உலகில் உள்ள வினோதமான மரங்கள்!

5 strangest trees
5 strangest trees

ஹாய் குட்டீஸ்!

நம்முடைய வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாத இயற்கை அமைப்புகளில் மிகவும் முக்கியமானது என்றால் அது மரங்களை சொல்லலாம். மரத்தின் வேர் முதல் நுனிவரை அனைத்து பாகங்களும் நமக்கு பயன்படக்கூடியவை. நாம் உள் இழுக்கும்  மூச்சுக்காற்று முதல் இரவு உறங்குவதற்கு பயன்படுத்தும் கட்டில் வரை அனைத்து பொருட்களும் மரங்களில் இருந்து தான் கிடைக்கின்றன. அத்தகைய மரங்களில் பல்வேறு ஆச்சரியமான மரங்களும் உள்ளது. கண்களை விரியச் செய்யும் சில ஆச்சரியமான மற்றும் வினோதமான மரங்களைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

1. Khejri Tree:

Khejri Tree
Khejri Tree

பக்ரைன் பாலைவனங்களில் காணப்படும் 400 ஆண்டுகள் பழமையான இந்த மரம் அங்கு நிலவும் 49 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும் தாண்டி செழிப்புடன் வளர்கிறதாம். அரேபியன் பாலைவனத்தில் நிலவும் கடுமையான வெயிலின் காரணமாக பாலைவன தாவரங்களே அங்கு வளராத போது இந்த மரம் மட்டும் செழிப்பாக வளர்வது மிகவும் ஆச்சரியமே.

இதில் இன்னொரு வியப்பு என்னவென்றால் இந்த மரம் இருக்கக்கூடிய நிலப் பகுதியில் 4  km லிருந்து 5 km  தூரம் அளவிற்கு நிலத்தடி நீரே இல்லையாம், அவ்வளவு ஏன் காற்றில் கூட ஈரப்பதம் அதிகமாக இல்லையாம். இவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் செழித்து வளரும் இந்த மரத்தை பார்ப்பதற்கு மட்டும் ஆண்டுக்கு 50,000 மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகிறார்களாம்.

2. Dragon Blood Tree:

Dragon Blood Tree
Dragon Blood Tree

மரத்திலிருந்து பால் வடிவதையும் ரத்தம் வடிவதையும் சினிமாவில் மட்டும் தானே பார்த்திருப்போம், ஆனால் உண்மையிலேயே அப்படி ஒரு மரம் இருக்கிறது தெரியுமா? வெட்டினால்  என்னை ஏன் வெட்டினீர்கள்?  என்று  கேட்டு அதிலிருந்து ரத்தம் வடிவதைப் போன்றே இருக்கும். டிராகன் பிளட் ட்ரீ என்று அழைக்கப்படக்கூடிய இந்த மரம் பச்சை நிறத்தில் ராட்சத குடைகளை விரித்து  வைத்ததைப்  போன்று பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக காட்சியளிக்கிறது. அரபிக் கடலில் உள்ள யேமன் தீவுகளில் இவ்வகை மரங்கள் அதிகமாக காணப்படுகின்றன. சுமார் 33 முதல் 39 அடி வரை  வளரும் இந்த வகை மரங்கள் 650 ஆண்டுகள் உயிர் வாழும் தன்மை உடையது.

மரத்தின் தண்டு பகுதியை வெட்டினால் சிவப்பு நிறத்தில் ரத்தம் போன்ற திரவம் வருகிறது. பிசின் போன்ற இந்த திரவம் ரெசின் என்று அழைக்கப்படுகிறது. இந்த ரெசின் மருத்துவம்  முதல் லிப்ஸ்டிக் வரை பல்வேறு பொருட்களுக்கு பயன்படுகிறது. இந்த ரெசினை பயன்படுத்தி வயலின் போன்ற இசைக்கருவிகளுக்கு  வார்னிஷ் செய்யப்படுகிறது. இதன் பழங்கள் கால்நடைகளுக்கு உணவாகவும் பயன்படுகிறது. பல்வேறு சிறப்புகளை உடைய இந்த மரம் யேமன் நாட்டின் தேசிய மரமாக கருதப்படுகிறது.

3. Giant Sequoia:

Giant Sequoia
Giant Sequoia

கலிபோர்னியாவில் மட்டுமே வளரக்கூடிய உலகின் மிகப்பெரிய மர வகைகளில் இதுவும் ஒன்று. சுமார் 310 அடி உயரமும் 60 அடி அகலமும் உடைய இம்மரம் சுமார் 2000 முதல் 3000 ஆண்டுகள் உயிர் வாழும் தன்மை உடையவை. கலிபோர்னியாவில் உள்ள செக்கோயா  தேசிய பூங்காவில்  இம்மரம் காணப்படுகிறது. இந்த மரத்தின் வேர்கள் மற்றும் சுமார் 3 km  முதல் 4 km தொலைவு பரவி இருக்குமாம். 2021 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் பெரிய அளவில் காட்டுதீ  ஏற்பட்ட போது இந்த மரத்தை பாதுகாப்பதற்காக மரத்தைச் சுற்றி அலுமினிய தாள்களை சுற்றி வைத்தார்களாம்.

இவ்வளவு பெரிய மரத்திற்கு விதைகள் குண்டூசி அளவு தான் இருக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? குட்டிஸ், அந்த சின்ன விதைகளுக்கு சிறிய இறக்கைகள் கூட உண்டு. இதன் பேர்கள் பல ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து படர்ந்திருக்கும். இவ்வளவு ஏன் பெரு வெள்ளம், பெரும் புயல், பயங்கரமான நில அதிர்வின்போது கூட இந்த மரம் அவ்வளவு எளிதில் அசையாது என்றால்  பார்த்துக் கொள்ளுங்களேன்! இந்த ஒரு மரத்தை பயன்படுத்தி மட்டும் 100 கோடிக்கும் அதிகமான தீக்குச்சிகளை தயாரிக்கலாமாம். ஒரே மரத்தை பயன்படுத்தி 50 க்கு மேற்பட்ட வீடுகளை கூட கட்டிவிடலாமாம். இதன் மரப்பட்டையில் இருந்து பெறப்படும் டேனின் சாயம் தயாரிப்பில் முக்கிய பொருளாக பயன்படுகிறது. இதனால் பூச்சிகளும் இந்த மரத்தை அவ்வளவு எளிதில் தாக்குவதில்லை.

4. Crooked Forest Pine Tree:

Crooked Forest
Crooked Forest

பொதுவாகவே நாம் அனைவரும் பைன்  மரங்களை பார்த்திருப்போம். பைன் மரங்கள் என்றாலே வரிசையாக ஒரே நேர்கோட்டில் உயரமாக வளரக்கூடிய மரங்கள் என்பது தான் நாம் அனைவரும் அறிந்தது. ஆனால் உலகின் ஒரு இடத்தில் மட்டும் பைன் மரங்கள் சொல்லி வைத்தார்போல் ஒரே திசையை நோக்கி வளைந்தும் ஒரே வடிவத்தில் வளைந்தும் காணப்படுகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? அப்படி காணப்படும் இடம் தான் போலந்து நாட்டில் உள்ள மேற்கு பொமரேனியா.  இந்த  இடத்தில் காணப்படும் மரங்கள்  J வடிவத்தில் வளைந்து  காணப்படுகின்றன.  இதன் அடிப்பகுதி 90 டிகிரி கூர்மையான வளைவுடன் காணப்படுகிறது. 50 அடி உயரம் வரை வளரக்கூடிய இந்த வகை மரங்கள் அனைத்தும் வடக்கு நோக்கியே  வளைந்து காணப்படுகிறது. 7 முதல் 10 ஆண்டுகள் வரை வாழும் இவ்வகை  மரங்கள் ஏன் இவ்வாறு வளைந்து காணப்படுகிறது என்பது இன்றும் உலக அளவில் ஒரு பெரும் மர்மமாகவே இருந்து வருகிறது.

5. Baobab Tree:

Baobab Tree
Baobab Tree

மடகாஸ்கர், ஆப்பிரிக்கா, அரேபிய தீபகற்பம் போன்ற பகுதிகளில் காணப்படும் இவ்வகை மரங்கள் தண்ணீர் மரம் அல்லது பெருக்க மரம் என்று அழைக்கப்படுகிறது. சுமார் 98 அடி உயரம் வரை வளரக்கூடிய இவ்வகை  மரம் 38 அடி அகலம் கொண்டவை. இவ்வகை மரங்கள் வறட்சி காலங்களுக்கு ஏற்ப தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மை உடையவை. தண்ணீர் என்றால் 1 லிட்டர் 2 லிட்டர் என்று இல்லை சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்கும் தன்மை உடையவையாம். வறண்ட காலங்களில் இம்மரத்தில் இருக்கும் தண்ணீரை மக்கள் துளைப்போட்டு எடுத்து பயன்படுத்துகிறார்களாம். மேலும் இம்மரத்தின் பாகங்கள் தண்ணீர் புகாத தொப்பிகள், இசைக்கருவிகள், கயிறு, காகிதம், கூடை போன்ற பொருள்கள் செய்வதற்கும் பயன்படுகிறதாம்.

இப்ப சொல்லுங்க குட்டீஸ் மரம் இல்லாத ஒரு மனித வாழ்க்கையை உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? முடியாது அல்லவா! எனவே வீடும் நாடும் வளம் பெற நாமும் மரங்களை நட்டு, நன்கு பேணிக்காத்து வளர்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com