கணபதிக்கு ஏன் சிதறு தேங்காயும் தோப்புக்கரணமும்?

கணபதிக்கு ஏன் சிதறு தேங்காயும் தோப்புக்கரணமும்?
Published on

தியானம் செய்பவர்கள் தலையில் குட்டிக்கொண்டு விநாயகரை வழிபட்டால் மன ஒருமைப்பாடு ஏற்படும் என்பது நம்பிக்கை. விநாயகரை வணங்கும் முன்பு வலது கையால் இடது பக்க நெற்றிப் பொட்டிலும், இடது கையால் வலது பக்க நெற்றிப் பொட்டிலும் மூன்று முறை குட்டிக் கொண்ட பிறகு, வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்து உட்கார்ந்து எழுந்து தோப்புக் கரணம் போட்டு வேண்டிக்கொள்ள வேண்டும். இப்படி உட்கார்ந்து, எழுவதால் நரம்புகள் தூண்டப்பட்டு, ரத்த ஓட்டம் மூளைக்குச் செல்வதாக அறிவியல் காரணமும் உள்ளது. மேலும், தோப்புக்கரணம் போடுவதாலும், நெற்றியில்குட்டிக் கொள்வதாலும் மன எழுச்சியும், சுறுசுறுப்பும் உண்டாகிறது. இதற்கு ஒரு புராணக்கதை உள்ளது.

கத்திய மாமுனிவர் கொண்டு வந்த கமண்டலத்தை காகம் வடிவெடுத்து விநாயகர் கவிழ்த்தார். பின்பு, ஒரு அந்தணச் சிறுவனின் வடிவத்தில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர், விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து, ‘உலக நன்மைக்காக காவிரி நதியை உருவாக்க அவ்வாறு செய்ததாக’ கூறினார். அகத்திய முனிவர் தனது தவறுக்காக வருந்தி, தன் தலையிலேயே குட்டிக்கொண்டார். அன்று முதல் விநாயகருக்கு தலையில் குட்டிக்கொண்டு வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.

அதேபோல், தோப்புக்கரணம் போடுவதற்கு இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது. கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப்படுத்தி தனக்கு தோப்புக்கரணம் போட வைத்தான். விநாயகர் அவனை அழித்து தேவர்களை பாதுகாத்தார். அசுரன் முன்பு போட்ட தோப்புக்கரணத்தை அதன் பின் விநாயகர் முன்பு பக்தியுடன் தேவர்கள் போட்டனர். அன்று முதல் தோப்புக்கரணம் போடும் பழக்கம் வந்தது.

கோற்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த விநாயகர், காசிப முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த சமயம், ஒரு யாகத்துக்குப் புறப்பட்டபோது ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான். விநாயகர் யாகத்துக்காகக் கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது வீசி, அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார்.

மேலும், மூஷிக வாகனனுக்கு 1, 3, 5, 7, 9, 18 என்ற கணக்கில் தேங்காயை சிதறு காயாக உடைத்து வழிபடும் பழக்கமும் நிலவி வருகிறது. எந்தச் செயலுக்குக் கிளம்பினாலும், தடைகள் ஏற்பட்டால் அதை நீக்கி வெற்றி பெற விநாயகரை வணங்கிச் செல்வது வழக்கம். அதன் மூலம் சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com