ஆன்மீகத்தையும், ஆரோக்கியத்தையும் அடையும் வழியைக் காட்டியவர்

ஆன்மீகத்தையும், ஆரோக்கியத்தையும் அடையும் வழியைக் காட்டியவர்
Published on

- டி.வி. ராதாகிருஷ்ணன் 

ங்கரர் அவதாரம் செய்த காலம், பல விதங்களில் நாம் வாழும் இந்தக் காலம் போலவே இருந்தது.

மதம், தத்துவம் ஆகிய துறைகளிலும், சமூக நடைமுறையிலும் மக்கள் பிளவுபட்டுக் கிடந்த காலம் அது.

சங்கரர், தாம் எழுதிய பிரம்ம சூத்திரத்தின் பேருரையில் தம் காலத்தில்
இருந்த நாடு முற்றிலும் தாறுமாறாகக் குழம்பிக் கிடந்த நிலையை பின்வருமாறு வருணிக்கிறார்.

"இந்தக் கால மக்களுக்கு கடவுளருடன் நேரில் தொடர்புகொண்டு உரையாடும் ஆற்றல் எவ்வளவு உண்டோ, அந்த அளவுதான் பழைய காலத்து மக்களுக்கும் அந்த ஆற்றல் இருந்திருக்கக் கூடும் என்று சாதிப்பவன். இன்னொன்றையும் கூறக்கூடும். இந்தக் காலத்தில் அரசர் பலருக்கும் மேம்பட்டுச் சக்ரவர்த்தி என்று யாருமே இல்லாததால் பழைய காலத்திலும் அப்படிப்பட்ட பேரரசர்கள் இருந்ததே  இல்லை. வெவ்வேறு வகுப்பினருக்கும்... வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் இருப்பவர்களுக்கும்... உரிய பணிகளும், கடமைகளும் இன்று போலவேதான் அக்காலத்திலும் இருந்தன என்று கூறுவானோ?"

பாரததேசம் சங்கரர் காலத்தில், அரசியல் வகையில் பிளவுபட்டதாகவும், சமூக நடைமுறையில் பேத உணர்வும், உளைச்சல்களும் கொண்டதாகவும் இருந்தது. தமக்குள் பொதுவான அக்கறையோ... நலம் பெறும் நோக்கமோ இல்லாத பல சிற்றரசர்கள் இருந்த காலம் அது. அந்த சிற்றரசர்கள் அனைவரையும் வென்று தலைமையைத் தானேப் பெற
தமக்குள் போராடிக் கொண்டிருந்தனர்.

சுயநலத்திற்காகவும், பேராசைக்காகவும் அமைதி பலி கொடுக்கப்பட்டது.

வெவ்வேறு தத்துவவாதிகளுக்குள் சண்டையும், சச்சரவும் அதிகமாக
இருந்தன. சமயப் பிரிவினரிடையே பகைமையும் முற்றியிருந்தது.

வேதம் கற்பிக்கும் நிஜமான உண்மை ஒன்றுதான் என்பதனை அனைவரும் மறந்து விட்டது போல இருந்தது.

சமய நம்பிக்கையைக் கொண்ட சமயத்தலைவர்களும், அவர்களை
பின்பற்றுபவர்களும்... அதை பிறரைத் தாக்கும் ஆயுதமாகப்
பயன்படுத்தினார்களேத் தவிர, சமயத்தால் வாழ்க்கையில் அமைதியும், ஆற்றலும் பெறலாம் என்பதை அறியவில்லை.

இத்தகைய நெருக்கடிகளும், குழப்பமும் நிறைந்த சமயத்தில் சங்கரர் தோன்றினார்,

மண்ணுலகில் வாழ்ந்த குறுகிய காலத்தில் மக்களின் மனப்புண்களை ஆற்றுவதிலே கழித்தார்.

ஆன்மீகத்தையும், ஆரோக்கியத்தையும் அடையும் வழியைக் காட்டினார்.

மக்களின் ஒற்றுமையின்மையே சமூகத்தை அரித்துக் கொண்டிருக்கும் நோயென அறிந்து அதைத் தீர்க்க ஒரே மருந்தை எடுத்துக் கூறினார். அதுவே, அனைத்திலும் ஒருமைப்பாடு காணும் பாதுகாப்பான ஞானம். தன்னைத்தவிர வேறு எதிலும் இல்லாத ஆத்மாவைப் பற்றிய உபநிஷத்தின் தத்துவமாகும்.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com