தேவர்கள் இரவில் வழிபடும் திரிபுரமாலினி!

தேவர்கள் இரவில் வழிபடும் திரிபுரமாலினி!
Published on

ராஜிராதா

ஞ்சாப் மாநிலம், ஜலந்தர் நகர் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திரிபுரமாலினி திருக்கோயில்.

தட்சனுக்கு மகளாகப் பிறந்து வளர்ந்த தாட்சாயிணி, ஈசனை மணக்க விரும்பினாள். இதற்கு தட்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அதனை மீறி தாட்சாயிணி ஈசனை மணந்தாள். இதனால் மாப்பிள்ளை ஈசன் மீது தட்சனுக்கு வெறுப்பு!

ஒரு சமயம் தட்சன் மாபெரும் யாகம் ஒன்றைச் செய்தான். இதற்கு தேவர்கள் அனைவரையும் அழைத்தான். ஆனால், மாப்பிள்ளை ஈசனை மட்டும் அழைக்கவில்லை. தனது கணவன் ஈசனை அவமானப்படுத்திய தட்சனை, நல்வழிப்படுத்தி திருத்த யாகம் நடக்கும் இடத்துக்குச் செல்வதாகக் கூறினாள் தாட்சாயிணி.

ஈசன் வேண்டாம் என்று தடுத்தும், அதனை அலட்சியம் செய்து, யாகம் நடைபெறும் இடத்துக்குச் சென்றாள் தாட்சாயினி. அங்கு "ஈசனை ஏன் யாகத்திற்கு அழைக்கவில்லை" என தட்சனிடம் கேட்டாள்.

"உன் கணவனை மட்டுமல்ல; உன்னையே நான் அழைக்கவில்லையே. ஏன் வந்தாய்?'' என அவளையும் அவமானப்படுத்தினான் தட்சன்.

இதனால் மனம் நொந்த தாட்சாயிணி, ஈசனிடம் திரும்பிச் செல்ல அஞ்சி, எரிந்து கொண்டிருந்த அந்த யாகத் தீயில் குதித்து விட்டாள்.

நடப்பது அனைத்தையும், தனது இருப்பிடத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருந்த ஈசன், உடனே அங்கு வந்து, பஸ்பமான தாட்சாயிணியை தூக்கிக்கொண்டு ருத்ரதாண்டவம் ஆடினார்.

டந்ததை அறிந்த திருமால், தன் சக்கராயுதத்தை அனுப்பி, தாட்சாயிணியை 51 கூறுகளாக சிதறி விழும்படிச் செய்தார். இந்த 51 கூறுகளும் விழுந்த இடங்கள்தான் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

அம்பிகையின் 51 கூறுகளில் இடது மார்பகம் விழுந்த இடம் ஜலந்தர் திருத்தலமாகும். இந்த இடத்தில்தான் திரிபுரமாலினியை பிரதிஷ்டை செய்து, கோயில் எழுப்பி வழிபட்டு வந்தனர்.

பல்லாண்டு கால வழிபாட்டுக்குப் பிறகு, ஒரு கட்டத்தில் கோயில் வழிபாடு இன்றி போனது.

ஒரு நாள் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய திரிபுர சுந்தரி, "வழிபாடு இன்றி இருக்கும் இந்தக் கோயிலை புனரமைத்து, என்னை திரிபுரமாலினி என அழைத்து வணங்கி வந்தால், நீ வேண்டியது அனைத்தும் நடக்கும்'' எனக் கூறி மறைந்துவிட்டாள்.

அதன்படியே செய்து அந்த பக்தர் அம்பிகையை வணங்க, அவர் ஆச்சரியப்படும் வகையில் அவரது அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேறின.

இந்தத் தகவல் நகர் முழுவதும் பரவ, பக்தர்கள் குவிய ஆரம்பித்தனர். அதன் பிறகு சக்திமிக்க பிரபல தெய்வமானாள் திரிபுரமாலினி! இதனிடையே கோயிலும் விஸ்தரிக்கப்பட்டது.

கோயிலினுள் நுழைந்ததுமே காட்சி தருகிறது அம்பிகையின் சன்னிதி. படி ஏறிச் சென்றுதான் அம்மனை தரிசிக்க வேண்டும். அம்பிகையின் இடது மார்பகம் விழுந்ததைக் குறிக்கும் வகையில் அந்தப் பகுதி முழுவதையும் துண்டு போட்டு மறைத்துள்ளனர்.

வெள்ளியில் முகம் செய்து, அதனை எடுப்பாக அழகாக அலங்காரம் செய்துள்ளனர். சன்னிதி முழுவதும் வடநாட்டிற்கே உரிய அலங்காரம் ஜொலிக்கிறது. வார நாட்கள் அனைத்தும் இங்கு கூட்டம் அலை மோதுகிறது. தவிர, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்தக் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

திரிபுரமாலினி சன்னிதிக்கு எதிரே மிக நீண்ட குளம் ஒன்று உள்ளது. 'தலாப்' என்றால் குளம்! குளத்தை ஒட்டி திரிபுரமாலினி சன்னிதி அமைந்துள்ளதால் இதை, 'தேவி தலாப் மந்திர்' என சிறப்புப் பெயரிட்டு அழைக்கின்றனர்.

இங்கு காளிக்கும் தனிச் சன்னிதி உள்ளது. வட இந்திய மக்களுக்கு காளி உக்ரத்தின் மீது ஒரு பக்தி உண்டு. அதனால், திரிபுரமாலினியை வழிபட்டதும் மறக்காமல் காளியையும் சென்று தரிசிக்கின்றனர்.

குளம் பிரம்மாண்டமாக உள்ளதால், தற்போது அதைச் சுற்றி அமர்நாத் குகை கோயிலைப் போல் தத்ரூபமாய் அமைத்துள்ளனர். மற்றும் சிவ புராணத்திலிருந்தும் பல காட்சிகளை இங்கு சிற்பங்களாக தரிசிக்கலாம். கோயிலில் திரிபுரமாலினியை மையப்படுத்தி, ஒரு அணையா விளக்கு உள்ளது.

வசிஸ்டர், வியாசர், ஜமதக்னி, பரசுராமர் ஆகியோர்அம்மனை தரிசித்துச் சென்றதாக கோயில் வரலாறு கூறுகிறது. அன்னை திரிபுர மாலினியை தினமும் இரவு நேரங்களில் தேவர்கள் வந்து வணங்கிச் செல்வதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது!

ஞாயிறு மற்றும் செவ்வாய்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தக் கோயிலில் சிவபெருமானை, 'பிசான்' என அழைக்கின்றனர்.

தினமும் கோயில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்துள்ளது.

(தேவி தரிசனம் தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com