-R.Abhishek, III Standard
மான் ஒன்று காட்டில் துள்ளி குதித்து ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நாள் சற்றும் எதிர்பாராத விதமாக பெரிய கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. வெளியே வர முயற்சி செய்தும் அதனால் வெளிவர முடியவில்லை. அதனால் கிணற்றுக்குள் இருந்தபடியே கத்தி கூப்பாடு போட்டது.
அந்தப் பக்கமாக வந்த ஓநாய் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தது. "ஏன் இப்படி கத்துகிறாய்? உனக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டதும், மான் பயந்து போய் 'இதனிடம் மாட்டி விட்டோமே, என்ன செய்வது' என்று யோசித்து ஒரு ஐடியா பண்ணியது.
"உலகம் அழியப் போகிறதாம். அதனால்தான் பாதுகாப்பாக இந்த கிணற்றுக்குள் வந்து விட்டேன். மற்றவர்களும் பாதுகாப்பாக இங்கு வந்து தங்குவதற்காக தான் இப்படி கத்தி கூச்சல் போடுகிறேன்" என்றது.
ஓநாய் உடனே பயந்து விட்டது. "என்ன சொல்கிறாய், உலகம் அழியப் போகிறதா?" என்று பயத்துடன் கேட்டது. "ஆமாம் நேற்று இரவு என் கனவில் கடவுள் வந்து உலகம் அழியப் போகிறது என்றும், இந்த கிணற்றில் இருப்பவர்கள் மட்டும் உயிர் பிழைப்பார்கள் என்றும் கூறினார்" என்றது மான்.
ஓநாய் பயந்து போய் "நானும் இந்த கிணற்றுக்குள் குதித்து விடுகிறேன்" என்றது. "தாராளமாக குதி; ஆனால் அதற்கு முன் மற்றவர்களையும் அழைத்து வா. அத்துடன் இந்த கிணற்றுக்குள் இருப்பதாக இருந்தால் ஒரு கண்டிஷன். இங்கு வந்து விட்டால் தும்மக் கூடாது. அப்படியே தும்மினால் வெளியே தூக்கி போட்டு விடுவேன். உன்னால் மற்றவர்கள் சாகத் தயாராக இல்லை" என்று கூறியது மான்.
ஓநாயும் ஒத்துக் கொண்டு மற்ற மிருகங்களையும் அழைத்து வந்தது. யானை, கரடி, ஓநாய், முயல், நரி என அனைத்து மிருகங்களும் கிணற்றுக்குள் வந்துவிட்டன. தும்மினால் தூக்கி எறிந்து விடுவார்கள் என்று பயந்து எல்லா மிருகங்களும் மூக்கை பொத்தியபடி இருந்தன.
நிறைய மிருகங்கள் வந்துவிட்டதால் கிணற்றுக்குள் இடம் போதவில்லை. எல்லா மிருகங்களும் ஒன்றை ஒன்று நெருக்கி கொண்டு நின்றது. இதுதான் சமயம் என்று நினைத்த மான் 'ஹச்' என்று பெரிதாக தும்மியது. "மானை தூக்கி வெளியே போடுங்கள்" என்று நரி கத்த, யானை தன்னுடைய தும்பிக்கையால் தூக்கியதும், "வேண்டாம் என்னை வெளியே தூக்கி எறிந்து விடாதே" என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டது மான்.
"அதெல்லாம் முடியாது உன்னால் நாங்கள் எல்லோரும் ஆபத்தில் சிக்க முடியாது" என்று யானை மானைத் தூக்கி வெளியே எறிந்தது. 'அப்பாடி ஒரு வழியாக அந்தப் பெரிய கிணற்றிலிருந்து தப்பித்தோம்' என்று எண்ணியபடி துள்ளி குதித்து ஓடியது மான். தன்னுடைய புத்திசாலித்தனத்தால் அழகாக தப்பித்தது மான்.