சிறுவர் சிறுகதை - நந்தவனத்தில் நாகம்!

ஓவியம்: பிள்ளை
ஓவியம்: பிள்ளை

-கமலா முரளி

“கொற்றவை கோயிலில் திருவிழாவா, திலகா?” என்று கேட்டாள் சிறுமி சித்ரதேவி.

“ஆம் சித்ரதேவி. நமது மன்னர் வீரகேசரியின் மைத்துனரும், பிரதான மந்திரியும் ஆன களபகேசரியார் விஜயம் செய்கிறாராம்” என்று பதிலளித்தாள் திலகா.

“நம் போன்ற சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை, மாலைகள், அணிகலன்கள் வழங்கிட அரசியார் மாசில்லா மரகதமணியார் வருவதாக எனது அன்னை சொன்னார்கள்” என்றாள் கலையழகி.

“கொற்றவை கோயில் நிர்வாக அதிகாரிணி சீதையம்மா நந்தவனத்தில் இருந்து மலர்கள் பறித்துவர என்னிடம் சொல்லி இருக்கிறார். நான் அங்குதான் சென்றுகொண்டு இருக்கிறேன்.” - திலகா.

“நாங்களும் வருகிறோம்” எனச் சொல்லிக்கொண்டு, திலகாவுடன் தோழியர் இருவரும் குதியாட்டம் போட்டுக்கொண்டு நந்தவனத்துக்குச் சென்றனர்.

தோட்டக்காரர் பரமசிவனார், “சிறுமிகளா, எங்கே இந்தப்பக்கம்?” என்று கேட்க,

“சீதையம்மா, கொற்கை கோயிலுக்கு மலர்கள் பறித்து வரச் சொன்னார்” என்றாள் கலை.

“இரண்டு தினங்களாக ஒரு நாகம் இப்பகுதியில் சுற்றிவருகிறதே. சிறுமிகளான உங்களை நான் எப்படி அனுமதிப்பேன்?”

”ஐயா, நாளை கோயிலில் சிறப்பு பூஜைகள் உள்ளதால், நாங்களும் சிறு சிறு உதவிகள் செய்ய நினைக்கிறோம்.” - சித்ரதேவி.

”பயமெதற்கு ஐயா, நம் மாத்தூரில் இதுவரை நாம் பாம்புகளைப் பார்த்ததே இல்லையா? நாங்கள் கவனத்துடன் இருப்போம். கழிகள் இருந்தால் கொடுங்கள்.” - திலகா.

கழிகளைத் தேடி எடுத்துக்கொண்டு வந்தார் தோட்டக்காரர்.

“திலகா, நீதான் பொறுப்பு! கழிகளால், செடிகளைத் தட்டி சத்தம் செய்யுங்கள். ஏதாவது அசைவு இருக்கிறதா எனப் பார்த்து தள்ளிச் செல்லுங்கள்.”

“நிச்சயம் ஐயா! சித்ரா, கலை… நாம் மூவரும் ஏதாவது பாடிக்கொண்டே அல்லது பேசிக்கொண்டே இருந்தால்கூட மிக நல்லது.”

“இப்படி பயந்துகொண்டே இந்த வேலையைச் செய்ய வேண்டுமா?” - கலை.

“பயந்தால் எந்த வேலையையும் செய்யமுடியாது. இந்நேரம் நாம் போடும் சத்தத்திலேயே பாம்பு பயந்து, அதன் புற்றுக்குப் போக ஆரம்பித்து இருக்கும்” என்றாள் திலகா.

“நான் உங்களோடே இருக்கிறேன். நான் பூக்களைப் பறித்துத் தருகிறேன். நீங்கள் குடலைகளில் சேமித்துக்கொள்ளுங்கள்” என பரமசிவனார் தீர்மானமாகக் கூறிவிட்டார்.

வெளிப்புறக் கிளைகளில், ஆபத்தில்லை என திலகா சில மலர்களைப் பறித்தாள்.

இதையும் படியுங்கள்:
இதோ சுவையான 8 வகை Cold coffee ரெசிபிஸ்!
ஓவியம்: பிள்ளை

அவ்வப்போது கழிகளால் தட்டிக்கொண்டு, பாடல்கள் பாடிக்கொண்டு… தோழிகள் நாகத்தைப் பற்றி மறந்தே விட்டனர்.

பெரிய பெரிய குடலைகளில் வண்ண வண்ண மலர்களைக் கண்டு அவர்கள் குதூகலமாக இருந்தனர்.

அப்போதுதான், வேலியின் ஓரத்தில் சரசரவென ஒரு சத்தம்!

இளமஞ்சளும் பச்சையுமாக ஒரு பாம்பு வேகமாக விரைந்துகொண்டு இருந்தது.

கலையும், சித்ராவும் தங்கள் கழிகளை அதன் மீது வீச எத்தனித்தனர்.

“வேண்டாம், விட்டு விடுங்கள்” எனச் சன்னமான குரலில் சொன்னாள் திலகா.

நொடிப்பொழுதில் நாகம் அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டது.

“இந்த பூமி எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. பிற உயிர்களை அவசரகதியில் கொல்வது மிகமிகத் தவறு.” - திலகா.

”நம்மை அச்சுறுத்துகிறதே! நம்மைக் கடித்துவிட்டால், நம் உயிர் போய்விடுமே!” சித்ரதேவி.

“ஆஹா! நேற்று ஒரு கரப்பான் பூச்சியைக் கொன்றாயே, அது முறையா? நம் உயிருக்கு அச்சுறுத்தலான ஆபத்துக்காலங்கள் தவிர, பிற உயிரையும் நம் உயிர்போல் மதிக்க வேண்டும்” என்றாள் .

“சரி, சரி, கிளம்புங்கள்… நாளை களபகேசரியார் வருவதற்குள்ளாவது மலர்களை சீதையம்மாவிடம் கொண்டு சேருங்கள்” என பரமசிவனார் கூற தோழிகள் சிரித்தபடி கிளம்பினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com