
ஒரு பெரிய காட்டின் நடுவில் மலையின் மேல் ஒரு கோயில் இருந்தது. அங்கு ஒவ்வொரு ஞாயிறன்றும் புள்ளிமான் தன் குட்டிகளுடன் வரும். அதற்கு காரணம் அந்த ஆலயத்தின் வெளியில் நன்கு பராமரிக்கப்பட்ட நந்தவனம் ஒன்று இருந்தது. இந்த நந்தவனத்தில் விதவிதமாய் பூக்கள் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும்.
இந்த நந்தவனத்தில் விதவிதமான பூத்துக் குலுங்கும் பூக்களை பார்ப்பதற்காக குட்டி மான் ஒன்று மற்றும் மற்ற மிருகங்களின் குட்டிகளும் அங்கே வரும். பெரியவர்கள் பிரார்த்தனையில் இருக்க, குட்டிகள் சேர்ந்து கொண்டு நந்தவனத்தில் மகிழ்ச்சியாக ஓடி ஆடி ஆட்டம் போடும் . கோயிலை சுற்றி நிறைய சிறுகடைகளும் உண்டு. அங்கே தின்பதற்கு தின்பண்டங்கள் இருந்ததால் நிறைய விற்பனை ஆகும். அதனை குட்டிகளும் வாங்கி சாப்பிடும் .
குட்டி மானுக்கு இந்த நந்தவனத்தில் பிடிக்காத விஷயம் இருந்தது. அது அங்கு மரத்தில் இருந்த குரங்கு குட்டிகள். அவைகள் பார்ப்பதற்கு மயில்களை போன்று அழகாக இருக்காது. அருவருப்பாக இருக்கும். அதனால் குரங்குகளை விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாது. அவைகள் மரத்தின் கிளைகளில் பரிதாபமாக அமர்ந்தபடி இவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்க்கும்.
ஒரு நாள் குட்டி மானின் அம்மா குட்டியிடம், 'அந்தக் குரங்குக் குட்டிகளை விளையாட்டில் சேர்ப்பதில்லை, ஏன் ?' என்று கேட்டது. இதற்கு குட்டிமான், 'அதுங்க என்ன அழகாவா இருக்கு? அவங்களை எப்படி விளையாட்டுல சேர்க்க முடியும்?' எனக் கேட்டது.