கண்ணனுக்கு சோறூட்டிய குரூரம்மை!

ஓவியம்; வேதா
ஓவியம்; வேதா
gokulam strip
gokulam strip

-ஆர். பொன்னம்மாள்

லீலாசுகர் என்றழக்கப்படும் பில்வமங்கள சுவாமிகள் குருவாயூரப்பனிடம் மிகுந்த பக்தி கொண்டவர். ‘நடுவில் மடம்’ என்ற இடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார். தினமும் ஆராதனை முடிந்ததும் குட்டிக் கிருஷ்ணர் அவருக்குக் காட்சி தருவார். நிவேதனத்தில் ஒரு பிடி உண்ட பிறகுதான் மறைவார்.

ஒரு நாள் பூஜை முடிந்தும் கிருஷ்ணன் வரவேயில்லை. அதனால் அன்று வில்வமங்கள் பட்டினியாயிருந்தார். “என்ன தவறு செய்தோம்” என்று கலங்கினார்.

மறுநாள் வழிபாடு முடிந்ததும் கண்ணன் தோன்றினான். பில்வ மங்கள் மகிழ்ந்தார். “கிருஷ்ணா! நேற்று ஏன் வரவில்லை?” என்று ஆதங்கத்தோடு கேட்டார்.

“குரூரம்மை பாடிய தாலாட்டில் மெய்மறந்து தூங்கிவிட்டேன்“ என்றார் கிருஷ்ணர்.

“குரூரம்மையா? யார் அவர்? எங்கிருக்கிறார்?” என்று ஆவலோடு விசாரித்தார் பில்வமங்கள்.

“நீ தந்தையைப்போல் பாசம் காட்டுகிறாய்! அவள் யசோதையாகவே மாறிவிட்டாள். அவள் என்னிடம் எதையும் வேண்டுவதில்லை. அக்கறையாய்க் குளிப்பாட்டி, சந்தனத் திலகமிட்டு, சாதம் ஊட்டி, தூங்க வைத்து, குறும்பு செய்தால் கட்டிப்போட்டு... அந்த அன்பு எனக்குப் பிடித்திருக்கிறது. அவள் பார்வைக்கு மட்டுமே நான் தெரிவேன் ஊரார் அவளைப் பக்திப் பைத்தியம் என்கிறார்கள். அவள் அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. ஒருமுறை அங்கு வந்து பாருங்கள்! அவள் உபசரிப்பில் புல்லரித்துப் போவீர்கள்” என்றார் குட்டிக் கண்ணன்.

“வா, இப்போதே போவோம்” பில்வமங்கள் புறப்பட்டுவிட்டார். கண்ணன் முன்னால் நடந்தார்.  கிருஷ்ணன் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் சமரசங்கள் மிகவும் முக்கியம்!
ஓவியம்; வேதா

“அரைமணி பொறுத்துக் கொள்ளுங்கள். பச்சடியும், பாயசமும் செய்து விடுகிறேன்” என்று பரபரவென்று சமையறைக்கு விரைந்தாள் குரூரம்மை.

“அம்மா! நான் இலை போட்டு விட்டேன்” கிருஷ்ணன் கூற, “இப்படியா தலை கீழாகப் போடுவது? நீ பேசாமலிரு. நான் பார்த்துக் கொள்கிறேன்” குரூரம்மை இலையை நேராக்கினாள்.

“அடடா! பெரியவர்கள் மேல் படாமல் தண்ணீர் தெளிக்க வேண்டாமா?” என்று கண்ணனிடமிருந்து தண்ணீர்ப் பாத்திரத்தை குரூரம்மை  பிடுங்கினார்.

“அதனால் என்ன? குழந்தைதானே” என்றார் சுவாமிகள்.

“ஸ்வாமி! இவன் அதிகப் பிரசங்கி. எனக்கு உபகாரம் செய்கிறானாம். பாருங்கள். பச்சடி வைக்கும் இடத்தில் அவியலை வைக்கிறான்” அவியல் பாத்திரத்தை வாங்கிக்கொண்டு அதட்டினாள் குரூரம்மை.

‘ஒரு தடவை தரிசனம் தந்து ஓர் ஊருண்டை நிவேதனம் சாப்பிட்டதற்கே கர்வம் கொண்டிருந்தோமே! இங்கே இந்தத் தாய்க்கு விளையாட்டுக் காட்டுகிறாரே கண்ணபிரான்’ என்று நெகிழ்ந்தபடி சாப்பிட்டார் பில்வமங்கள்.

அவருக்குத் தயிரை ஊற்றிவிட்டு “இவனுக்கும் பசிக்கும்” என்றபடி ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் சுடச்சுட சாதத்தையும், பருப்பையும், நெய்யையும் போட்டுக் குழையப் பிசைந்து, கொஞ்சம் ரசத்தைச் சேர்த்தார். ‘சூடு ஆறினால் செரிக்காது’ என்றபடி கண்ணனை மடியில் இருத்தி, தலையைக் கோதி, நெல்லிக்காயளவு உருட்டி ஊட்டிவிடும் அழகை ஓரக்கண்ணால் ரசித்தார் சுவாமிகள். நேரே பார்த்தால் திருஷ்டி பட்டுவிடும் என்று குரூரம்மை எழுந்து போய் விடுவாளோ என்ற பயம்.

குரூரம்மை...
குரூரம்மை...

விருந்துண்டபின் விடை பெற்றார் ஸ்வாமிகள். கண்ணனை மெத்தையிலிட்டுத் தூங்க வைத்துக் கொண்டிருந்தாள் குரூரம்மை.

ஒரு நாள் நீண்ட நேரம் தியானத்திலாழ்ந்திருந்தார் சுவாமிகள். அவரது தியானத்தில் யசோதை மடியில் படுத்தபடி கண்ணன் தயிர்ப் பானையைத் தனது குட்டிப் பாதங்களால் எட்டி உதைத்து உடைக்கும் காட்சி தெரிந்தது.

கிருஷ்ணன் அவரைச் சோதிக்கப் பக்கத்து வீட்டுச் சிறு பையன் வடிவில் வந்தார். அபிஷேக நீரைக் கொட்டி, அரைத்து வைத்தீருந்த சந்தனத்தைப் பூசிக் கொண்டு, நைவேத்தியப் பொங்கலைச் சாப்பிட்டு விட்டார். ஸ்வாமிகளின்  தியானம் கலைந்தது. “உன் வீட்டுக்குப் போ” என்று புறங்கையால் தள்ளினார்.

சிறுவன் சட்டென்று மறைந்துவிட்டான். வந்தது மதுசூதனன் என்று பின்னர் உணர்ந்து வருந்தினார்.

‘அனந்தங்காட்டுக்கு வா! தரிசனம் தருகிறேன்” என்று விக்கிரத்திலிருந்து குரல் வந்தது. ஆறு மாதங்கள் அலைந்து அனந்தங் காட்டில் சயனகோல பத்மநாபரைத் தரிசித்தார். அந்த அனந்தங்காடே தற்போது திருவனந்தபுரம் என்றழைக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com