சிறுவர் கதை - முன்னேறிச் செல்!

poor wood cutter
children story
Published on

ர் ஏழை விறகு வெட்டி அருகில் இருந்த காட்டுக்கு நாள் தோறும் சென்று விறகு வெட்டி  அதனால் கிடைக்கக் கூடிய சொற்ப வருவாயில் சிரமத்துடன் வாழ்ந்து வந்தான்.

ஒரு நாள் வழக்கப்படி அவன் விறகுகளை வெட்டி கொண்டிருந்தபோது  தற்செயலாக அந்த வழியே வந்த பிரம்மசாரி ஒருவர் விறகு வெட்டியை நோக்கி “அப்பா! மேலும் நீ முன்னேறி செல்” என்று சொல்லி விட்டு தம் வழியே போய்விட்டார்.

வேலை முடிந்து விறகு வெட்டி வீட்டிற்கு சென்ற பிறகு பிரம்மசாரி சொல்லி விட்டுப் போனதைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தான். “அந்த பிரம்மசாரி அப்படிச் சொன்னதில் ஏதாவது பொருள் இருக்க வேண்டும், நான் காட்டுக்கு உள்ளே சென்று பார்க்கிறேன்” என்று தனக்கு தானே முடிவு செய்தான்.

மீண்டும் காட்டுக்கு சென்ற போது அவன் வழக்கமாக தான் விறகு வெட்டும் இடத்தையும் கடந்து உள்ளே போனான். அப்போது உட்பகுதிகளில் சந்தன மரங்கள் இருப்பது தென்பட்டது. மகிழ்ச்சியோடு அவற்றை வெட்டி வண்டி வண்டியாக ஊருக்குள் கொண்டு வந்தான். சந்தையில் அவற்றை விற்றதனால் அவனுக்கு ஏராளமான பணம் கிடைத்தது. இவ்விதம் சிலகாலம் கடந்தது. மீண்டும் விறகு வெட்டிக்கு பிரம்மசாரி யின் நினைவு வந்தது. அவர் “மேலும் முன்னேறி செல்” என்று சொன்னதை நினைத்து பார்த்தான்.

மறுநாள் விறகு வெட்டி சந்தன மரங்களைக் தாண்டி காட்டுக்குள் சென்றான். அப்போது அங்கே ஒரு தாமிர சுரங்கம் இருப்பதை கண்டான். தன்னால் இயன்ற அளவுக்கு தாமிரத்தை எடுத்து ஊரிலே விற்றான்.அதனால் பெரும் பணக்காரர்களில் ஒருவன் ஆனான். ஆனால் அவன் அத்துடன் நிறுத்தி விடவில்லை. பிரம்மசாரி சொன்ன வார்த்தை அவன் உள்ளத்தில் ஆழமாக பதிந்து இருந்தது. மீண்டும் மகான் சொன்னதை சிந்தித்தான். பிறகு தாமிரம் கிடைத்த இடத்தையும் தாண்டி காட்டுக்கு உள்ளே சென்றான். அவனது நம்பிக்கையும், முயற்சியும் வீண் போகவில்லை. அன்றையத்தினம் அவன் ஒரு நதிக்கரையிலே ஒரு வெள்ளிச் சுரங்கமே  இருப்பதைக் கண்டான். இப்படிப்பட்ட ஒரு பெரிய வாய்ப்பை அவன் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. சுரங்கத்தி லிருந்து வெள்ளியை எடுத்து விற்று பெரும் புள்ளியாக கொழுத்த பணக்காரன் ஆகிவிட்டான்.

இப்படியே நாளுக்கு நாள் அவன் மேலும் மேலும் காட்டின் உட்பகுதிகளில் சென்று கொண்டே இருந்தான்.அப்படி அவன் ஆழ்ந்து செல்ல செல்ல, தங்கச் சுரங்கமும், வைரச் சுரங்கமும் இருந்ததைப் பார்த்தான். தங்கத்தையும், வைரக் கற்களையும் குவியல் குவியல்களாக  கொண்டு வந்தான். அவற்றினால் அவனுக்கு அளவில்லாத ஐசுவரியம் கிடைத்தது. குபேரனை போல பணக்காரன் ஆனான்.

இதையும் படியுங்கள்:
ரஷ்ய நாட்டுக்கதை - இரு கிழவிகள்!
poor wood cutter

கடவுளை அடைய விரும்புபவர்களுடைய விஷயமும் இப்படி பட்டது தான்  ஏதோ சிறிது ஞான விழிப்பு வந்து விட்டால், சாதகன் ஒருவன் தனக்கு கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைத்து விட்டது என்று நினைத்து ஏமாந்து போய்விடக்கூடாது. ஏதோ சில அபூர்வமான சித்திகள் கிடைக்குமானால், அவற்றுடன் திருப்தி அடைந்து நின்று விடவும் கூடாது. விறகு வெட்டியை போல சாதகன் ஒருவன் மேலும் மேலும் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறிச் சென்று கொண்டே இருக்க வேண்டும். அப்படி உண்மையாகவே ஒருவன் செய்தால் மேலானதும், உயர்வற உயர்ந்ததுமாகிய கடவுளின் தரிசனமே ஒருவனுக்கு கிடைத்து விடும். செல்வங்களிலேயே தலையாயதாகிய ஒப்புயர்வற்ற ஞானச் செல்வம் அவனுக்குச் சொந்தமாகி விடும்.

ஆகவேதான் எந்த காரியத்தை செய்தாலும் சரி முன்னேறி போகப் போக இன்னமும் அதிகமான அளவில் நல்ல நல்ல பொருட்கள் கிடைக்கப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com