கங்கா ஸ்நான மாண்பு!

கங்கா ஸ்நான மாண்பு!
Published on

கே.நிருபமா

'ங்கைக்கு ஒப்பான புண்ய தீர்த்தம் இல்லை; கேஸவனை விட மேலான தெய்வம் இல்லை' என்பது மஹாபாரதக் கூற்று. 'புண்ய தீர்த்தங்கள், சரோவரங்கள், நதிகள் உலகில் ஏராளம். ஆனால், கங்கா நதியின் புனிதத்துவத்தில் கோடியில் ஒரு பாகம்கூட அவற்றில் இல்லை. தேவதேவனான சிவபெருமான் கங்கையைத் தலையில் வைத்திருக்கிறான். மஹாவிஷ்ணுவின் பாதத்தைக் கழுவிய கங்கையைப் போல், பாவங்களைத் தொலைப்பது வேறொன்றுமில்லை' என்று பெரியோர்கள் கூறுவர்.

'திகம்பரனாகி, வீபூதி, ருத்ர மாலைகளைத் தரித்து, கையில் மண்டையோட்டைப் பிடித்து, பூத, ப்ரேத கணங்களுடன் மயானத்தில் திரிந்துகொண்டிருக்கும், அமங்கல வேஷ ஆசாரங்களினால், 'அஸிவன்' என்ற விருதிற்குத் தகுதியான சிவன், பரம மங்களகரமான சிவன் என்ற பெயருக்குப் பாத்திரனானது கங்கையைத் தலையில் அணிந்ததால்தான்' என்று அகஸ்தியருக்குச் சொல்வதாக ஸ்கந்த புராணம் சொல்கிறது.

இந்தப் புனித நதியான கங்கா எப்படி உற்பத்தியாயிற்று என அறிவோம். மஹாபலியின் அகங்காரத்தை அடக்க ஸ்ரீமஹாவிஷ்ணு வாமனனாக வந்து அவனிடம் மூன்று அடி நிலம் கேட்டார். நிலத்தை அளப்பதற்காகத் தனது இடது காலைத் தூக்கினார். அப்போது கால் கட்டை விரலின் நகம் பிரம்மாண்டத்தின் விளிம்பில் பட்டு உடைந்துபோனது. வெளிப்புறமெங்கும் சூழ்ந்திருந்த சுத்தமான நீர் கட்டை விரல் மூலமாக உள்ளே புகுந்தது. பிரம்ம தேவன் அதைத் தனது கமண்டலத்தில் பிடித்து, விஷ்ணுவின் பாதத்தைக் கழுவினார். அந்த ஹரிபாதோதகமே கங்கையாயிற்று.

பிரம்ம லோகத்திலிருந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கங்கை ஸிம்ஸுமார லோகத்திற்குப் போனாள். அங்கு பக்த துருவன் குலதேவதையின் பாதோதகம் என்று அதைத் தனது தலையில் அணிந்தான். அங்கிருந்து அந்நதி, சப்த ரிஷிகளின் உலகிற்குச் சென்றாள். அவர்களும் அவளைத் தனது தலையில் தரித்தனர்.

அதன்பின் ஆகாய மார்க்கமாகப் போய், சந்திர மண்டலத்தை அடைந்தாள் கங்கை. அங்கிருந்து மேரு சிகரத்தையடைந்தாள். மேருவிலிருந்து கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்குத் திசைகளில் முறையே சீதா, அலக்நந்தாவுக்குப் பாயத் தொடங்கினாள்.

தெற்குத் திசையில் பாய்ந்த அலக்நந்தா கந்தமாதன பர்வதத்தைக் கடந்து ஹிமாலயத்தை அடைந்தாள். அங்கு தேவதைகள் வந்து, அவளை தேவலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். இப்போது கங்கை, 'சுரகங்கா' ஆனாள்!

பின்னால், சகர புத்திரர்கள் கபில முனிவரின் கோபத்திற்கு ஆளாகிச் சாம்பலானார்கள். அவர்களுக்குக் கதி மோக்ஷம் கிடைக்க அவரது சந்ததியினரைச் சேர்ந்த பகீரதன், தேவ லோகத்திலிருந்து கங்கையைக் கொண்டு வரும் முயற்சியைத் தொடர்ந்து செய்துகொண்டே வந்தான். கடைசியில், 'பெரும் பிரயத்தனம்' செய்து அம்முயற்சியில் வெற்றியடைந்தான்.

பகீரதன் தவத்தை மெச்சிய பிரம்ம தேவன் கங்கையை பூமிக்கு அனுப்பினான். ஆனால், கங்கா தேவி குதித்த வேகம் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு போய்விடும் என்பதால், பரமசிவன் அதைத் தனது ஜடாமகுடத்தில் கட்டிவைத்து, சின்ன தாரையாகப் பாய விட்டார். அந்தத் தாரை பகீரதனைத் தொடர்ந்து கடலை நோக்கிச் சென்றது.

வழியில் ஜன்ஹு முனிவரின் ஆசிரமத்தை மூழ்கடித்ததால், முனிவர் கோபம் கொண்டு கங்கையை உள்ளங்கையில் வைத்து விழுங்கி விட்டார். பகீரதன் மறுபடியும் நீண்ட காலம் தவம் செய்து, ஜன்ஹு முனிவரை மகிழ்வித்தான். முனிவர் நதியை தன் காதின் மூலம் வெளியில் விட்டார். இதனால் கங்கைக்கு, 'ஜான்ஹவி' என்ற பெயர் வந்தது.

அதன்பின், சமுத்திரத்தையடைந்து சமுத்திர ராஜனின் மனைவி எனப்பட்டாள் கங்கை நதி. அங்கிருந்து பாதாளத்தை அடைந்து, சகரன் மக்களின் சாம்பலை நனைத்து அவர்களுக்கு நற்கதியை அளித்தாள். இவ்வாறு தேவலோகம், பூலோகம், பாதாள லோகம் மூன்றிலும் பாய்ந்த காரணத்தால் கங்கைக்கு, 'த்ரிபதகா' என்ற பெயர் வந்தது.

தேவலோகத்தில் மந்தாகினி, பூமியில் பாகீரதி மற்றும் பாதாளத்தில் போகவதி என்ற பெயர்களுடன், 'த்ரிலோக பாவனி' என்றழைக்கப்பட்டாள்.

இத்தகு பெருமை வாய்ந்த கங்கை, தீபாவளித் திருநாளில் நாம் குளிக்கும் அனைத்து நீரிலும் ஆவிர்ப்பவிக்கிறாள் என்பது ஐதீகம். தீபாவளி திருநாளன்று நாமெல்லோரும் கங்கா ஸ்நானம் செய்து புனிதமடைவோம்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com