கிறிஸ்துமஸ் தாத்தா சாண்டா க்ளாஸ்!

Christmas Thatha Santa Claus
Christmas Thatha Santa Claus

கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்களும், மற்றவர்களும் உற்சாகத்துடன் கலந்து கொள்ளும் பண்டிகை கிறிஸ்துமஸ். கிறிஸ்துமஸ் என்றவுடன் நினைவுக்கு வருபவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மரம், கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் கேக். “நான் இந்த வருடம் சமத்துப் பிள்ளையாக இருந்தேன்”, ஆகவே சாண்டா க்ளாஸ் எனக்கு நல்ல பரிசுகள் தருவார் என்று ஆவலோடு எதிர்பார்க்கும் குழந்தைகள். சிவப்பு நிறத்தில் உடையும், குல்லாவும் அணிந்து வரும் வேடிக்கை மனிதராகக் குழந்தைகள் அவரைப் பார்க்கின்றன.

சாண்டா க்ளாஸ் துருக்கியில் கி.பி. 280ஆம் வருடம் பிறந்த செயிண்ட் நிக்கோலஸ் அல்லது கிரிஸ் கிரிங்கல் என்றழைக்கப்பட்ட பாதிரியார் வடிவம் என்ற கருத்து நிலவுகிறது. அந்த பாதிரியாரின் மனிதாபிமான குணத்தையும், பிரதிபலன் கருதாமால் மற்றவர்களுக்கு உதவி செய்யும் தன்மையைப் பற்றியும் பல புராணக் கதைகள் உள்ளன. தனது பரம்பரை செல்வத்தைத் துறந்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதற்காக கிராமத்திற்குச் சென்று வசித்தார். வறுமையினால் தன்னுடைய மூன்று பெண்களை அடிமைகளாகவும், தாசிகளாகவும் விற்க தலைப்பட்ட மனிதருக்கு, பணம் அளித்து, பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்க உதவி செய்தார். அவருடைய புகழ் பரவ, செயிண்ட் நிகோலஸ் மாலுமிகளுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாவலன் என்று அறியப்பட்டார்.

செயிண்ட் நிக்கோலஸ் மரித்த நாளான டிசம்பர் 6, புனித நாளாகக் கருதப்படுகிறது. பொருட்கள் வாங்குவதற்கும், மணம் செய்து கொள்வதற்கும் இந்த நாள் அதிர்ஷ்ட நாள் என்ற கருத்து நிலவுகிறது. 18ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்த டச்சு நாட்டவர், டிசம்பர் 6ஆம்தேதி செயிண்ட் நிகோலஸ் இறந்த தினத்தைக் கொண்டாடும் வழக்கத்தை ஆரம்பித்தனர். செயிண்ட் நிகோலஸின் டச்சு புனை பெயர் சின்டர் கிளாஸ். இதிலிருந்து உருவானது சாண்டா கிளாஸ் என்ற பெயர். இந்த பெயர் பிரபலமாக, நீல நிற முக்கோண வடிவத் தொப்பி, சிவப்பு வண்ண ஆடை, மஞ்சள் நிற காலுறைகள் அணிந்த சாண்டா கிளாஸ் உருவங்கள் பிரபலமாகின.

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து, குழந்தைகளை மையமாகக் கொண்டு அவர்களுக்குப் பரிசளிப்பது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் மிக முக்கிய பகுதியாக மாறியது. கிறிஸ்துமஸ் விற்பனையை விரிவுபடுத்த, குழந்தைகளின் கவனத்தை ஈர்க்க, சாண்டாகிளாஸ் படங்கள் பயன் படுத்தப்பட்டன. ஏழை எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று உணவு வழங்க சால்வேஷன் ஆர்மிக்கு பணம் தேவைப்பட்டது. ஆகவே, அவர்கள் வேலையில்லாத ஆண்களை சாண்டாகிளாஸ் உடையில் அலங்கரித்து, மக்களிடமிருந்து நன்கொடை பெற நியூயார்க் நகர சாலைகளுக்கு அனுப்பினர். இதுவும் சாண்டாகிளாஸ் பிரபலமடைய ஒரு காரணம்.

உலகில் மற்ற நாடுகளிலும் சாண்டாகிளாஸ் போன்ற உருவங்கள் வந்து குழந்தைகளுக்கு பரிசளிப்பதாக நம்பிக்கை வளர்ந்தது. சுவிஸ் மற்றும் ஜெர்மனியில் ‘கிறிஸ்ட்கைண்ட்’ என்ற தேவதை நல்ல நடத்தை கொண்ட குழந்தைகளுக்கு பரிசளிப்பதாக நம்பிக்கை. ஸ்காண்டிநேவியாவில், ‘ஜூல்டோம்டன்’ என்ற தேவதை ஆடுகளால் இழுக்கப்படும் பனிசறுக்கு வாகனத்தில் வந்து பரிசுகள் வழங்குவதாகக் கருதப்படுகிறது. கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவன்று கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளின் காலுறைகளை பரிசுகளால் நிரப்புவதாக ஆங்கிலப் புராணக் கதைகள் கூறுகின்றன. பிரெஞ்சு குழந்தைகளின் காலுறைகளில் பரிசை நிரப்புவது ‘பெரே நோயல்’ என்ற தேவதை. இத்தாலியில், ‘லா பெஃபனா’ என்ற கனிவான சூனியக்காரி, துடைப்பத்தில் சவாரி செய்து வீடுகளின் புகை போக்கி வழியாக நுழைந்து, நல்ல நடத்தை கொண்ட குழந்தைகளின் காலுறைகளில் பரிசை நிரப்புவதாக கருதப்படுகிறது. பனியில் சறுக்கி ஓடும் கலைமான்கள் பூட்டிய வண்டியில் பறக்கும் ‘சாண்டாகிளஸ்’ அமெரிக்காவில் ஒவ்வொரு வீட்டிற்கும் பரிசளிக்க புகை போக்கி மூலம் வருவதாக நம்பிக்கை. ஆகவே, புகை போக்கி அருகே காலுறைகளை மாட்டி வைப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
Christmas in Canada!
Christmas Thatha Santa Claus

வட துருவத்தில் சாண்டா தன்னுடைய மனைவியுடன் வசிப்பதாக நம்பிக்கை. கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவு குழந்தைகள், உறங்கச் செல்வதற்கு முன்னால், சாண்டாவிற்கு பால் மற்றும் குக்கீகளையும், கலைமான்களுக்கு கேரட்களையும் புகைபோக்கி அருகில் வைப்பார்கள். கிறிஸ்துமஸ் தினத்தன்று யாரெல்லாம் பரிசுக்குத் தகுதியானவர்கள் என்பதை முடிவு செய்ய சாண்டா “குறும்பு குழந்தைகள் பட்டியல்” மற்றும் “சமத்துக் குழந்தைகள் பட்டியல்” வைத்திருப்பதாக பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சொல்வதுண்டு. இது குழந்தைகளை நல்வழிப்படுத்த உதவும் என்பது அவர்கள் நம்பிக்கை.

தன்னுடைய நல்ல நடத்தையைப் பற்றியும், என்ன பரிசு வேண்டும் என்றும் சாண்டாவிற்கு கடிதங்கள் எழுத குழந்தைகள் ஊக்குவிக்கப் படுகிறார்கள். கடந்த 40 வருடங்களாக, கனடாவின் மாண்ட்றீல் நகரில் சாண்டாவிற்கு குழந்தைகள் எழுதும் இலட்சக் கணக்கான கடிதங்களைப் படித்து பதில் எழுதுவதற்கு பல்லாயிரக் கணக்கான சமூக ஆர்வலர்கள் பணி புரிகிறார்கள். கனடாவில், சாண்டாவிற்கான தனியான போஸ்டல் பின் கோடு H0H0H0.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com