

கர்நாடகாவின் உடுப்பியில் உள்ளது புகழ்பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் கோவில். இங்கு கண்ணன் பாலகிருஷ்ண வடிவத்தில், ஒன்பது துளைகள் கொண்ட 'கனகதண்டி' (கனக கிண்டி) எனப்படும் ஜன்னல் வழியாக அருள்பாலிக்கிறார்; 13-ஆம் நூற்றாண்டில் மத்வாச்சாரியாரால் நிறுவப்பட்ட இத்தலம், 'தென்னிந்தியாவின் மதுரா' என அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் உள்ள கிருஷ்ணரின் சிலை கடற்கரை கப்பலில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அதாவது, விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்டு துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து, மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலகிருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணரின் கோவிலில் உள்ளது. மேலும் இங்கு 'அன்னா பிரம்மா' எனப்படும் மதிய உணவு, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
சந்திரக் கடவுள் தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலம் என்ற பல்வேறு சிறப்புகளை தாங்கி நிற்கிறது இந்த கோவில்.
கிருஷ்ணர் கோவிலில் ஜன்னல் வழியாகத்தான் மக்கள் கிருஷ்ணரை சந்தித்து வருகிறார்கள். இதுபற்றி கோவில் நிர்வாகிகள் கூறுகையில், ‘கனகதாசர், கிருஷ்ணரின் தீவிர பக்தர் ஆவார். தினமும் அவர் கிருஷ்ணர் கோவிலுக்கு வந்து பின்புறம் நின்று பூஜித்து செல்வார். அப்போது கிருஷ்ணர் கிழக்கு நோக்கி இருந்தார். கனகதாசரின் தீவிர பக்தியால், அவருக்கு தரிசனம் கொடுப்பதற்காக கிருஷ்ணர் மேற்கு நோக்கி திரும்பினார். அப்போது கோவிலின் பின்புற சுவரில் ஜன்னல் அமைத்து அதன் வழியாக கனகதாசருக்கு கிருஷ்ணர் காட்சி அளித்தார்.
ஜன்னலின் வழியாக கிருஷ்ணரை தரிசித்த கனகதாசர், புண்ணியம் பெற்றார். இங்குள்ள ஒரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், பக்தர்கள் 'நவக்ரஹ கிண்டி' எனப்படும் உள் ஜன்னல் வழியாகவும், 'கனகன கிண்டி' எனப்படும் வெளிப்புற ஜன்னல் வழியாகவும் கிருஷ்ணரை தரிசிக்கிறார்கள் என்று கூறினார்.
அதாவது அந்த ஜன்னல் 9 துவாரங்களை கொண்டிருந்ததால் அதற்கு நவக்கிரக துவாரம் என்று பெயரிடப்பட்டது. இந்த ஜன்னல் முழுவதும் வெள்ளியால் ஆனது. இதில் கிருஷ்ணரின் 24 வகையான உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. கனகதாசருக்கு கிடைத்த புண்ணியம் நாட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால், தொடர்ந்து கிருஷ்ணர் அந்த ஜன்னல் வழியாகவே காட்சி தருகிறார்.
பக்தர்கள் அனைவரும் கனகதாசர் கிருஷ்ணரை தரிசித்த பலகணி வழியாகவே மூலவரை தரிசனம் செய்யும் வழக்கமும் இந்நிகழ்வுக்குப் பின்னர் ஏற்பட்டது. தற்போது அதுவே நடைமுறையில் உள்ளது.
இந்த கோவிலுக்கு செல்லும் ஆண்கள் வேட்டி அல்லது பேண்ட் அணிந்தும், பெண்கள் புடவை அல்லது சல்வார் மட்டுமே அணிந்து செல்ல வேண்டும். ஷார்ட்ஸ் அனுமதிக்கப்படாது.
கோவில் அதிகாலை 5:30 மணிக்கு நிர்மால்ய விசார்ஜன சேவையுடன் திறக்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து துளசி அர்ச்சனை செய்யப்படுகிறது. இரவு 9.30 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
இந்த கோவில் மங்களூரு விமான நிலையத்திலிருந்து சுமார் 59 கி.மீ தூரத்திலும், உடுப்பி ரெயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ தூரத்திலும் உள்ளது.