அனுமன் என்கிற 'சூப்பர் ஹீரோ'!

Hanuman, the Ultimate Super Hero for Every Child
Lessons for Kids from the Mighty HanumanAI Image
Published on

ஹாய் குட்டீஸ்! உங்களுக்கு ‘சூப்பர் ஹீரோ’க்கள் என்றால் மிகவும் பிடிக்கும்தானே? நமது இதிகாசங்களில் சொல்லப்பட்ட அனுமனை விட ஒரு சிறந்த சூப்பர் ஹீரோ இருக்க முடியுமா? ராமாயணத்தில் வரும் அனுமன் வெறும் பலசாலி மட்டுமல்ல; அவர் அறிவிற்கும், அடக்கத்திற்கும் இலக்கணம். இன்றைய குழந்தைகள் நீங்கள், உங்கள் வாழ்வில் வெற்றி பெற அனுமனிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 10 முக்கியமான பாடங்களை இங்கே காண்போம்.

1. விசுவாசம்

அனுமன் ஸ்ரீராமருக்கு எவ்வளவு உண்மையாக இருந்தாரோ, அதுபோல நீங்களும் உங்கள் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதும், இக்கட்டான சூழலில் அன்புக்குரியவர்களுக்குத் துணையாக இருப்பதும் ஒரு சிறந்த பண்பு.

2. அஞ்சா நெஞ்சம்

வாழ்க்கையில் சவால்கள் வரும்போது பயந்து ஓடக்கூடாது. அனுமன் கடலைத் தாண்டிக் குதித்தபோது அவருக்கும் தயக்கம் இருந்திருக்கலாம், ஆனால் லட்சியம் பெரிதாக இருந்ததால் பயத்தை வென்றார். தேர்வாக இருக்கட்டும் அல்லது மேடைப் பேச்சாக இருக்கட்டும், ‘என்னால் முடியும்’ என்ற துணிச்சலுடன் முதல் அடியை எடுத்து வைத்தாலே பாதி வெற்றி.

3. பலத்தை நல்வழியில் பயன்படுத்துதல்

அனுமனுக்கு அபாரமான உடல் வலிமை இருந்தது. ஆனால், அவர் அதை ஒருபோதும் பலவீனமானவர்களைத் துன்புறுத்தப் பயன்படுத்தவில்லை. நீங்களும் உங்கள் அறிவுத்திறன் அல்லது விளையாட்டுத் திறனை மற்றவர்களுக்கு உதவவும், நற்காரியங்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
The Maned Wolf: The Fruit-Loving Wolf
Hanuman, the Ultimate Super Hero for Every Child

4. விடாமுயற்சி

சஞ்சீவி மலையைத் தேடிச் சென்றபோது, மூலிகை எது என்று தெரியவில்லை என்பதற்காக அனுமன் திரும்பி வரவில்லை. மாறாக, மலையையே தூக்கிக் கொண்டு வந்தார். காரியம் முடியும் வரை பின்வாங்கக் கூடாது என்ற இந்த 'விடாமுயற்சி' மாணவர்களுக்கு மிகவும் அவசியம்.

5. தன்னம்பிக்கை

தனது பலம் என்னவென்று தெரியாமல் திகைத்து நின்ற அனுமனுக்கு, ஜாம்பவான் அவர் திறமையை நினைவுபடுத்தினார். தமக்குள் இருக்கும் திறமையை முதலில் நம்ப வேண்டும். ‘என்னால் முடியும்’ என்று தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொள்ளும் தன்னம்பிக்கையை அனுமனிடம் இருந்து கற்கலாம்.

6. பணிவு

இலங்கையை எரித்து, ராவணனின் கர்வத்தை அடக்கிய பிறகும், அனுமன் தன்னை 'ராமரின் தூதன்' என்று மிக எளிமையாகவே அறிமுகப்படுத்திக் கொண்டார். எவ்வளவு பெரிய வெற்றிகளைப் பெற்றாலும், தலைக்கனம் கொள்ளாமல் பணிவாக இருப்பதே ஒருவரை உயர்ந்த மனிதராக மாற்றும்.

7. ஒருமுகப்படுத்தப்பட்ட கவனம்

கடலைத் தாண்டும்போது பல தடைகள் வந்தன. ஆனால், அனுமன் எதற்கும் அஞ்சாமல் தன் இலக்கான இலங்கையை அடைவதிலேயே குறியாக இருந்தார். மொபைல் போன், டிவி போன்ற கவனச்சிதறல்கள் நிறைந்த இன்றைய உலகில், மாணவர்களாகிய நீங்கள், படிப்பில் ஒருமுகப்பட்ட கவனத்துடன் இருப்பது மிக முக்கியம்.

இதையும் படியுங்கள்:
The Secret History of Your Favorite Nursery Rhymes!
Hanuman, the Ultimate Super Hero for Every Child

8. உண்மை பேசுதல்

செல்லங்களா, அனுமன் ஒருபோதும் பொய் சொன்னதில்லை. ராவணனின் சபையில் கூட உண்மையை உரக்கச் சொன்னார். தவறு நேர்ந்துவிட்டால் அதை மறைக்காமல் ஒத்துக்கொள்ளும் நேர்மையும், எப்போதும் உண்மையின் பக்கம் நிற்கும் உறுதியும் உங்களுக்கும் வேண்டும்.

9. சமயோசித புத்தி

சுரசை என்ற அரக்கி அனுமனை விழுங்க வந்தபோது, அவர் தனது உருவத்தை மாற்றித் தப்பித்தார். வெறும் உடல் பலம் மட்டும் போதாது; இக்கட்டான நேரங்களில் புத்தியைப் பயன்படுத்திச் செயல்பட வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

10. பிரதிபலன் பாராத சேவை

தான் செய்த எந்த உதவிக்கும் அனுமன் எதையும் பதிலுக்கு எதிர்பார்க்கவில்லை. மற்றவர்களுக்கு உதவுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியே பெரியது. கைம்மாறு கருதாமல் உதவி செய்யும் குணம் உங்களை ஒரு நல்ல குடிமகனாக வளர்க்கும்.

முடிவுரை: அன்பு குழந்தைகளே, அனுமன் வெறும் கடவுள் மட்டுமல்ல; அவர் ஒரு சூப்பர் ஹீரோ! அவரிடம் இருந்து நீங்கள் இந்த 10 விஷயங்களைக் கற்றுக்கொண்டால், வாழ்வில் வீரம், விவேகம் மற்றும் விசுவாசத்துடன் சிறந்து விளங்குவீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com