிலைகள் கூடுதல் விலையில் விற்கப்படும் என்று கூறப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் தயாரிக்கப்படும் இந்த சிலைகள் விற்பனைக்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
காவல்துறை அறிவிப்பு:
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி சிலைகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி ரசாயனக் கலவை இல்லாத சிலைகளாகவும், மேடையுடன் சேர்த்து சிலைகள் 10 அடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
மத எதிர்ப்பை தூண்டும் வகையில், பிற மதத்தினரின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் முழக்கங்கள் எழுப்புவதை அனுமதிக்கக் கூடாது என்று காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனங்களில் சிலைகளை எடுத்துச் செல்லக்கூடாது. மினி லாரி மற்றும் டிராக்டர்களில் மட்டுமே சிலைகளைக் கொண்டு செல்ல வேண்டும்.
சிலைகள் வைக்கும் இடங்களிலும், ஊர்வலம் செல்லும் இடங்களிலும், கரைக்கும் இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. ஒலிபெருக்கி வைப்பதற்கு காவல் ஆய்வாளரிடம் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.