

கிறிஸ்துமஸ் மரமும், கிறிஸ்துமஸ் பாடலாகிய 'அமைதியான இரவும்' (Silent Night) இல்லாமல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிறைவடையாது. இவை இரண்டிற்கும் தனித்தனிச் சிறப்புகள் உண்டு. அவை என்னவென்று பார்ப்போமா?
கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்து, வீட்டு முகப்பில் அல்லது முன் அறையினுள் சிலுவையின் அடையாளத்தோடு வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
தத்துவம்: முக்கோண வடிவம் கொண்ட கிறிஸ்துமஸ் மரம், இறைவனின் முப்பரிமாணங்களான தந்தை, மகன் மற்றும் தூய ஆவி ஆகியவைகளைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது.
வரலாறு: 10-ஆம் நூற்றாண்டில், ஜெர்மனியில் வாழ்ந்த புனித போனிபேஸ் என்கிற பாதிரியார், மக்கள் 'ஓக்' மரத்தை வணங்குவதைக் கண்டு கோபமுற்று அதை அடியோடு வெட்டினார். ஆனால், சில தினங்களில் அதே இடத்தில் மரம் மீண்டும் வளர்ந்து கம்பீரமாக நின்றது. இதனை இயேசுநாதரே மீண்டு வந்ததின் அடையாளமாகக் கருதி மக்கள் வணங்கினர்.
அலங்காரம்: 15-ஆம் நூற்றாண்டில், மற்றொரு ஜெர்மானியப் பாதிரியார், 'பிர்' (Fir) எனும் எவர்க்ரீன் மரத்தை மெழுகுவர்த்தி விளக்குகளால் அலங்கரித்தார்.
நிறங்களின் ரகசியம்:
பச்சை: நீண்ட ஆயுள்.
சிவப்பு: இயேசுநாதரின் ரத்தம்.
தங்கம்: செல்வம்.
புதுமை: இந்த வருடம் கிறிஸ்துமஸ் மரங்களில் அலங்கரிக்கப் பல்வேறு வண்ணங்களில் 'டைனோசர்' பொம்மைகள் வந்துள்ளன. இது குழந்தைகளின் ஆர்வத்தை வெகுவாகத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
'அமைதியான இரவு' பாடல், கிறிஸ்துமஸ் கரோல் பாடல்களின் மன்னன் என்று அழைக்கப்படுகிறது. இதுவே கரோல் நிகழ்ச்சிகளில் கடைசியாகப் பாடப்படும் பாடலுமாகும்.
உருவான கதை: ஜெர்மனி நாட்டின் புனித நிகோலஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தையாக இருந்த ஜோஸப் மொஹிர் இப்பாடலை எழுதினார். ஒருமுறை தேவாலயத்தின் 'ஆர்கன்' இசைக்கருவி பழுதானபோது, ஜோஸப் மொஹிர் தான் ஏற்கனவே எழுதிய இந்தப் பாடலைத் தேடியெடுத்தார்.
இசை வடிவம்: இசைக்கலைஞர் ஃபிரான்ஸ் சேவியர் குரூப்பரின் உதவியுடன், ஒற்றை கிடார் (Guitar) மற்றும் ஆலய மணிகளின் ஓசையோடு இப்பாடல் முதன்முதலில் தேவாலயத்தில் ஒலிக்கப்பட்டது. அதன் மெல்லிசை அனைவரையும் மெய்மறக்கச் செய்தது.
சிறப்பு: உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டு, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இப்பாடல் பாடப்படுவது வழக்கம்.
பொருள்: "அமைதியான இரவு; புனிதமான இரவு; கன்னி மரியாளின் மடியில் குழந்தை இயேசு நிம்மதியாகத் தூங்குகிறார்" என்பதே இப்பாடலின் அழகான அர்த்தம்.
கிறிஸ்துமஸ் வந்தாச்சு! கிறிஸ்துமஸ் மரமும் வெச்சாச்சு! 'சைலன்ட் நைட்' பாட்டு பாடுவோம்! சாண்டாவை வரவேற்போம்! பரிசுகளைப் பெறுவோம்!
அனைவருக்கும் ஹேப்பி கிறிஸ்துமஸ்! மெரி கிறிஸ்துமஸ்!