உலகின் மிகப்பெரிய சிவலிங்கம்!

உலகின் மிகப்பெரிய சிவலிங்கம்!

ர்நாடக மாநிலம், கோலார் அருகே கம்மசந்த்ரா கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள 108 அடி உயர சிவலிங்கமே இதுவரை உலகின் மிக உயரமான சிவலிங்கம் என்ற பெருமையை பெற்றிருந்தது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், கேரள எல்லைப் பகுதியான உதயம் செங்கல் மகேஸ்வர சிவபார்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111.2 அடி உயர சிவலிங்கம் அந்தப் பெருமையை தற்போது பெற்றிருக்கிறது.

இந்த சிவலிங்கம் மக்கள் தரிசனத்துக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது. கோயில் மடாதிபதி மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் குத்துவிளக்கேற்றி சிவலிங்கத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பிரம்மாண்ட சிவலிங்கத்தை வழிபட்டனர். இந்த சிவலிங்கம் அமைக்கும் பணி நிறைவடைந்து, அதை பக்தர்கள் சென்று பார்க்கும்போதே ‘இந்தியா புக் ஆப் ரிக்கார்டு, ஆசியா புக் ஆப் ரிக்கார்டு’ ஆகிய புத்தகங்களில் உலகிலேயே உயரமான சிவலிங்கம் என இடம்பெற்று விட்டது.

இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் கூறும்போது, “உலகிலேயே உயரமான 111.2 அடி உயரம் கொண்ட இந்த சிவலிங்கம் உருவாக்கும் பணி கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. இந்த சிவலிங்கம் தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அவகாசம் எடுத்துக் கொண்டோம். சிவலிங்கத்தின் உட்பகுதி எட்டு மாடிகளைக் கொண்டு குகை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாசல் வழியாக பக்தர்கள் சென்று தரிசிக்கலாம். உட்பகுதியின் நடைபாதை ஓரங்களில் சித்தர்கள், சிவனடியார்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 108 சிவலிங்கங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. லிங்கத்தின் உட்பகுதியில் 8வது நிலையில் கயிலாய மலையில் சிவன், பார்வதி பக்தர்களுக்கு அருட்காட்சி தருவது போன்ற சிற்பம் கலையம்சத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தந்த நன்கொடைகள் மூலம் இந்த சிவலிங்கம் அமைக்கப்பட்டது” என்றனர்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com