வருபவர் துயர் தீர்க்கும் யோக நரசிம்மர் ஆஞ்சநேயர்!

வருபவர் துயர் தீர்க்கும் யோக நரசிம்மர் ஆஞ்சநேயர்!
Published on

(சோளிங்கபுரம்)

சோளிங்கர் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஏறக்குறைய 2 கி.மீ. தொலைவில் கொண்டபாளையம் என்ற கிராமத்தில் இரு மலைகள் பிரசித்தி பெற்றவை. பெரிய மலையில் நரிசிம்மர் சன்னிதியும் அமிர்தவல்லி என்ற தாயார் சன்னிதியும் உள்ளன. இங்கு மூலவர் மட்டும்தான். உற்சவர் கீழே சோளிங்கபுரத்தில் கோயிலில் வீற்றிருக்கிறார்.

நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்து சினம் தணியாமல் கோபமாக இருந்தபோது பிரகலாதன் சினம் தணியும்படி, துதித்து வேண்டிய பின் சினம் தணிவதற்கு ஜபம் செய்யும் யோக நிலையில் மலை மீது அமர்ந்தாராம். எனவே இவர் யோக நரசிம்மர் ஆனார்.

மேலும், இவர் அபயஹஸ்தம் அழைத்து வாழ்த்தும்படி உள்ளதால் அழைத்து வாழ்த்தும் நரசிம்மன் எனவும் அழைப்பர். தாயார் அமிர்தமான பலனை அளிப்பவள். வேண்டிய பலனை அளிப்பதால் மகா சக்தி உடையவள். சிரித்த முகம் கொண்டு வீற்றிருக்கிறாள்.

சிறிய மலையில் உள்ள யோக ஆஞ்சநேயருக்கு நரசிம்மன் சங்கு சக்கரங்களை கொடுத்து பலத்தையும் கொடுத்துள்ளாராம். வேறு எங்கும் ஆஞ்சநேயருக்கு சங்கு சக்கரம் கிடையாது. இங்கு அதுதான் விசேஷம்.

ஆஞ்சநேயர் யோக ஆஞ்சநேயர் என்ற திருநாமத்துடன் சங்கு, சக்கரம், ஜபமாலை, ஜபசங்கையுடன் காட்சி தருகிறார். ரங்கநாதர், ராமர் சன்னிதிகளும் உண்டு. அங்கு பாறாங்கல்லிலேயே உருவாகிய சுனை தீர்த்தகுளம் உண்டு. இதனை சக்ர தீர்த்தம் என்று அழைப்பர். இதில் குளித்து கையில் வெற்றிலை பாக்கை வைத்துக்கொண்டு ஆஞ்சநேயர் சன்னிதியைப் பார்த்து சேவித்தபடி படுத்துக்கொண்டு கண் அயர்ந்தால் சொப்பனம் வருமாம். அதன்படி எல்லோருக்கும் நடக்கும் என்பது ஐதீகம்.

மேலும் பெரிய மலை, சிறிய மலையில் ஒரு மண்டலம் 48 நாள், அரை மண்டலம் 24 நாள், கால் மண்டலம் 12 நாள் என மலை ஏறி தினமும் 108 மஞ்சள் எடுத்துக்கொண்டு ஈரத் துணியோடு பிரதட்க்ஷணம் செய்வார்கள். அவரவர்களுக்கு இறைவன் கனவில் தோன்றி பலனை அளிப்பதாக நம்பிக்கை உண்டு. பில்லி, சூன்யம், பிசாசு பிடித்தவர்களுக்கு முக்கியமாக இது மாதிரி மலை ஏறி பிரதட்க்ஷணம் செய்து அவர்கள் குறைகள் நீங்கி நல்லபடி ஆனதும் நிம்மதி அடைந்ததும் ஏராளம்.

மலையில் கொடியேறி ஊருக்குள் சோளிங்கரில் பிரம்ம உற்சவம் நடக்கும். ஆஞ்சநேயர் நல்ல வரப் பிரசாதி,. கார்த்திகை மாதம் விசேஷம். சனி, ஞாயிறு மக்கள் திரளாகச் சென்று நான்கு வாரத்தையும் அந்த இறைவனை தரிசிப்பதற்காகவே எங்கெங்கிருந்தோ வருகிறார்கள். காரணம் யோக நிலையில் இருக்கும் நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் கண் திறந்து பார்க்கிறாராம். அதனால்தான் கார்த்திகை மாதம் விசேஷம். ஆஞ்சநேயர் அருளும் உடனே கிட்டுமாம். எனவே இந்த மாதம் விமர்சையாக கோயில்களில் ஆராதனை, திருமஞ்சனம் நடைபெறும். வாரத்தில் பெரிய மலையில் வெள்ளிக்கிழமை விசேஷம். சின்ன மலையில் ஞாயிறு விசேஷம்.

தக்கான்குளம் என்ற இடத்தில் இறங்கி மூடி செலுத்து பவர்கள் செலுத்தி குளித்துவிட்டு செல்வர். குளத்தின் அருகிலேயே தேவராஜ பெருமாள் சன்னதியும் உண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com