உயிரின் விலை என்ன?

What is the price of life?
What is the price of life?

சியவனர் என்கிற பெயரில் ஒரு மாமுனிவர் இருந்தார். இவர் பிருகு முனிவரின் மகனாவார். அவர் அடிக்கடி தியானத்தில் மூழ்கியிருக்கும்பொழுது சமாதி நிலைக்கு சென்று விடுவார். பெரும் தபஸ்வியான அவர், நீருக்கடியில் பல காலம் இருந்து மூச்சை அடக்கி தியானத்தில் ஆழ்ந்து இருக்க வேண்டும் என்று நிச்சயத்துக் கொண்டார். அதை செயல்படுத்தும் வகையில், ஒருமுறை 12 ஆண்டுகள் கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் ஒரு இடத்தில் நீருக்கடியிலேயே இருந்து தியானத்தில் மூழ்கி சமாதி நிலையில் இருந்தார். எந்த ஒரு ஜீவனுக்குமே மனதால் கூட தீங்கு இழைக்காமல், அடிக்கடி தண்ணீரின் மேல் பரப்பிலோ, தண்ணீருக்கு கீழோ தியானம் செய்யும் அந்த மாமுனிவரை நீர்வாழ் உயிரினங்களும் நன்கு அறிந்திருந்தன. அதனால் நீருக்கடியில் இருந்த அவரை கடல்வாழ் பிராணிகள் எதுவுமே துன்புறுத்தவில்லை. அவருடைய தியானத்திற்கு எந்தவித இடையூறும் செய்யாமல் இருந்தன.

ஒரு நாள் முனிவர் நீருக்கடியில் சமாதி நிலையில் இருந்த சமயத்தில் சில மீனவர்கள் அந்த இடத்தில் மீன் பிடிக்க வந்தார்கள். அவர்கள் ஒரு பெரிய வலையை கடலுக்குள் தூக்கிப் போட்டார்கள். அவர்கள் எண்ணத்தில் நிறைய மீன்கள் அந்த இடத்தில் இருக்கும் என்கிற நம்பிக்கையில் அவ்வாறு செய்தார்கள். அவர்கள் எண்ணியபடி அந்த வலையில் நிறைய மீன்கள் சிக்கின. மீன்கள் மட்டுமல்ல; முனிவரும் அந்த வலையில் சிக்கினார். மீனவர்கள் இழுத்து இழுத்து பார்த்தபொழுது மிகவும் கனமாக இருந்ததால் பெரிய அளவில் ஒரு கடல் பிராணி ஏதோ சிக்கி இருக்கிறது என்கிற எண்ணத்தில் பலரும் சிரமப்பட்டு அந்த வலையை இழுத்து நீர் நிலையின் மேல் பரப்பிற்கு கொண்டு வந்தார்கள்.

விரித்த வலைக்குள் மீன்களுடன் முனிவர் இருந்ததை மீனவர்கள் பார்த்தார்கள். ஒரு தபஸ்வியை வலைக்குள் சிக்க வைத்து விட்டோமே என்று மீனவர்கள் திகைத்து நின்றார்கள். அவரிடம் எல்லோரும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள். முனிவர், தான் ஆழ்ந்த தியான நிலையில் இருந்ததால் விரித்த வலைக்குள் மாட்டிக் கொண்டதாகத் தெரிவித்தார். அப்பொழுது அவர் பலவகைப்பட்ட மீன்கள் வலையினுள் துடிதுடித்து இறந்து கொண்டிருந்ததைக் கண்டார்.

துடிதுடித்து இறந்த மீன்களைக் கண்டதும் அவர் மனம் கருணையினால் மிகவும் வருத்தப்பட்டது. அவர் மீனவர்களிடம், "இந்த மீன்களுடன் நான் எத்தனை நாட்கள் சேர்ந்து இருந்திருக்கிறேன் தெரியுமா? இந்த மீன்கள் இறந்து விட்டதால் இவற்றை விட்டு பிரிய எனக்கு மனம் இல்லை. நானும் இந்த மீன்கள் இறந்தது போல் இறந்து விடுகிறேன்" என்று கூறினார். சியவனரின் வார்த்தைகளைக் கேட்ட மீனவர்களுக்கு மிகவும் பயமாகப் போய்விட்டது.  ஒரு பெரிய தபஸ்வி உயிரை இழக்க காரணமாகி விடுவோமோ என்கிற பயம் அவர்களுக்குள் எழுந்தது. உடனே அவர்கள் அரசனான நகுஷனிடம் ஓடினார்கள். விஷயத்தைக் கேட்ட அரசன், ஒரு புரோகிதருடன் மீனவர்கள் சூழ அவ்விடம் வந்து சேர்ந்தான்.

முனிவருக்கு தக்க மரியாதைகள் செய்த பின், அவரைப் பணிந்தான் மன்னன். பிறகு, "முனி சிரேஷ்டரே, நீங்கள் உயிர் துறப்பதை நாங்கள் விரும்பவில்லை. நீங்கள் ஆணையிடுங்கள். நான் என்ன என்ன செய்ய வேண்டும்?" என்று வினயத்துடன் கேட்டு நின்றான்.

அதற்கு முனிவர், "மன்னா, இந்த மீன்கள் எல்லாம் இறந்து விட்டன. என்னுடன் இருந்த இந்த மீன்கள் உயிர் துறந்ததற்குப் பிறகு எனக்கு வாழ விருப்பமில்லை. நான் வாழவேண்டுமென்றால் எனக்காக ஒரு விலையை நிர்ணயித்துக்கொண்டு அந்தத் தொகையை கொடுத்து விடுங்கள். வேறு எதுவும் எனக்கு சொல்வதற்கு இல்லை" என்று கூறினார்.

மன்னன் உடன் வந்த புரோகிதரிடம், "ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து விடுங்கள்" என்று கூறினார்.

முனிவர் உடனே, "உயிரின் விலை ஆயிரம் பொற்காசுகள்தானா? அப்பொழுது என்னுடைய விலை ஆயிரம் பொற்காசுகள்தான் தாங்குமா" என்று கேட்டார்.

மன்னன் உடனே, "சரி இலட்சம் பொற்காசுகளை கொடுத்து விடுங்கள்" என்று கூறினான்.

இதையும் படியுங்கள்:
நெய்யில் ஊறவைத்த பேரீச்சம் பழம் சாப்பிடுவதில் இத்தனை நன்மைகளா?
What is the price of life?

அதற்கும் முனிவர் இசைந்து கொடுக்கவில்லை. "லட்சம் பொற்காசுகளா? என்ன இது ஒன்றுமே விவரம் புரியாமல் பேசுகிறீர்கள். உயிரின் விலை இலட்சம் பொற்காசுகள் தானா?"  என்று கேட்டார். மன்னனுக்கு எதுவுமே புரியவில்லை. பாதி ராஜ்ஜியத்தைத் தருகிறேன் என்று சொன்னபோதும் முனிவர் சம்மதிக்கவில்லை. பிறகு ராஜ்ஜியம் முழுவதுமே தந்து விடுகிறேன் என்று மன்னன் கூறியபொழுதும் முனிவர் அசைந்து கொடுக்கவில்லை.

"பின் நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேட்டான்.

"இதை நான் சொன்னால் உங்களுக்கு புரியாது. இந்நாட்டில் தேர்ந்த அந்தணர்கள் வேறு யாராவது இருந்தால் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் தகுந்த விலையைக் கூறுவார்கள்" என்று கூறினார்.

மன்னனுக்கு மிகவும் வருத்தம் உண்டானது. அரசு புரோகிதர்களிடமும், அந்தணர்களிடமும் கலந்து ஆலோசித்தான். அப்பொழுது வனத்தில் ஒரு அந்தணர், காய் கனிகளை மட்டுமே உண்டு வாழ்ந்து வருவதாக அறிந்து, அந்த முனிவரை மன்னன் அணுகினான்.

"முனிவரே நான் மிகப்பெரிய சிக்கலில் இருக்கிறேன். ஒரு மகாதபஸ்வியின் உயிரின் விலையை நிர்ணயிக்க முடியாமல் திண்டாடுகிறேன். அவருக்கு கொடுத்த வாக்கை நான் காப்பாற்றாவிட்டால் எனக்கு மிகப் பெரிய பழி நேர்ந்து விடும். என் குலமும், என் நாடும் என்னால் அவதியுறும். அதற்காக எனக்கு அந்த முனிவரின் உயிரின் விலைக்கு ஈடாக எதைத் தர முடியும் என்பதைக் கூறுங்கள்" என்று கேட்டு, நடந்த விபரங்களைக் கூறினான்.

"மன்னா கவலைப்படாதீர்கள். அந்தணரும் பசுவும் ஒரே இனம்தான். அந்தணர்கள் வேதங்களின் உருவம் என்றால், பசுக்கள், யாகங்களிலும் யக்ஞங்களிலும் அளிக்கப்படும் ஹவிஸ்ஸின் வடிவம் ஆகும். ஆகையால், அந்த தபஸ்வியின் உயிருக்கு ஈடாக நீங்கள் ஒரு பசுவை தானம் செய்யுங்கள். அவர் திருப்தி அடைந்து விடுவார்" என்றார்.

மன்னன் மிகுந்த சந்தோஷம் அடைந்தான். தபஸ்வியான அந்த முனிவரிடம் ஓடோடி வந்தான். " ஐயனே, நீங்கள் கூறியபடி நான் தேர்ந்த அந்தணர் ஒருவரிடம் இதைப் பற்றி விளக்கம் கேட்டேன். அவர் பசுவை தானம் செய்தால் உயிரின் விலைக்கு ஈடாக இருக்கும் என்று கூறினார். அதனால் நான் இந்தப் பசுவை தானம் அளிப்பது சரியாக இருக்குமா என்பதை நீங்கள் ஒரு முறை கூறுங்கள்" என்றான்.

இதையும் படியுங்கள்:
நினைவாற்றலை மேம்படுத்த 9 நிரூபிக்கப்பட்ட பயிற்சிகள்!
What is the price of life?

சியவன முனிவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். "மன்னா, இப்பொழுதுதான் ஒரு உயிரின் விலையை சரியாக நிர்ணயம் செய்து கொண்டிருக்கிறீர்கள். பசு என்பது மிகவும் பவித்திரமான பிராணி. நாம் தேவலோகத்தை அடைவதற்கு பசுக்களே படிகளாக இருக்கின்றன என்று ஆகம நூல்கள் கூறுகின்றன. ஆகையால், இந்த பசுவை நீங்கள் தானமாக அளித்தது மிகவும் சரிதான்" என்று கூறினார். மீனவர்களும் அரசனால் கொடுக்கப்பட்ட பசுவை தானமாக ஏற்றுக் கொள்ளும்படி முனிவரிடம் வேண்டினார்கள். அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.

தானத்தை ஏற்றுக்கொண்ட முனிவர், "மீன்களும், நீங்களும் தேவலோகம் செல்வீர்கள்" என்று மீனவர்களை ஆசிர்வதிக்க, அனைவரும் தேவலோகம் சென்றதை நகுஷன் வியந்து பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அங்கு வனத்தில் வாழ்ந்திருந்த முனிவரும் வந்து சேர்ந்தார். நீரில் வாழ்ந்த முனிவரிடமும், வனத்தில் வாழ்ந்த முனிவரிடமும் நகுஷன் ஒரு பிரார்த்தனையை முன்வைத்தான். "நீங்கள் இருவரும் என்றும் எனக்கு பக்தி மாறாமல் இருக்க வேண்டும் என்று நல்லாசி தர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான். அதன்படி அவர்களும் அவன் கேட்ட அருளாசியை வழங்கிவிட்டு தத்தம் இடம் ஏகினார்கள். சியவனரும் மீண்டும் தியானம் செய்ய தமது இருப்பிடம் சென்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com