Leap Year ஆண்டாக அமைந்த 2024: லீப் வருடம் என்றால் என்ன?

2024 Leap Year
2024 Leap Year Temp www.procurious.com
Published on
gokulam strip
gokulam strip

வ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் Leap Year இந்த வருடம் 2024ல் இடம்பெற்றுள்ளது. இதனை இன்டர்காலரி ஆண்டு அல்லது பைசெக்ஸ்டைல் ஆண்டு என்றும் சொல்வார்கள். லீப் வருடத்தில் பிப்ரவரி மாதம் 29 நாட்களைக் கொண்டிருக்கும். ஆனால், மற்ற வருடங்களில் பிப்ரவரி 28 நாட்கள் மட்டுமே. இதன் காரணத்தை பற்றித் தெரிந்துக் கொள்ள காலண்டர் பற்றிய வரலாறை நாம் அறிய வேண்டும். உலகத்திற்கு கேலண்டர் முறையை அறிமுகப்படுத்தியது ரோமானியர்கள்தான்.

10 மாதங்களை கொண்ட ஒரு வருடம்

விவசாயத்திற்கான பருவ நிலை மாற்றம் பற்றி அறிய ரோமானியர்கள் கேலண்டரை உருவாக்கினார்கள் இந்த கேலண்டரில் 304 நாட்கள் மட்டும் தான் அப்போது இருந்தது. 304 நாட்கள் கொண்டிருந்த வருடத்தில் பத்து மாதங்களாக, ஆறு மாதங்கள் முப்பது நாட்களாகவும், மீதி நான்கு மாதங்கள் முப்பத்து ஒன்று நாட்களாகவும் வடிவமைக்கப்பட்டது.

மாதங்களுக்கு ஒன்றிலிருந்து பத்து வரையான ரோமானிய எண்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. முதல் மாதம்-மார்ஷியஸ் என்ற மார்ச். பத்தாவது மாதம்-டிசம்பர். இந்த கேலண்டரில் குளிர் காலத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. இதற்கு பூமி எடுத்துக் கொள்ளும் கால அளவு 365.24219 நாட்கள். ஆனால் நாட்காட்டியில் 304 நாட்கள் மட்டுமே. ஆகவே நுமா பொம்பிலியஸ் என்ற அரசர் ஜனவரி, பிப்ரவரி என்ற இரு மாதங்களை முறையே பதினொன்றாவது, பன்னிரெண்டாவது மாதங்களாகச் சேர்த்து 355 நாட்கள் கொண்ட நாட்காட்டியாக மாற்றினார்.

Numa Pompilius 2024 is a leap year
Numa Pompilius 2024 is a leap year grammaticus.co

365 நாட்களுக்கு அடித்தளமிட்ட கிறிஸ்து பிறப்பு

இப்போதும் பூமி சுற்றுகைக்கும், நாட்காட்டிக்கும் பத்து நாட்கள் வித்தியாசம் இருந்தன. கிறிஸ்து பிறப்பதற்கு 46 ஆண்டுகளுக்கு முன்னால் ஜூலியஸ் சீசர் என்ற ரோம அரசர் பூமி சூரியனைச் சுற்றி வருவதற்கான கால அளவை மனதில் கொண்டு 365 நாட்கள் கொண்ட புதிய கேலண்டரை உருவாக்கினார். இவர் உருவாக்கிய கேலண்டரில், பிப்ரவரிக்கு 28 நாட்கள்.

வருடத்திற்கு 365 நாட்கள் என்பதால், பூமி சுழற்சிக்கும், கேலண்டருக்கும் வருடத்திற்கு 0.24219 நாட்கள் இடைவெளி ஏற்பட்டது. அதை சமன் செய்ய, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, கடைசி மாதமான பிப்ரவரியில் ஒரு நாளைக் கூட்டினார். அதாவது, சாதாரண ஆண்டுகளில் பிப்ரவரிக்கு 28 நாட்கள். லீப் ஆண்டுகளில் பிப்ரவரிக்கு 29 நாட்கள், வருடத்திற்கு 366 நாட்கள்.

இதிலும் ஒரு சிக்கல் இருந்தது நான்கு ஆண்டுகளுக்கான சராசரி நாட்கள் 365.25 நாட்கள். இது பூமி, சூரியனைச் சுற்றி வரும் கால அளவை விடச் சற்றே அதிகம். இதனை சரி செய்வதற்காக நூற்றாண்டு வருடங்கள் 400ல் வகுபட்டால் லீப் ஆண்டுகள் என்றும், அவ்வாறு வகுபடாவிட்டால் சாதாரண ஆண்டுகள் என்றும் முடிவு செய்யப்பட்டன. உதாரணத்திற்கு, 1900 ஆம் வருடம், நான்கால் வகுபடும் 400ஆல் வகுபடாது. ஆகவே, சாதாரண வருடம் 2000 ஆம் வருடம் 4 மற்றும் 400ல் வகுப்படும் ஆகவே லீப் ஆண்டு 2100, 2200, 2300 சாதாரண ஆண்டுகள்.

2024 is a leap year
2024 is a leap year goldandhra.com

விசித்திர பழக்கங்களை கொண்ட பிப் 29

ஜனவரி ‘ஜேனஸ்” என்ற கடவுளின் பெயரிலிருந்து எடுக்கப்பட்டது. ஜேனஸ் தொடக்கத்திற்கும், முடிவிற்கும் அதிபதியான கடவுளாகப் போற்றப்படுகிறார். ஜேனஸ் எதிரெதிர் திசைகளில் இரண்டு தலைகள் உடைய கடவுள். ஒரு தலை கடந்த காலத்தைப் பார்த்திருக்க, மற்றொன்று எதிர் காலத்தை நோக்கி இருக்கிறது. இதனால், ஜனவரி முதல் மாதமாகவும், பிப்ரவரி இரண்டாவது மாதமாகவும் மாறியது. இறைவனைத் தொழுவதற்கு ரோமானியர்கள் அமருகின்ற விரிப்பின் பெயர் ‘பிப்ருவா” இதிலிருந்து பிப்ரவரி என்ற மாதத்தின் பெயர் எடுக்கப்பட்டது.

லீப் வருடங்கள் மற்றும் லீப் தினம் என்று குறிப்பிடப்படும் பிப்ரவரி 29 குறித்து பண்டைய நாட்களில் விசித்திரப் பழக்கங்கள் இருந்தன.

அயர்லாந்த் மற்றும் பிரிட்டனில், லீப் வருடங்களில் மட்டுமே, பெண்கள் திருமணத்தை முன் மொழிவார்கள். பின்லாந்தில், லீப் நாளில், திருமணத்திற்கு முன் மொழிந்த பெண்ணை ஆண் மறுத்தால், அவளுடைய உடைக்கானத் துணியை அவன் வாங்கித் தர வேண்டும். கிரீஸில், லீப் ஆண்டில் திருமணம் செய்து கொள்வது துரதிருஷ்டமாகக் கருதப்பட்டது. சில நாடுகளில், லீப் ஆண்டில் பிப்ரவரி 29 பிறந்தவர்கள், சாதாரண ஆண்டுகளில் மார்ச் 1 பிறந்த நாளாக கருதலாம் என்று சட்டமிருக்கிறது.

நாம் இப்போது பயன்படுத்தும் நாட்காட்டிக்கு கிரிகோரியன் என்று பெயர். 1582 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னாள் பிரதம மந்திரி மொரார்ஜி தேசாய், 29 பிப்ரவரி 1896ஆம் வருடம், லீப் தினம், லீப் வருடம் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com