அணை கட்டும் அதிசய விலங்கு!

Beaver
Beaver

இயற்கையின் அதிசய படைப்புகளில் ஒன்று இந்த பீவர் என்னும் நீர்எலி.

எறும்புகள், கரையான்கள் புற்றை கட்டுவது போல இந்த நீர் எலிக்கு அணையை கட்டுகின்ற ஆற்றல் உள்ளது. இது ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும், வாழும் உயிரினம் ஆகும். 

பெரிய குண்டு சொம்பு போன்ற தலை, முயலுடையது போன்ற பிளவுபட்ட வாய், அதில் உளி போன்ற இரண்டு முன் பற்கள், கீழ் வாயிலும் அதே போன்ற 2 உளி போன்ற பற்கள், சிறிய கண்கள், சிறிய காதுகள், செழுமையான உடல், அதன் மேல் அடர்ந்த பழுப்பு நிறமுடைய உரோமங்கள், குட்டையான முன் கால்கள் தடிமனான பின் கால்கள் குட்டையும், தட்டையுமான வால் ஆகியவற்றை எல்லாம் பெற்றுள்ள  அதிசய விலங்கு இந்த பீவர். 

பீவர் தண்ணீருக்குள் செல்லும் போது சேறு, தூசி போன்றவை கண்களில் படாதபடி கண்ணாடி திரை போன்ற ஒரு மெல்லிய தோல் பாதுகாப்பை தருகிறது. பீவருக்கு பார்க்கும்  திறமை குறைவு. ஆனால் நுகரும் திறனும், கேட்கும் திறனும் அதிகம். 

பீவர் 75 செ.மீ நீளமும், 25 கிலோ எடையும் உடைய ஒரு விலங்கு ஆகும். 15 நிமிடங்கள் வரை மூச்சை அடக்கிக் கொண்டு தண்ணீருக்குள் இருக்கும் திறன் கொண்டது.

இதன் வாயில் 20 பற்கள் உள்ளன. இவற்றில் 4 பற்கள் மிகவும் வலிமையானதாக பெரிதாக இருக்கும். இந்த பற்களின் துணையால் பெரிய மரங்களையும் கூட கடித்து கீழே சாய்த்து விடும். இதன் வாய்க்குள் இருக்கும் தொங்கும் திரை போன்ற அமைப்பு மரத்தூள் தொண்டைக்குள் சென்று விடாதபடி பாதுகாப்பை தருகிறது. 

இதன் கால்களில் உள்ள விரல்களின் முனைகளில் நகங்களும் இருக்கின்றன. முன்னங்கால்கள் தோண்டும் போது மரத்தை பிடித்து இழுக்கும் தன்மை கொண்டது. பின்னங் கால்களில் உள்ள விரல்கள் தோலால் இணைக்கப்பட்டு இருப்பதால்  நீரில் எளிதாக நீந்த முடியும். உரோமங்களில் ஒட்டி கொண்டிருக்கும் பாசி போன்றவற்றை துடைத்து அகற்றும். அதனால் நீரில் பீவர் தடை எதுவும் இல்லாமல் வேகமாக நீந்த முடியும்.

இதையும் படியுங்கள்:
உலகின் விசித்திரமான ஓட்டல்கள்! வினோதமான பழக்க வழக்கங்கள்!
Beaver

பீவர் தன் வாலால் தண்ணீரை தட்டி தட்டி தன் வருகையை தெரிவிக்கிறது. தண்ணீரில் இது வாலால் பளார் பளார் என்று சத்தமாக அடிப்பதால் அதன் வருகையை எளிதாக உணர முடியும். பீவரின் வால் நீரில் அதற்கு ஒரு சுக்கான் போல பயன்படுகிறது. 

தன் வாழிடத்தை இது அற்புதமாக அமைக்கும் திறன் பெற்றது. இதன் வாழிடத்திற்கு 'லாட்ஜ்' (lodge) என்று பெயர். இந்த வாழிடம்  ஏழையின் குடிசைப்போல நீரின் நடுவில் அமைக்கப்படுகிறது. குடிசைக்குள் ஜன்னல்கள் இருக்காது. ஆனால் இதன் வாழிடத்தின் உச்சியில் காற்று உள்ளே வருவதற்காக ஒரு துவாரம்  போடப்பட்டிருக்கும். குடிசை வீட்டுக்கு இரண்டு வாசல்கள் இருக்கின்றன. 

வீட்டின் நடு பகுதியை மேடானதாக அமைக்கும். இந்த மேடான பகுதியில் குட்டிகள் வளரும். குளிர் காலத்திற்கான உணவை இங்கு சேகரிக்கும்.

பீவர், ஆற்றின் குறுக்கே அற்புதமாக அணை கட்டும். மரக்கிளை, கல், சேறு முதலியவற்றை கொண்டு இந்த அணை கட்டப்படுகிறது. இவ்வாறு அணை கட்டும் போது அந்த இடத்தில் ஆறு குளமாக மாறுகிறது. அங்கு இருக்கும் தண்ணீரில் மீன்கள் அதிகமாக இருக்கும். 

இத்தகைய அற்புதமான திறமைகள் பல பெற்றுள்ள உயிரினத்திற்கு முக்கியமான எதிரிகள் கரடி, ஓநாய் மற்றும் மனிதனும் தான். 

பீவர் போன்ற உடலமைப்பும் விந்தையான வாழ்க்கை முறையும் கொண்ட விலங்குகளைப் பற்றி துல்லியமாக அறிந்து கொண்டு நம் வருங்கால சந்ததிகளுக்கு இந்த அதிசய மான உயிர்களை பற்றி விளக்கி அறிய செய்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com