பங்குனி உத்திரத் திருவிழா; திருச்செந்தூரில் பக்தர்கள் நேர்த்திக் கடன்!

பங்குனி உத்திரத் திருவிழா; திருச்செந்தூரில் பக்தர்கள் நேர்த்திக் கடன்!
Published on

இன்று பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வந்து நேர்த்தி கடன் செலுத்த பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இன்று நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா குறித்து திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்ததாவது;

பங்குனி உத்திரமான இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு அருள்மிகு வள்ளியம்மன், திருக்கோயிலில் இருந்து அலங்கார சப்பரத்தில் சுவாமி புறப்பட்டு, அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் சமேத சிவகொழுந்தீஸ்வரா் ஆலயத்தில் தவசுக்காக எழுந்தருளினார்.

தொடா்ந்து காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், பிற்பகல் 2.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெற உள்ளது.

மாலை 3.20 மணிக்கு திருக்கோயிலில் இருந்து சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி, மேலக்கோயில் சோ்ந்து அம்மனுக்கு காட்சியளித்து, சுவாமி- அம்பாள் தோள்மாலை மாற்றும் வைபவம் நடைபெற இருக்கிறது. தொடா்ந்து, சுவாமியும் அம்மனும் திருவீதி உலா வந்து, இரவு 10 மணிக்கு மேல் திருக்கோயிலில் 108 மகாதேவா் சன்னதி முன்பு சுவாமிக்கும் வள்ளியம்பாளுக்கும் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. இதனையொட்டி, திருக்கோயிலில் இரவு மூலவருக்கு இராக்கால அபிஷேகம் நடைபெறாது.

-இவ்வாறு திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி கடந்த இரு தினங்களாக பக்தா்கள் பாதயாத்திரையாக நடந்து திருச்செந்தூா் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனா். திருச்செந்தூா் கோயிலின் உபகோயிலான நாலுமூலைக்கிணறு அருள்மிகு குன்றுமேலய்யன் சாஸ்தா திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனையும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com