பிரார்த்தனை என்பது என்ன? அதன் பலன்கள் என்ன?
பிரார்த்தனை ஏன், எப்படி செய்ய வேண்டும்?

பிரார்த்தனை என்பது என்ன? அதன் பலன்கள் என்ன? பிரார்த்தனை ஏன், எப்படி செய்ய வேண்டும்?

மாதா அமிர்தானந்தமயி விளக்கம்:

மைதியின் ஆழத்தில்தான் நம்மால் இறைவனின் குரலைக் கேட்க முடியும்’ என்கிறார் அன்பின் பிறப்பிடமாம் அமிர்தபுரி மாதா அமிர்தானந்தமயி. பிரார்த்தனை என்பது குறித்து மாதாஜி மக்களுக்கு எடுத்துரைப்பது என்ன? மங்கையர் மலர் சார்பாக நாம் கேட்டதும், மாதாவின் வழிகாட்டலும் இதோ...

Q

இறைவன் யார்?

A

‘கருணையே வடிவானவர் இறைவன். அவர் நமது இதயத்தின் கதவுகளின் அருகே காத்துக் கொண்டிருக்கிறார். அழைப்பை எதிர்பார்த்திராத விருந்தாளி போல அவர் எங்கும் இருக்கிறார். நீங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் நாத்திகராக இருந்தாலும் அழையா விருந்தாளியாக அவர் அருகே இருந்துகொண்டே இருக்கிறார். எல்லா வடிவங்களிலும் அனைத்திலும் இறைவன் மறைந்திருக்கிறார். எனினும் நீங்கள் அழைத்தாலன்றி அவரை நீங்கள் உணர முடியாது. அந்த அழைப்பு என்பதுதான் பிரார்த்தனை. பிரார்த்தனை மற்றும் தியானத்தின் மூலம்தான் அவர் அருளை நீங்கள் பெற முடியும். 

உங்கள் மனதை இறைவனிடம் செலுத்துங்கள். அவரிடம் தஞ்சம் அடையுங்கள். வாழ்வில் எந்தக் குறையும் நேராது. உங்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர் உங்களுக்கு அளிப்பார். உங்கள் பிரச்னைகள் ஏதோ ஒரு வழியில் தீரும். அமைதி பெறுவீர்கள். இறைவனைப் பிரார்த்தித்து அவரைத் தியானம் செய்பவர்களுக்கு அவர்களுக்குத் தேவைப்படும் எதுவும் கிடைக்காமல் போகாது. அதுதான் இறைவனின் எண்ணம். இதை அம்மாவே அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன். மற்ற எதைச் செய்யாவிட்டாலும் லலிதா சகஸ்ரநாமத்தை தினமும் அன்புடனும் பக்தியுடனும் உச்சரியுங்கள். வாழ்க்கையில் எந்தக் குறையும் இருக்காது.

Q

உண்மையான பிரார்த்தனை என்பது என்ன?

A

ண்மையான பிரார்த்தனையில் ஆலோசனை, கோரிக்கை, கட்டளை என்று எதுவும் இருக்காது. ஓர் உண்மையான பக்தன் எளிமையாக இதைத்தான் சொல்வார். ‘கடவுளே, எனக்கு எது நன்மை பயக்கும் என்பது கூட எனக்குத் தெரியாது. நான் ஏதும் அற்றவன். நீ அனைத்தும் அறிந்தவன். நீ எதைச் செய்தாலும் அது தலைசிறந்ததாகத்தான் இருக்கும் என்பதை நான் அறிவேன். எனவே உனக்கு உசிதம் என்று படுவதை நீ செய்’.

உண்மையான பிரார்த்தனையின்போது நீங்கள் தலைகுனிந்து தஞ்சமடைந்து ‘என்னிடம் எதுவுமில்லை’ என்ற ஆதரவில்லாத நினைப்போடு இருக்க வேண்டும்.

இறைவனை நினைக்க வேண்டும் என்றால் நீங்கள் சிலவற்றை மறக்க வேண்டும். இறைவனிடம் முழுமையாக சிந்தனையைச் செலுத்த வேண்டுமென்றால் அந்தத் தருணத்தை மட்டுமே மனதில் கொண்டு வரவேண்டும். கடந்த காலம், வருங்காலம் ஆகியவற்றை அப்போது மறந்து விட வேண்டும். அதுதான் உண்மையான பிரார்த்தனை.

Q

எப்படிப் பிரார்த்தனை செய்வது? பிரார்த்தனைக்கான உகந்த நேரம் எது?

A

மைகளை மூடிக்கொண்டு நீங்கள் உள்ள அறை முழுவதும் உங்கள் விருப்பத்துக்குகந்த இறைவடிவம் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ள வேண்டும். ‘கடவுளே நீ என்னைக் காணவில்லையா? உன் மடியில் என்னை இருத்திக்கொள். நான் உன் குழந்தை. எனக்கு வேறு யாரும் இல்லை. உன்னிடம் அபயம் கேட்கிறேன். என்னை விட்டுச் செல்லாமல் என் இதயத்திலேயே தொடர்ந்து வசிப்பாயாக’ என இறைஞ்சுங்கள்.

உங்கள் மனதுக்குள் இறைவனை உணருங்கள். அவரது அளப்பரிய கருணையை அறியுங்கள். மன முருகிப் பிரார்த்தனை செய்யுங்கள். ‘இறைவா, நீயே என்னைப் படைத்தவன். என்னைக் காப்பவன். நான் இறுதியாக அடைய வேண்டிய இடம் உன்னிடம்தான். உன் அன்பால் என்னை வழி நடத்து. என் மனம் முழுவதும் உன்னை நிரப்பு. பெரும் அன்புக்குரிய இறைவா, உன்னை எப்படி வழிபடுவது என்பது எனக்குத் தெரியாது. உன்னை மகிழ்விப்பது எப்படி என்று எனக்குத் தெரியாது.
உன்னைச் சரியாகத் தியானிப்பதும் எனக்குத் தெரியாது. நான் ஆகமங்களைப் படித்ததில்லை. உன் பேரருளை முழுமையாக அறிந்ததில்லை. கருணை நிறைந்தவரே, எனக்குச் சரியான பாதையைக் காட்டுங்கள். அப்போதுதான் என்னுடைய உண்மையான இருப்பிடமான உங்களை நான் அடையமுடியும்’. இரவுதான் பிரார்த்தனைக்கு ஏற்ற நேரம். இயற்கை அமைதி காக்கிறது. யாராலும் தொந்தரவு இருக்காது.

Q

இறைவனிடம் என்ன வேண்டலாம்? என்ன வேண்டக்கூடாது?

A

ரு உண்மையான பக்தன் இறைவன் தனக்குள் இருக்கிறான் என்பதை அறிய வேண்டும். இறைவனைத் தனது முழுப் பாதுகாப்பாளனாகவும் வழி காட்டியாகவும் ஏற்க வேண்டும். அப்படிப்பட்ட நேர்மையான மனம் திறந்த பிரார்த்தனையின்போது ஒரு பக்தன், தனது பயனில்லாத நிலையையும் ‘தான்’ என்ற எண்ணத்தையும், அதனால் தன் மனதில் ஏற்றிய சுமையையும் வாய்விட்டு ஒத்துக்கொள்ள வேண்டும். அந்தச் சுமையை நீக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்று இறைவனிடம் மனம் விட்டு வேண்ட வேண்டும். இத்தகைய பிரார்த்தனைதான் உண்மையான தியானம்.

உங்கள் மனதில் தோன்றிய அற்ப ஆசைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டாம். இதன் காரணமாக உங்கள் கோபம், பேராசை, பொறாமை, ஏமாற்றம் மற்றும் பல எதிர்மறைத் தன்மைகளை நீங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறீர்கள். ஒவ்வொரு ஆசையும் எதிர்மறை உணர்வுகளை வெளிக்கொண்டு வருகிறது. ஆசைகள் தீர்க்கப்படவில்லை என்றால் கோபம் வருகிறது. இருப்பதைக் கொண்டு திருப்தி அடையும் மனம் வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.

இறை​வன் மகிழ்ச்சியிலும் இருக்கிறார் சோகத்திலும் இருக்கிறார்.

இன்பம், துன்பம் ஆகிய இரு காலகட்டங்களிலும் இறைவனைப் பிரார்த்தித்தால் நீங்கள் எந்த சோகத்தையும் சந்திக்காமல் இருப்பீர்கள். அப்படியே சோகமான அனுபவம் உங்களுக்கு நேர்ந்தாலும் அது உங்களுக்கு சோகத்தைத் தராது.

Q

கூட்டுப் பிரார்த்தனையின் சக்தி என்ன?

A

கூட்டுப் பிரார்த்தனை மிகவும் சக்தி வாய்ந்தது. அதனால் எதையும் சாதிக்க முடியும். மனித மனங்கள் இணைந்து செயல்படுவதை ஏனோ நிறுத்திவிட்டன. தன்னலமற்ற நடத்தையும் பிரார்த்தனையும் தியானமும் மந்திரங்களும்தான் இந்த இழந்த ஒற்றுமையை மீட்டுத்தரும்.

ஒருவர் மந்திரங்களைக் கூற பிறர் அடுத்து அதைக் கூற வேண்டும். மந்திரங்கள் மிகவும் தெளிவாகவும் பக்தியுடனும் உச்சரிக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட கூட்டுப் பிரார்த்தனை கூடக் கூட, உலகமே நலம் உறும். லோகத்துக்கு நல்லது நடக்கும்.

தொகுப்பு: GSS

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com