
பொதுவாகவே, குழந்தைகளை 10 வயது நிரம்பும் வரை பொத்தி பொத்தி பாதுகாக்கும் சமூகத்தில், பிஞ்சு பாதங்கள் படிக்கட்டு ஏறி தவறி விழுந்துவிடக்கூடாது என நினைக்கும் இந்த சமூகத்தில், 5 வயதில் துணிச்சலாக மலையேறி எவரெஸ்ட் உயரத்தை எட்டவிருக்கும் சிறுமி சாந்தனியின் பயணம்... ஒரு பார்வை:
நடை பழகியவுடனே மலையேற பயிற்சி:
சென்னையை சேர்ந்த சாந்தினி என்ற 6 வயது சிறுமி தனது ஒன்றரை வயது முதலே மலையேறுவதில் ஆர்வம் கொண்டுள்ளார். இவரது ஆர்வத்தை கவனித்த அவரது தாய் அருணா, சிறுமிக்கு மேலும் பயிற்சியளித்தார். தாயின் உந்துதலின் பேரில் சிறிய சிறிய படிக்கற்களை தாண்டி பெரிய கற்களை தாண்ட முயற்சித்தார். தொடர்ந்து தனது 5வயதை எட்டிய அவர், உலக சாதனைக்கு தயாராகியுள்ளார்.
ஒரே நாளில் 2 உலக சாதனை:
ஒரே நாளில் 2 உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார் சாந்தினி. முதலில் 101 அடி மலையை 1 நிமிடம் 51 விநாடிகளில் கயிறு மூலம் ஏறி சாதனை படைத்தார். தொடர்ந்து அரை மணி நேர இடைவெளிக்கு பிறகு 2 நிமிடம் 15 விநாடிகளில் மலை உச்சியில் இருந்து இறங்கி சாதனை படைத்துள்ளார். இவரது இந்த அசாத்திய திறமையை கண்டு வியந்த பலரும் பாராட்டுக்களை குவித்தனர்.
பெரிய அங்கிகாரம் இல்லை என்பதே வருத்தம்:
பல பல விருதுகளை குவித்த சாந்தினிக்கு இன்னும் பொதுமக்களிடையே ஒரு அங்கிகாரம் கிடைக்கவில்லை என்பதுதான் வருத்தம். சிறு வயதிலேயே தந்தை விட்டு சென்ற போதும், தாயின் அரவணைப்பிலும் விடாமுயற்சியிலும் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையோடு இல்லாமல் அடுத்தடுத்து சாதனைகளை படைக்க முயற்சித்து வருகிறார். அடுத்ததாக உலக நாடுகளுக்கு சென்று மலையேறி சாதனை படைக்க முயற்சி மேற்கொண்டுவருகிறார்.
சாந்தினி தாயார் எதிர்கொள்ளும் சவால்:
சாந்தினியின் முயற்சியை பாராட்டி உதவி செய்ய முன் வருபவர்களை எதிர்நோக்கி காத்து கொண்டிருப்பதாக சாந்தினியின் தாயார் தெரிவிக்கிறார். எந்த நிலையிலும் நின்று விடாமல் அடுத்தடுத்த உலக சாதனை தொடர்ந்து படைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். தனியாக சிறுமி மலையேறி முடிக்கும் வரை தன் உயிரை கையில் பிடித்து கொண்டு இருப்பதாகவும் அவரது தாய் கூறுகிறார்.
முயற்சி திருவினையாகும்:
இந்த சிறுவயதில் 2 உலக சாதனைகள் படைத்ததே பெரும் சிறப்பு. இது தவிர அவர் சிலம்பம் சுற்றும் பயிற்சியும், சிலம்பம் சுற்றி கொண்டே திருக்குறள் கூறும் பயிற்சியும் பெற்றிருக்கிறார். முயற்சி திருவினையாகும் என்ற வரிகளுக்கு ஏற்ப இவரது அளவற்ற முயற்சிகள் இவரை எவரெஸ்ட் மலையையே எட்டவைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.