​ஏரிக்கோயில்!

​ஏரிக்கோயில்!
Published on

ராமலக்ஷ்மி

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் அனந்தபுரா கிராமத்தில் ஒரு ஏரியின் நடுவில் அமைந்துள்ளது, 'அனந்தபுரம் ஏரிக்கோயில்.' கேரள மாநிலத்தில் ஏரிக்குள் அமைந்திருக்கும் கோயில் இது ஒன்றே ஆகும். 'கும்பாலா' எனும் இடத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் அருளும் அனந்த பத்மநாப சுவாமியின் ஆதிமூலம் இதுவே என்கிறார்கள். புராணங்களின் கூற்றுப்படி, பரந்தாமன் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி அசலாக முதன்முதலில் குடியிருந்த இடம் இதுவென நம்பப்படுகிறது.

கோயிலின் வலப்பக்க மூலையில் இருக்கும் இந்தக் குகை வழியாக ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி திருவனந்தபுரம் வரை தினமும் சென்று திரும்புவார் என்பது சுவாரஸ்யமான புராணத் தகவல்.

திவாகர வில்வ மங்கலா எனும் முனிவர் அனந்தபுரா கிராமத்தில் நாராயண பகவானை வழிபட்டு வந்திருக்கிறார். அப்போது பகவான் ஒரு சிறுவன் வடிவில் அவர் முன் தோன்றியிருக்கிறார். சிறுவனின் முகத்தில் இருந்த தெய்வீகக் களையினால் ஈர்க்கப்பட்ட முனிவர், அவனை யார் என வினவ, அவனோ தான் யாருமற்ற அனாதை எனக் கூறியிருக்கிறான். இதனால் பரிதாபப்பட்ட முனிவர் அவனை தன்னோடு தங்கிக் கொள்ளச் சொல்ல, சிறுவன் அதற்கொரு நிபந்தனை விதித்திருக்கிறான். 'எப்போதேனும் நீங்கள் என் மீது மன வருத்தம் அடைய நேருமாயின், உடனே இங்கிருந்து நான் சென்று விடுவேன்' என சொல்ல, முனிவரும் அதை ஏற்றுக்கொண்டார்.

சில காலம் முனிவருக்குச் செவ்வனே தொண்டாற்றி வந்த சிறுவன், நாளடைவில் குறும்புகளை ஆரம்பித்திருக்கிறான். ஓர் நாள் அவனது குறும்பு எல்லை மீறிச் சென்றதால் முனிவர் கோபித்துக்கொள்ள, தன்னை அவமானப்படுத்திவிட்டதால் விடை பெறுவதாகவும், இனி தன்னைப் பார்க்க வேண்டுமென விரும்பினால் சர்ப்பங்களின் கடவுளான அனந்தனின் காட்டில் மட்டுமே பார்க்க முடியும் என்றும் சொல்லி விட்டுச் சடாரென மறைந்து போக, அப்போதுதான் வந்தது வேறு யாருமல்ல, அந்தப் பரந்தாமனே என உணர்ந்திருக்கிறார் முனிவர்.

இதனால் வருந்திய முனிவரின் கண்ணில் பட்டிருக்கிறது சிறுவன் மறைந்த இடத்திலிருந்த ஒரு குகை. அவனைத் தேடிக் குகை வழியே சென்றவர், ஒரு கடற்கரையை ஒட்டி வெளியேறி கானகம் ஒன்றை அடைந்திருக்கிறார். அங்கு அவர் முன் தோன்றிய சிறுவன் கணத்தில் ஒரு இலுப்பை மரமாக மாறியிருக்கிறான். அடுத்த நொடி இலுப்பை மரம் சரிந்து ஆயிரம் தலை சர்ப்பத்தின் மேல் அமர்ந்திருக்கும் விஷ்ணு பகவான் வடிவத்தை அடைந்திருக்கிறது. இந்த இடமே ஆலயமாக மாறியது என்கிறது புராணம்.

ந்த ஏரி சுவையான ஊற்று நீரால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே பாழடைந்து தென்படும் சில இடங்கள் கோயிலின் பழைமையைப் பறைசாற்றுவதாய் உள்ளன. ஸ்ரீகோயில் (கருவறை), நமஸ்கார மண்டபம், திட்டப்பள்ளி, ஜல துர்கா சன்னிதானம் மற்றும் குகையின் நுழைவாயில் ஆகியவை ஏரிக்குள் உள்ளன. நமஸ்கார மண்டபம் கிழக்குப் பக்கப் பாறையோடு ஒரு சிறு பாலத்தால் இணைக்கப்பட்டிருக்கிறது. அதன் வழியாகவே கருவறைக்குச் செல்ல வேண்டும். கருவறையின் இருப பக்கமும் மரத்தால் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட துவாரபாலகர்களைக் காணலாம். அதேபோல, மண்டப விதானத்தில் மரத்தால் செதுக்கப்பட்ட தசாவதாரக் காட்சிகளைப் பார்க்கலாம்.

இந்தக் கோயிலின் அசல் சிலைகள் உலோகத்தினாலோ கல்லினாலோ செய்யப்படவில்லை. 'கடுசர்க்கரையோகம்' எனப்படும் 70 வித மருத்துவக் குணமுடைய பொருட்களால் செய்யப்பட்டிருந்திருக்கின்றன. 1972ஆம் வருடம் இவை பஞ்சலோகச் சிலைகளாய் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன. அவை காஞ்சி மடத்திலிருந்து பரிசளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இப்போது மீண்டும், 'கடுசர்க்கரையோகம்' கொண்டு செய்த சிலைகளைப் பிரதிஷ்டை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இங்கு பகவான் விஷ்ணு, சர்ப்பங்களின் அரசனான, ஐந்து தலை கொண்ட, அனந்த பகவான் மேல் அமர்ந்திருப்பது போன்ற மூல விக்கிரகம் வழிபாட்டில் இருக்கிறது. மதம், சாதி பாடுபாகுமின்றி அனைத்து மக்களுக்காகவும் இக்கோயில் திறந்திருக்கிறது. தரிசித்து அருள் பெறுவோம்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com