‘நீ வெறும் ராமன் இல்லே; தயாள ராமன்!’

‘நீ வெறும் ராமன் இல்லே; தயாள ராமன்!’
Published on

ரு ஏழைப் பெண்மணி, தனது கருவுற்றிருந்த பெண்ணை அழைத்துக் கொண்டு மகாபெரியவர் தரிசனத்துக்கு வந்திருந்தார். அந்தப் பெண்மணி "சாமி, ரொம்ப நாள் கழிச்சு இவ முழுகாமல் இருக்கா. நல்லபடியா பிரசவிக்கணும். ரொம்பத் தொலைவிலேர்ந்து நடந்தே வர்றோம். சாமி ஆசீர்வாதம் பண்ணணும்” என்றார்.

மகா பெரியவர் தனது கரங்களைத் தூக்கி அந்தப் பெண்ணுக்கு ஆசி வழங்கினார்கள்.

அந்தப் பெண் தொடர்ந்து பேசினார், "நாங்க ரொம்ப ஏழைங்க சாமி. முழுகாமல் இருக்கிற இவளுக்கு, வாய்க்கு ருசியான பதார்த்தங்களை வாங்கிக் கொடுக்கக்கூட முடியலை. சரியா சாப்பாடு போடவும் வசதியில்லை. அடுப்புச் சாம்பலைத் தின்றா" என்றார்.

அந்தச் சமயத்தில், ஸ்டேட் பாங்க் ஊழியர் ரங்கநாதன் ஒரு டப்பா நிறைய கட்டித் தயிர் கொண்டுவந்து மகா பெரியவருக்கு சமர்ப்பித்தார்.

உடனே மகா பெரியவர், "நீயே அந்த டப்பாவை, அந்த அம்மாகிட்டே கொடுத்துடேன்" என்றார். தயிர் டப்பா இடம் மாறியது.

அதேபோல், என்ஜினியர் கோபாலய்யர் தனது பிறந்த நாள் வழக்கப்படி, ஒரு டின் நிறைய இனிப்பு மற்றும் உறைப்பு தின்பண்டங்களை வேத பாடசாலை மாணவர்களுக்காகக் கொண்டு வந்தார். அவரிடம் மகாபெரியவர், "கோபாலா! அந்த டின்னோட, எல்லாத்தையும் அந்தப் பொண்ணுகிட்ட கொடுத்துடு" என்றார். டின் இடம் மாறியது.

அதைத் தொடர்ந்து சென்னை அசோக் நகரிலிருந்து ராமு என்ற பக்தர் வந்தார். அவரிடம் மகா பெரியவர், "அந்தப் புள்ளைத்தாச்சி நடந்தே வந்திருக்கா. திரும்பிப் போறபோதாவது பஸ்ஸிலே போகட்டும். வழிச் செலவுக்கு ஏதாவது கொஞ்சம் கொடு" என்றார்.

ராமுவுக்குப் பரம சந்தோஷம்! பெரியவரே ஆக்ஞை பண்ணுகிறார்கள்! அந்தப் பெண்ணின் தாயாரிடம் சென்று சில ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தார். தாயும் மகளும் மகாபெரியவருக்கு ஆயிரம் நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள்.

அசோக் நகர் ராமுவிடம் மகா பெரியவர், "எவ்வளவு ரூபாய் கொடுத்தே" என்று கேட்டார். பல பேர் எதிரில் அந்தத் தொகையைச் சொல்வதற்கு ராமுவுக்குத் தயக்கமாக இருந்தது. மகா பெரியவர் சொன்னால் லட்சக்கணக்கில் கொண்டு வந்து கொட்டுவதற்குப் பல பெரிய மனிதர்கள் தயாராக இருக்கிறார்கள். நான் எம்மாத்திரம்? ஆனால், மகா பெரியவர் ராமுவிடமிருந்து பதிலைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது. சொல்லாமல் தப்பவும் முடியாது.

"நாலாயிரத்துச் சொச்சம்தான் இருந்தது. அதைக் கொடுத்தேன்” என்றார் ராமு.

அதற்கு மகா பெரியவர், "நான் அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்கச் சொல்லலையே" என்றார்.

அதைக்கேட்ட ராமு மிகவும் பவ்வியமாக, "இப்போவெல்லாம் டெலிவரிக்காக கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போனால்கூட மூணு, நாலு ஆயிரம் செலவுஆயிடறது" என்றார்.

சில நிமிஷங்கள் கழித்து மகா பெரியவர், "நீ வெறும் ராமன் இல்லே. தயாள ராமன்!" என்றார்.

"போதும்! நாலு தலைமுறைக்கு இந்த வார்த்தையே போதும்!" என்று நெஞ்சுருகச் சொன்னார் ராமு என்கிற ராமன்.

மகா பெரியவர், தயாளச் செயல்களைப் பாராட்டுவதில் ரொம்பவும்தான் தாராளம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com