தெளிவு

சிறுகதை
தெளிவு
gokulam strip
gokulam strip

வெயிலில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான் ராமு. சிறிது நேரத்திலேயே அவனுக்கு களைப்பு ஏற்பட்டது.  மரநிழலில் அமர்ந்து ஓய்வெடுக்க ஆரம்பித்தான். வாழ்க்கையில் சீக்கிரம் பணக்காரனாக வேண்டும் என்பதே

அவனது லட்சியம். அவன் வயது 22 தான் ஆகிறது.  பணக்காரன் ஆக என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் முன் ஒரு பூதம் தோன்றியது.

"ராமு கேட்பதைக் கொடுக்கும் பூதம் நான்.  உனக்கு என்ன  வேண்டுமோ அதை என்னிடம் கேளு ... உனக்கு ஒரு நிமிடம் அவகாசம் தருகிறேன். நன்றாக யோசித்து அதற்குள் கேட்டு முடிக்க வேண்டும். ஒரே ஒரு வரியில் கேட்க வேண்டும் " என்றது  பூதம். 

சந்தோஷத்தில் மிதந்தான் ராமு. உடனே யோசிக்காமல் சட்டென்று ‘’எனக்கு ஒரு பெரிய பெட்டி நிறைய பணம் வேணும் . இல்லல்ல... ரமேஷ் வெச்சுருக்கிற மாதிரி ஒரு சொகுசுக் கார் வேணும்..ம்ஹூம்...  இந்த ஊர் பரமசிவம் அய்யாவோடது மாதிரி ஒரு பெரிய வீடு வேண்டும் ... அதுவும் வேண்டாம். என் வீடு முழுக்க தங்க நகைகள் வேணும். இரு..இரு..  யோசிச்சு சொல்றேன்’’ என்றவன் யோசித்துவிட்டு  ‘’  நான் ஒரு பெரிய கம்பெனிக்கு முதலாளி ஆகணும்..’’என்றான்.

 ‘’முட்டாள் ராமு.. நன்றாக யோசித்து கேட்க சொன்னேன் இல்ல... ஒரு நிமிடம் முடிந்துவிட்டது . உனக்கு கொடுத்த வாய்ப்பும் முடிந்து விட்டது. உனக்கு என்ன வேண்டும் என்பதில் உனக்கு தெளிவு இல்லை. பேராசையும், பொறாமையும் நிறைந்தவனாக இருக்கிறாய்.... முதலில் நன்றாக உழைத்து முன்னுக்கு வரப் பார்..’’ என்று புத்திமதி சொல்லி விட்டு மறைந்தது பூதம்.

குட்டீஸ்...உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாகஇருங்கள். அதோடு ஸ்மார்ட்நெஸ்சோடு கூடிய உழைப்பும் வேண்டும்..ஓகேவா..?’’                     

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com