நத்தை ஓர் அதிசய உயிரினம் என்பது உங்ளுக்குத் தெரியுமா குட்டீஸ். பார்ப்பதற்கு மிக எளிமையாக மெதுவாக நகரும் உயிரிங்கள் பல ஆச்சரியமான உடல் அமைப்பைப் பெற்றுள்ளன. அவற்றைப் பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளுவோமா?
நத்தைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. நத்தை இனத்தில் உலகம் முழுவதும் சுமார் 18000 வகைகள் உள்ளன என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?. நத்தைகள் பல்வேறு சூழ்நிலைகளில் வாழக்கூடியவைகளாக உள்ளன. இவை மலைகள், பாலைவனங்கள், தரைப்பகுதிகள், காடுகள் என பல்வேறு இடங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் வாழ்கின்றன.
நத்தைகள் மிகவும் மெதுவாக நகர்ந்து செல்லும் இயல்புடையன. நத்தைகளுக்கு கால்கள் கிடையாது. இவை தங்கள் வயிற்றுப்பகுதியில் அமைந்துள்ள தசைகளின் உதவியால் நகர்ந்து செல்லுகின்றன. இதன் காரணமாகவே இவை மிகமிக மெதுவாக நகர்ந்து செல்லுகின்றன.
நத்தைகளின் வாய்க்குள் அமைந்துள்ள நாக்கில் கூரிய பற்கள் அமைந்துள்ளன. நமக்கு வெறும் முப்பத்தி இரண்டு பற்களே அமைந்துள்ளன. ஆனால் சொன்னால் நம்பமாட்டீர்கள். நத்தையின் நாக்கில் இரம்பம் போன்ற அமைப்பில் சுமார் 25000 பற்கள் அமைந்துள்ளன. இத்தகைய கூரிய பற்களின் உதவியால் நத்தைகள் இலைகள் பழங்கள் போன்றவற்றைச் சாப்பிடுகின்றன.
நத்தைகள் தொடர்ந்தாற்போல பல வருடங்கள் தூங்கும் இயல்புடையவைகளாக உள்ளன. சிலவகை நத்தைகள் தொடர்ந்து மூன்று வருடங்கள் கூட தூங்கும் தன்மையைப் பெற்றுள்ளன.
நத்தைகளிடம் மற்றொரு அதிசயமான விஷயமும் இருக்கு. நத்தைகளின் உடலில் எலும்புகளே கிடையாது என்பது உங்களுக்குத் தெரியாத ஒரு தகவல் அல்லவா ?. உண்மைதான். நத்தைகளின் உடல் மொத்தமும் தசைகளால் ஆக்கப்பட்டுள்ளது.
நத்தை அளவில் சிறியதாக இருந்தாலும் பலம் வாய்ந்த ஓர் உயிரினமாகும். ஒரு நத்தையானது தன்னுடைய உடல் எடையைப் போல சுமார் பத்து மடங்கு எடையுள்ள பொருளைத் தூக்கிச் செல்லக் கூடிய ஆற்றலுடையது. மேலும் நத்தையால் தன் உடல் எடையைப் போல சுமார் இருநூறு மடங்கு எடையுள்ள பொருளை இழுத்துச் செல்ல இயலும் என்பது ஆச்சரியமான ஒரு தகவலாகும்.
நத்தையின் உடலானது சுண்ணாம்புச் சத்தால் ஆன ஒருவகை ஓட்டினால் மூடப்பட்டுள்ளது. ஆமைகளைப் போல இவை ஆபத்து என உணர்ந்தால் தங்கள் உடலை ஓட்டிற்குள் இழுத்துக் கொள்ளும்.
ஓட்டின் முன்பகுதியில் இவற்றின் தலை அமைந்துள்ளது. தலைக்கு மேலே இரண்டு ஜோடி ஆண்டெனாக்கள் அமைந்துள்ளன. ஒரு ஜோடி ஆண்டெனாக்கள் சிறியதாக இருக்கும். மற்றொரு ஜோடி ஆண்டெனாக்கள் சற்று பெரியதாக அமைந்திருக்கும். சிறிய ஆண்டெனாவானது தொடு உணர்வாகச் செயல்படுகிறது. பெரிய ஆண்டெனாவின் முனையில் இவற்றின் கண்கள் அமைந்துள்ளன. நத்தைகளின் பார்வைத் திறன் சற்று குறைவாகும். இவற்றால் சற்று தொலைவில் உள்ளவற்றைப் பார்க்க முடியாது.
நத்தைகளின் உடலின் கழுத்துப் பகுதியில் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகள் அமைந்துள்ளன. கருவுற்ற பதினைந்து நாட்களில் நத்தையானது நிலத்தில் குழியைத் தோண்டி அதற்குள் சுமார் இருபது முட்டைகளை இட்டு குழியை மூடிவிடும். சுமார் நான்கு வாரங்களுக்குப் பின்னர் குஞ்சுகள் பொரிந்து மண்ணுக்குள் இருந்து வெளியே வந்து வளர ஆரம்பிக்கின்றன.
நாம சாதாரணமாக நினைக்கிற நத்தைகள் எவ்வளவு அபூர்வமான ஒரு உயிரினம்னு தெரிஞ்சுகிட்டீங்களா குட்டீஸ். இன்னொரு ஆச்சரியமான தகவல்களோடு அப்புறமா உங்களைச் சந்திக்கிறேன். பை. பை. சுட்டீஸ்.