
அந்தக் கானகத்தின் அரசனான சிங்கம், ஒரு கன்றுக்குட்டியின் அழகில் மயங்கி, அதனிடம் காதல் வயப்பட்டது. அந்த இளம் கன்றுக்குட்டி தனியாகத் துள்ளித் திரிந்துகொண்டிருக்கும் சமயங்களில், அதனிடம் தன்னுடைய காதலைத் தெரிவிக்கச் செல்லும். ஆனால், கன்றுக்குட்டியோ, சிங்கம் தன்னைப் பிடித்துத் தின்னத்தான் வருகிறது என்று பயந்து, பாய்ந்து ஓடிவிடும்.
ஒரு முறை சிங்கம் அதை ஒருவாறு மடக்கிப் பிடித்து, "நான் உன்னைத் தின்ன வரவில்லை. ஐ லவ் யூ, செல்லாக்குட்டீ..." என்று கொஞ்சியது.
கன்றுக்குட்டி அதைக் கேட்டு இன்னும் மிரண்டுவிட்டது. ஆனாலும் அது ஆச்சரியப்பட்டு, "சிங்கம் அதற்கு இரையாகக் கூடிய விலங்கினத்தைக் காதலிப்பது பற்றி நான் இதுவரை கேள்விப்பட்டதே கிடையாது. அது நடக்காத காரியம். நான் உங்களை நம்ப மாட்டேன்" என்றது.
"நிஜமாகவே நான் உன்னைக் காதலிக்கிறேன், புஜ்ஜுக் குட்டீ! உன்னைத் திருமணம் செய்துகொள்ளவும் விரும்புகிறேன்."