AM and PM
AM and PM

சுட்டீஸ்களே! நேரத்தை ஏன் AM, PM என கணக்கிடுகிறோம் தெரியுமா?

ஒருமுறைக் கடந்து விட்டால் திரும்பக் கிடைக்காத நேரத்தின் மதிப்பை பலரும் உணர்வதில்லை. இதனால் தான் இன்று குழந்தைகள் முதல் இளம் தலைமுறையினர் வரை அனைவரும் நேரத்தை அதிகமாக வீணடித்து வருகின்றனர். குழந்தைகளே நேரத்தின் மதிப்பையும், மகத்துவத்தையும் வளரும் இளம் பருவத்தில் இருந்தே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களின் நேரத்தை எப்படி பயனுள்ளதாக அமைத்துக் கொள்வது என்பதை பெற்றோர்களிடமோ அல்லது பெரியவர்களிடமோ கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக நேரத்தை 1 நாளுக்கு 24 மணி நேரம் என்ற முறைப்படி கணக்கிடுவோம். இதனை இரயில்வே நேரம் என்றும் சொல்வதுண்டு. பலருக்கும் இந்த இரயில்வே நேரப்படி நேரம் பார்ப்பதற்கு சற்று சிரமமாக இருக்கும். இதனால், ஒரு நாளின் 24 மணி நேரத்தை இரண்டாகப் பிரித்து AM மற்றும் PM எனக் கணக்கிட்டு பயன்படுத்தி வருகிறோம். இதன்மூலம் நேரத்தை மிக எளிதாக நீங்களும் புரிந்து கொள்ளலாம். நம் நாடு மட்டுமன்றி கனடா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் 12 மணி நேரத்தைக் குறிக்க AM மற்றும் PM என பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த AM மற்றும் PM என்பதன் அர்த்தம் என்ன என்பது பலரும் அறிந்து கொள்ளாமல் தான் இருக்கின்றனர். ஆனால் சுட்டீஸ் நீங்கள் கவலைப்பட வேண்டாம். இப்போது அதை நீங்கள் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நள்ளிரவு 12:00 மணி முதல் காலை 11:59 மணி வரையிலான நேரத்தை AM என்றும், மதியம் 12:00 மணி முதல் நள்ளிரவு 11:59 மணி வரையிலான நேரத்தை PM எனவும் குறிப்பிடுகிறோம்.

குழந்தைகளே AM மற்றும் PM என்பதன் முழு அர்த்தம் என்னவென்று எப்போதாவது நீங்கள் சிந்தித்து இருக்கிறீர்களா? ஒரு நாளை இரண்டாகப் பிரிப்பதன் மூலம் AM மற்றும் PM என வகைப்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, வெறுமனே 5 மணி என்றால் காலை 5 மணியா அல்லது மாலை 5 மணியா என்று குழப்பமாக இருக்கும் அல்லவா. 5 AM அல்லது 5 PM என குறிப்பிடும் போது, காலையா அல்லது மாலையா என்பதை உங்களால் மிக எளிதில் புரிந்து கொள்ள முடியும். இதில் AM என்றால் மதியத்திற்கு முன் (Ante Meridiem) என்றும், PM என்றால் மதியத்திற்குப் பிறகு (Post Meridiem) என்றும் அர்த்தம்.

இதையும் படியுங்கள்:
நேரம் நம் வாழ்க்கையில் எப்படியெல்லாம் வீணாகிறது தெரியுமா?
AM and PM

சுட்டிக் குழந்தைகளே வெறுமனே AM, PM பற்றி மட்டும் தெரிந்து கொள்ளாமல், நேரத்தின் மதிப்பை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இப்போது ஸ்மார்ட்போன்களை அதிகமாகப் பயன்படுத்த தொடங்கி விட்டீர்கள். இதனால், உங்களின் பொன்னான நேரம் தான் வீணாகிறது. ஒப்புக் கொள்கிறேன், உங்களுக்கு இது விளையாடும் வயது தான். இருப்பினும், விளையாட ஆசைப்பட்டால் அதை நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள். ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதையோ அல்லது அதில் விளையாடுவதையோ தவிர்த்து விடுங்கள். உங்களின் சிறு வயதில் இருந்தே நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள். குழந்தைகளாகிய உங்களின் தேகம் மிகவும் மென்மையானது. ஆகையால் தொடர்ந்து நீங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால், அது கண்களை மிக விரைவிலேயே பாதித்து விடும்.

“காலம் பொன் போன்றது, காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” போன்ற நேரத்தின் மதிப்பை உணர்த்தும் பழமொழிகளை பள்ளிப் புத்தகத்தில் படித்திருப்பீர்கள் அல்லவா! அதன்படி நேரத்தின் மதிப்பை நீங்கள் உணர்ந்து கொண்டால், உங்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com