கடல் குதிரை பற்றி வியப்பான தகவல்கள்!

கடல்குதிரை
கடல்குதிரை
gokulam strip
gokulam strip

டல்குதிரையின் அறிவியல் பெயர் ஹிப்போகேம்பஸ் (Hippocampus) என்பதாகும். இது ஒரு கிரேக்க வார்த்தை. ஹிப்போ என்ற வார்த்தைக்கு குதிரை என்றும் கேம்பஸ் என்ற வார்த்தைக்கு விநோத உயிரினம் என்று பொருள். குதிரை வடிவிலுள்ள விநோத உயிரினம் என்பதே ஹிப்போகேம்பஸ். மற்றபடி நிலப்பகுதிகளில் வாழும் குதிரைக்கும் கடல்குதிரைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

சுமார் ஐம்பது வகையான கடல்குதிரைகள் உள்ளன. இவை ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள், கிரே மற்றும் பச்சை என பலவகையான வண்ணநிறங்களில் பார்ப்பதற்கு அழகாக காணப்படுகின்றன. கடல்குதிரைகள் சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கேற்ப தாங்கள் நினைக்கும் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும் அதிசய ஆற்றல் படைத்தவைகளாகவும் விளங்குகின்றன.

பிளாங்டன் எனப்படும் ஒரு கடல்வாழ் உயிரியை விரும்பிச் சாப்பிடும் கடல்குதிரைகள் மிகச்சிறிய மீன்களையும் அவ்வப்போது சாப்பிடுகின்றன. கடல்குதிரைகள் சாப்பிட விரும்பினால் ஒருவித ஓசையை எழுப்புகின்றன. எதிரே உள்ள சிறுமீன்கள் போன்றவை இந்த ஓசையைக் கேட்டு செய்வதறியாது திகைக்கும். அப்போது கடல்குதிரைகள் அத்தகைய மீன்களை சாப்பிட்டுவிடுகின்றன. நம்மைப்போலவே கடல் குதிரைகள் ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் தங்களின் உணவைச் சாப்பிடும் இயல்புடையனவாக உள்ளன.

சராசரியாக இவை இரண்டு முதல் எட்டு அங்குல அளவில் காணப்படுகின்றன. கடல்குதிரை இனத்தில் மிகச்சிறிய இன கடல்குதிரையானது கால் அங்குல அளவே வளர்கின்றன. வடஅமெரிக்காவில் அட்லாண்டிக் கடற்கரைப் பகுதிகளில வாழும் கடல்குதிரைகள் அதிகபட்சமாக ஐந்து அங்குல அளவு வரை வளர்கின்றன. பசிபிக் கடற்கரைப் பகுதிகளில் வாழும் ஒரு வகை கடல்குதிரையானது பனிரெண்டு அங்குல அளவிற்கு பெரிதாக வளர்கிறது.

கடல்குதிரைகள் வெப்பமான கடல்பகுதிகளில் வாழ்கின்றன. கடல்குதிரைகள் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கக் கடல்பகுதிகளில் அதிக அளவில் வாழ்கின்றன. கடல்குதிரைகள் குளிர்ச்சியான இரத்தத்தை உடையவை. கடல்குதிரைகளுக்கு பற்களும் வயிறும் கிடையாது. கடல்குதிரைகளின் இரண்டு கண்களும் ஒரே சமயத்தில் இரண்டு வெவ்வேறு திசைகளில் நகரும் தன்மை படைத்தவைகளாக உள்ளன. இரண்டு கடல்குதிரைகள் தங்கள் வாலை ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தபடியே பெரும்பாலும் நீந்துகின்றன. கடல்குதிரைகளால் தங்களுடைய வாலை பின்பிறமாக வளைக்க முடியாது.

எந்த உயிரினத்திற்கும் அமையாத ஒரு அதிசயம் கடல்குதிரைக்கு அமைந்துள்ளது. பெண் கடல் குதிரையானது சுமார் 200 முட்டைகளை ஆண் கடல்குதிரையின் முன்பகுதியில் காணப்படும் ஒருவித பை போன்ற அமைப்பில் இட்டு விடுகின்றன. இந்த முட்டைகள் ஆண் கடல்குதிரையின் பைக்குள் சுமார் ஆறு வாரகாலம் வளர்ந்து வெளி வருகின்றன. உயிரியல் உலகத்தில் பெண் முட்டையிட்டு அம்முட்டைகளை ஆண் சுமந்து பிரசவிக்கும் அதிசயமான செயல் இந்த கடல்குதிரை இனத்தில் மட்டுமே காணப்படும் ஒரு நிகழ்வாகும்.

கடல்குதிரைகள் எத்தனை வருடங்கள் வாழ்கின்றன என்பது புரியாத புதிராக உள்ளது. ஆனால் சில ஆராய்ச்சியாளர்கள் கடல்குதிரையானது இரண்டு முதல் மூன்று வருடங்கள் வரை வாழும் என்று தெரிவிக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com