யானையாய் வந்த அரவிந்தன்!

புராணக் கதை!
யானையாய் வந்த அரவிந்தன்!
Published on
gokulam strip
gokulam strip

ந்தத் துறவியின் பெயர் பாலாஜி. திருப்பதி பெருமாளிடம் அப்படியொரு பிரியம். திருமலையிலேயே ஒரு குடிலை அமைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் பெருமாளை மனம் குளிர தரிசித்தார். ஸ்வாமி தன்னோடு தாயக்கட்டம் ஆடுவதாகக் கற்பனை செய்துகொண்டு பகவான் ஆட்டத்தையும்தானே ஆடுவார்.

“எம்பெருமானே! இன்று நீங்கள் தோற்பதுபோல் தெரிகிறது. அதனால் இதோடு ஆட்டத்தை நிறுத்திக் கொள்வோம். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்கலாம்” என்பார்.

“பரந்தாமா! இன்று ஏன் தாமதம்?” என்று வினவுவார். ‘பக்திப் பைத்தியம்’ என்று பலரும் அவரைக் கேலி செய்தனர். ஒருநாள் ஆசிரமத்துக்குள் ஒளி வெள்ளம் பரவியது. நறுமணம் மூக்கைத் துளைத்தது. படுத்திருந்தவர் தலையைத் தூக்கிப் பார்த்தார். என்ன ஆச்சரியம்!

பட்டுப்பீதாம்பரமும் துளசி மாலையும் சங்கு- சக்கரமும் துலங்க ஏழுமலையான் குடிசை வாசலில் நின்று கொண்டிருந்தார். சாமியாருக்கு நாவே அசைய வில்லை! நெடுஞ்சாண் கிடையாக காலில் விழுந்தார். கைபிடித்து, “வாருங்கள் சுவாமி” என்று உள்ளே அழைத்து வந்தார்.

“பக்தா! நான் விரைவில் திரும்ப வேண்டும். உன் ஆசையை நிறைவேற்ற தாயம் விளையாட வந்திருக்கிறேன். வா” என்றார் பெருமாள்.

காய்களையும் சோழிகளையும் எடுத்து வந்தார் துறவி. “பக்தா! உன் கவனம் எங்கேயோ இருக்கிறது. உன் காய்கள் வெட்டுப்படுவதைப் பார்” என்று புன்னகை செய்தார் பெருமாள்.

“ஸ்வாமி! ஆட்டமா முக்கியம்! தங்களை இத்தனை பக்கத்தில் காண்பது நிஜமா என்று பிரமிக்கிறது மனசு! இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடலமா?” என உருகினார் துறவி.

“அதற்காக வருந்தாதே! நித்தமும் உச்சிக்காலமானதும் சிறிது நேரம் வந்து ஆடிவிட்டுப் போகிறேன்” என வாக்களித்துச் சென்றார் பெருமாள்.

சொன்னபடி தினமும் வந்து தாயம் விளையாடவும் செய்தார்.

ருநாள் பெருமாள் பக்தரின் அன்பை உலகுக்கு உணர்த்தத் தீர்மானித்து, தன் கழுத்திலிருந்த விலையுயர்ந்த முத்தாரத்தைக் குடிலில் விட்டுச் சென்றார்.

பகவான் சென்றதும் முத்தாரத்தைப் பார்த்தார் துறவி. கோயிலுக்கு எடுத்துச் சென்று கொடுக்கலாமா என யோசித்தார். “பகவான் தாயமாட வருவது எவரும் அறியாத செயல். அம்பலப்படுத்தினால் இந்த இன்பம் தடைபடும். நாளை பரந்தாமன் வரும்போது இதைக் கொடுக்கலாம்” என எடுத்து வைத்தார். பொழுது விடிந்தது.

கோயிலில் கொடுத்து விடலாமெனப் புறப்பட்டார். ஆலயத்தில் சுப்ரபாதத்துக்கு ஸ்வாமி நகைகளைக் களைந்தவர்கள் முத்தாரம் குறைவதைக் கண்டு திடுக்கிட்டனர். உத்தரீயத்தை உதறிப் பார்த்தனர். அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினர். கையில் முத்துமாலையுடன் துறவி வருவதைப் பார்த்த சிலர் முத்தாரத்தைப் பறித்துக்கொண்டு, அவரை நையப் புடைத்தனர். அவர் கூறியதை எவரும் நம்பவில்லை.

அதிகாரிகள் அடித்தவர்களைத் தடுத்து துறவி சொன்னதைக் கேட்டனர். பிறகு, “ஐயா! தாங்கள் சொல்வது நம்பும்படி இல்லை. உங்களை ஜெயிலில் போட்டு, கூடவே ஒரு கரும்புக் கட்டையும் வைக்கிறோம். உங்களோடு தாயம் விளையாடிய பெருமாளின் அருளால் அந்தக் கரும்புக்கட்டை நாளைக் காலைக்குள் காலி செய்திருக்க வேண்டும். ஒரு துண்டுக் கரும்பு மிச்சமிருந்தாலும் உங்கள் தலையைத் துண்டித்து ஆலயத்துக்கு முன் தொங்க விட்டு விடுவோம்” எனக்கூறி, அவரைச் சிறையில் தள்ளினர். அந்த அறை முழுவதும் கரும்பு நிறைந் திருந்தது.

துறவி பகவான் நாமாவை உச்சரித்தவாறு அமர்ந் திருந்தவர் அடிவாங்கிய அசதியில் கண்ணயர்ந்தார். ‘நொறுக், நொறுக்’கென்று கரும்பு கடிக்கும் சத்தம் கேட்டு பதறி எழுந்தார்.

வெள்ளை யானை ஒன்று பெருவாரியான கரும்புகளைத் தின்று தீர்த்திருந்தது. கடைசிக் கரும்பை முடித்து, துதிக்கையை அவர் தலையில் வைத்து ஆசீர்வதித்துப் பிளிறியது. பிளிறல் சப்தம் கேட்டு அனைவரும் ஓடி வந்தனர். சிறைக் காவலர்கள் ஆலய அதிகாரிகளை அழைத்து வந்தனர். அவர்கள் பார்க்க யானை சிறைக்கதவுகளை முட்டி உடைத்து வெளியேறி நொடியில் மறைந்தது.

பூட்டிய அறைக்குள் யானை எப்படிப் போயிற்றென்று அதிகாரிகள் திகைக்க, “எம்பெருமானே! பக்தனுக்காக யானை வடிவெடுத்தாயா?” என்று மெய்மறந்து, “கோவிந்தா அரவிந்தா! நாராயணா! கோபாலா!” என கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக நடனமாடினார் துறவி. அவரைத் தலைமை அதிகாரியாகப் பதவி வகிக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதுமுதல் ‘ஹத்திராம் பாலாஜி’ என்றழைக்கப்பட்டார். (ஹத்தி-யானை) வேங்கடேசரின் சேவைக்கே தன்னை அர்ப்பணித்த ஹத்திராம் முடிவில் பெருமாளுடன் இரண்டறக் கலந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com