சண்டிகேஸ்வரர் முன்பு ஏன் கைதட்டக் கூடாது?

சண்டிகேஸ்வரர் முன்பு ஏன் கைதட்டக் கூடாது?

சிவத் தலங்களின் காவல் தெய்வமாகவும் கோயில் கணக்கு அதிகாரியாகவும் விளங்குபவர் சண்டிகேஸ்வரர். இவரை, ‘செவிட்டு சாமி’ என்று சிலர் அழைப்பர். அதனாலேயே இவரை கையை தட்டியும் சொடக்கு போட்டும் வழிபடுவது சிலரது வழக்கம். இது முற்றிலும் தவறான ஒரு செயலாகும். சண்டிகேஸ்வரர் எப்போதும் சிவ தியானத்திலேயே இருப்பதாக ஐதீகம். இதனாலேயே இவர் தனது கண்களை மூடியபடி காட்சி தருவார். இவரை முறையாக வழிபட்டால் ஏழேழு ஜன்மத்துக்கும் வறுமை உண்டாகாது, செல்வச் செழிப்புடன் வாழலாம் என்பது பலரும் அறியாத விஷயமாகும்.

சண்டிகேஸ்வரர் தீவிரமான சிவ பக்தர். இவர் ஒரு முறை சிவபெருமான் மீது கொண்ட பேரன்பினால் மண்ணால் அழகிய சிவலிங்கம் ஒன்றை வடிவமைத்து அதற்கு பூஜை, புனஸ்காரங்கள் செய்து வழிபட்டு வந்தார். சிறு வயதிலேயே இவர் இதுபோல செய்து வந்தது அவருடைய தந்தைக்கு ஆச்சரியமாக இருந்தது. அதோடு, சிவலிங்கத்துக்கு தினமும் நிறையவே பால் ஊற்றி அபிஷேகம் செய்து வந்த சண்டிகேஸ்வரரை அவரது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை.

‘மண்ணுக்கு பாலை ஊற்றி இப்படி வீணடிக்கிறானே’ என்று தந்தை அங்கலாயித்து, ஒரு முறை சண்டிகேஸ்வரர் செய்த மண் லிங்கத்தை எட்டி உதைத்தார். இதனால் கோபம் கொண்ட சண்டிகேஸ்வரர் ஒரு குச்சியை எடுத்து அவருடைய தந்தையின் மீது வீசினார். அந்தக் குச்சி திடீரென கோடாரியாக மாறி அவனுடைய தந்தையின் கால்களை வெட்டி வீசியது.

சிவபெருமான் மீது கொண்ட மாசற்ற பக்தி, அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. சண்டிகேஸ்வரரின் பக்தியில் மகிழ்ந்த ஈசன், தமது கோயில்கள் அனைத்திலும் சண்டிகேஸ்வரர் வழிபாடு இருக்க வேண்டும் என்றும், இனி தமது உணவு மற்றும் உடைக்கு அவரே பொறுப்பு என்றும் வரம் கொடுத்தார். அன்று முதல் சண்டிகேஸ்வரர் வழிபாட்டில் புது வஸ்திரத்தை வைத்து வழிபட வேண்டும் என்ற வழக்கம் வந்தது. ஆனால் நாளடைவில் இது, வஸ்திரத்தில் இருந்து ஒரு நூலை மட்டும் பிரித்து அவருடைய மேனியின் மீது வைத்து விட்டுச் செல்வது என்று மாறி விட்டது.

வெறும் நூலைக் கொண்டு சண்டிகேஸ்வரரை வழிபடுவது முறையல்ல! வஸ்திரம் வைத்து வழிபட்டால், வழிபடுபவரின் தலைமுறையினருக்கு வஸ்திரத்துக்கு பஞ்சமே ஏற்படாது. நல்ல ஆடைகளும், வறுமை இல்லா வாழ்வும் அமையும். அது மட்டுமல்லாமல், சுப காரியத் தடைகள் விலகவும், புது வஸ்திரம் வைத்து வழிபட வேண்டும். மேலும், சண்டிகேஸ்வரரை வழிபடும்பொழுது கையைத் தட்டி வழிபடக் கூடாது. மாறாக, இவர் சிவன் கோயில்களின் காவல் அதிகாரி என்பதால் கையை மேல் நோக்கிக் காண்பித்து, ‘நான் எதுவும் இங்கிருந்து எடுத்துச் செல்லவில்லை’ என்பதை உறுதிப்படுத்த இரண்டு கைகளையும் உரசிக் காண்பிக்கலாம்.

இப்படிச் செய்வது, சிவன் கோயிலில் இருந்து நான் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை சண்டிகேஸ்வரிடம் கூறிச் செல்லவே ஆகும். ஆனால், நாளடைவில் சண்டிகேஸ்வரர் வழிபாடு என்பது, கையை தட்டி வழிபடுவதாக மாறிவிட்டது. எனவே, இனி சண்டிகேஸ்வரரை முறையாக வழிபட்டு, ஏழேழு தலைமுறைக்கும் வறுமை இல்லாத வாழ்வைப் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com