நம் பாட்டி காலத்தில் மஞ்சள் கயிற்றில் தாலி அணிந்தார்கள். அடுத்த தலைமுறையான நம் அம்மா காலத்தில் அவரவர் வசதிக்கு ஏற்ப தங்கத்தில் தாலி அணியத் தொடங்கினார்கள். இன்றைய தலைமுறையினர் தாலியின் மகத்துவம் தெரியாமல் அதனை அணிந்து வருகின்றனர். மஞ்சள் கயிற்றில் தாலி அணிவது ஏன்?
தமிழ்நாட்டில் பொதுவாக, பெண்கள் தாலியை மஞ்சள் கயிற்றில் அணிகிறார்கள். மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி. மஞ்சள் பொடியை உணவில் சேர்த்து சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மஞ்சளை சாப்பிட்டால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது போலவே, அதனை தினமும் உடலில் பூசிக்கொண்டால் நம்மையும், நம் உடலையும் சுற்றி எந்த கிருமிகளும் அண்டாமல் பாதுகாக்கும். அதனால்தான் நம் முன்னோர்கள் மஞ்சளை உணவுக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் பயன்படுத்தினர்.
ஒவ்வொரு இடத்தின் தட்ப வெப்ப நிலையை பொறுத்தே அந்தப் பகுதி மக்களின் பழக்க வழக்கங்கள் அமைகின்றன. நம் அம்மாக்கள் அல்லது பாட்டிகள் தாலி கயிற்றில் தினமும் மஞ்சள் அரைத்து பூசுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ‘தினமும் ஏன் தாலியில் மஞ்சளைப் பூசுகிறீர்கள்’ என்று கேட்டால், ‘அது உனக்கு சொன்னால் புரியாது’ என்று கூறிவிடுவார்கள்.
ஆண்களை விட பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. அதனால் பெண்களுக்கு விரைவில் காய்ச்சல், சளி போன்ற நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது என அன்றே நம் பெரியோர்கள் எண்ணி இருந்தனர். அதனாலேயே பெண்கள் முகம், கைகள், கால்கள் போன்ற உடல் உறுப்புகளுக்கு மஞ்சள் தேய்த்து குளிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். அதேசமயம், பெண்கள் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகும் அபாயம் அதிகமாக இருப்பதால், தாலி கயிற்றிலும் தினமும் மஞ்சள் பூசுகின்றனர். இதனால் தாயும், சேயும் நோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பார்கள்.
கயிறு தாலியாக மாறுவதற்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம். ஆனால், மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் என்பதற்கான ஒரே ஒரு காரணம், நம் உடல்நிலையை சீராக பாதுகாக்க வேண்டும் என்பதுதான். எனவே, மஞ்சள் கயிற்றினை அணிகிறோம் என்று இல்லாமல், அதன் அர்த்தம் அறிந்து அணிந்து கொள்ளுங்கள்.