சிறுவர் கதை: நிலவை அழைத்த குழந்தை இராமன்!
அயோத்தி நகரம். தசரத சக்ரவர்த்தியின் மாளிகை. அரண்மனையின் நிலா முற்றத்தில், தசரதனின் மனைவியர் நிலவைக் காட்டிக் குழந்தைகளுக்குச் சோறூட்டிக் கொண்டிருந்தார்கள். “நிலா, நிலா வா வா” என்று கூப்பிட்டால் நிலவு உன்னருகில் வந்து விளையாடும், கூப்பிட்டுப் பார் என்று சொல்லியபடியே குழந்தைகளுக்கு உணவளித்துக் கொண்டிருந்தார்கள்.
நிலவைப் பார்த்துக் கொண்டிருந்த பால இராமன், கொஞ்சும் மழலை மொழியில் நிலவைக் கூப்பிட்டான். குழந்தையின் மழலையில் மயங்கிய அன்னையும், செவிலியர்களும், மேலும் பேசும்படிக் குழந்தையைத் தூண்டினார்கள். வாய் மொழியுடன், கண்ணசைத்து நிலவை வரச் சொன்னான் பால இராமன்.
ஆசையுடன் அழைத்தும் ஏன் நிலவு வரவில்லை என்று பாலகனின் முகம் வாடியது. உதடுகள் துடித்தன. விசும்ப ஆரம்பித்தான் பால இராமன். சந்திரனுக்கு தர்ம சங்கடம். கூப்பிடுவது பரம்பொருள் என்பது சந்திரனுக்குத் தெரியும். உலக நாயகன் கூப்பிடும் போது போக வேண்டாமா? ஆனால், தான் செல்ல வேண்டிய பாதையிலிருந்து மாறலாமா? இல்லை. அது தவறு என்று நினைத்தான் சந்திரன்.
நிலா ஏன் இன்னும் வரவில்லை. என்னுடைய விசும்பலைப் பார்த்த பின்பும், அதன் மனது மாறவில்லையே. விசும்பல் அழுகையாக மாறியது. வாய் விட்டு பால இராமன் அழ ஆரம்பித்தான். இராமன் அழுவதைப் பார்த்த இளைய சகோதரர்களும் அழ ஆரம்பித்தனர். சக்கரவர்த்தியின் மனைவிகளுக்கும், மற்ற செவிலியர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. குழந்தைகள் அழுவதை நிறுத்துவதற்கும், அவர்களை சமாதானம் செய்வதற்கும் வழி தெரியாமல் திகைத்தனர்.
குழந்தைகளின் அழுகுரல், சக்கரவர்த்தி தசரதனை நிலா முற்றத்திற்கு வரச் செய்தது. “பாடுங்கள், ஆடுங்கள், வேறு ஏதாவது பொருளைக் கொடுத்து குழந்தைகள் மனதை திசை திருப்புங்கள்" என்று ஆணையிட்டார்.
என்ன செய்தும் தசரத குமாரர்கள் அழுகை நிற்கவில்லை. அண்ணன் இராமன் அழுகையை நிறுத்தினால், தம்பிகளும் அழுகையை நிறுத்துவார்கள். எதைக் கொடுத்து இராமன் மனதை மாற்றுவது என்று புரியாமல் தவிக்கும் போது, கைகேயியின் செவிலித் தாய் மந்தரை வந்தாள். வாய் அகண்ட வெள்ளிப் பாத்திரத்தில் தெளிந்த நீர் நிரப்பிக் கொண்டு, நீர் நிறைந்த வெள்ளிப் பாத்திரத்தை நிலா முற்றத்தில் வைத்தாள். வெள்ளிப் பாத்திரத்திலிருந்த தண்ணீரில் சந்திரனின் பிம்பம் தெரிந்தது.
பால இராமனைக் கையிலேந்திக் கொண்டு அவனுக்கு நீரிலிருந்த சந்திரனின் பிம்பத்தைக் காண்பித்தாள் மந்தரை. சந்திரனை அருகில் பார்த்த இராமன் கல கலவென்று சிரித்தான். தம்பிகளும் சிரிக்கத் தொடங்கினர். அரண்மனையில் மகிழ்ச்சி வெள்ளம் பரவத் தொடங்கியது.