
பீர்பாலை எப்படியாவது எந்த விஷயத்திலாவது வென்று விட வேண்டும் என்று நினைத்த அக்பர் பாதுஷா ஒருநாள் தனது அமைச்சர் பெருமக்களுடன் கலந்து ஒரு திட்டம் தீட்டினர். திட்டம் இதுதான், ஒவ்வொரு அமைச்சரிடம் கோழிமுட்டை ஒன்று வழங்கப்படும். அவர்கள் அரண்மனை தோட்டத்திலே இருக்கும் குளத்திலே முட்டைகளை போட்டு விடவேண்டும்.
பின்னர் பாதுஷா ஆணையிடும் சமயத்தில் அந்த முட்டைகளை அவரிடம் கொண்டு வந்து சேர்ப்பிக்க வேண்டும். திட்டமிட்டபடி முட்டைகளை குளத்தில் போட்டுவிட்டு வந்தனர் அமைச்சர் பெருமக்கள். சில நாட்களில் பீர்பால் அங்கு வந்து சேர்ந்தார். அக்பர் பாதுஷா பேசத் தொடங்கினார்.
பீர்பால் நேற்று இரவு நான் ஒரு விசித்திரமான கனவு கண்டேன். ஒரு சன்னியாசி என் முன் காட்சி தந்தார். உமது அமைச்சர்கள் எல்லோரும் உமது அரண்மனையில் குளித்து மூழ்கி ஆளுக்கொரு கோழி முட்டை எடுத்து வந்து உமது கரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் உம்மிடம் நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள் என்று பொருள் என என்னிடம் தெரிவித்தார்.
இந்த கனவில் ஏதோ உண்மை இருக்க வேண்டும் என்று என்று எனக்கு தோன்றுகிறது. அதனால் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் குளத்தில் மூழ்கி ஆளுக்கு ஒரு கோழி முட்டை வந்து எடுத்து வந்து என்னிடம் சேர்ப்பித்தால் உங்களது நன்றி உணர்வை நான் தெரிந்து கொள்ள இயலும் என கருதுகிறேன் எனவே எல்லோரும் இந்த சோதனையில் உடனடியாக ஈடுபடுங்கள் என ஆணையிட்டார்.
ஏற்கனவே திட்டமிட்டபடி ஏனைய அமைச்சர்கள் எல்லோரும் மிகுந்த உற்சாகத்துடனும் அநாயசத்துடனும் குளத்தில் குதித்து மூழ்கினர். ஆளுக்கொரு கோழி முட்டையை வெளியே எடுத்து வந்து பாதுஷாவின் கரத்தில் சேர்ப்பித்தனர். இந்த அதிசயம் எப்படி நடைபெறுகிறது என்று எண்ணி வியந்து கொண்டிருந்தார் பீர்பால். என்றாலும் பாதுஷா ஏதோ திட்டமிட்டு இந்த காரியத்தை நிறைவேற்றுகிறார் என்பது அவருக்கு புரிந்துவிட்டது. அது மட்டுமல்ல தன்னை மட்டும் தட்டுவதற்கு முயற்சி செய்கிறார் அவர் என்பதையும் உணர்ந்தார். பீர்பால் இந்த சோதனையில் நாம் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று திட்டமிட்டபடி குளத்தில் உள்ளே மூழ்கினார் பீர்பால்.
சில வினாடிகள் கழித்து வெறுங்கையராக வெளியே வந்தார்.
அவரைப் பார்த்து அக்பர் பீர்பால் எல்லாரும் நீரில் மூழ்கி வெளியே வரும்போது முட்டையும் கையுமாக வந்தனர். நீர் வெறும் கையுடன் வருகிறாரே உமக்கு மட்டும் முட்டை கிடைக்கவில்லையா என்ன துரதிர்ஷ்டம் என்று போலியாக வருத்தப்பட்டார்.
உடனே பீர்பால் பாதுஷா அவர்களே, கோழிகள்தானே முட்டையிடும். நான் கோழி அல்ல சேவல் என்று பதில் அளித்தார்.
பீர்பாலை வெல்ல நினைத்தோம் அது முடியவில்லை என்று எண்ணிய அக்பர் பாதுஷா அவரது அறிவு கூர்மைக்கு பாராட்டு நல்கினார்.