

லாவோஸ் நாட்டின் நாட்டுப்புற இலக்கியங்களில் மிகவும் புகழ்பெற்ற, அறிவார்ந்த மற்றும் நகைச்சுவையான கதாபாத்திரம் சியெங் மியெங் (Xieng Mieng). அவர் ஒரு சாதாரண மனிதர்; ஆனால் அசாத்தியமான அறிவுக்கூர்மையும் சாதுர்யமும் கொண்டவர். அவர் ‘Trickster’ (தந்திரக்காரர்) வகையைச் சேர்ந்தவர். நம் ஊர்க் கதைகளில் வரும் தெனாலிராமன், பீர்பால் போன்றவர். அவரைப் பற்றிய இரு கதைகள் இங்கே:
சியெங் மியெங்கின் அறிவுக்கூர்மையைக் கேட்டும் கண்டும் வியந்த மன்னர், அவரைத் தனது அவையிலேயே வைத்துக்கொண்டார். ஆனால், சியெங் மியெங் எப்போதும் மன்னரையே கிண்டல் செய்து தர்மசங்கடத்தில் ஆழ்த்துவார்.
ஒரு மாலையில் மன்னரும் அவரும் ஆற்றங்கரையில் உலாவிக்கொண்டிருந்தனர். அப்போது மன்னர் ஒரு சவால் விட்டார்: "சியெங் மியெங், நீ மிகப் பெரிய தந்திரக்காரன் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
உன்னால் என்னை ஏமாற்ற முடியுமா? இப்போது நான் கரையில் நின்றுகொண்டிருக்கிறேன். உன் தந்திரத்தால் என்னை இந்த ஆற்றுக்குள் இறங்க வைக்க முடிந்தால், நூறு பொற்காசுகளைப் பரிசாகத் தருகிறேன். ஆனால், உன்னால் முடியாவிட்டால் நீ நூறு சவுக்கடி தண்டனை பெற வேண்டும்."
சியெங் மியெங் சிறிது நேரம் யோசித்தார். பிறகு முகம் வாடிப்போய் சொன்னார், "மன்னா, என்னை மன்னித்துவிடுங்கள். இது கடினமான சவால். நீங்கள் கரையில் இருக்கும்போது, உங்களை ஆற்றுக்குள் இறங்க வைக்கும் அளவுக்கு எனக்குத் திறமை கிடையாது.”
மன்னர் வெற்றிப் பெருமிதத்துடன் சிரித்தார். "பார்த்தாயா சியெங் மியெங், உனது தந்திரம் என்னிடம் பலிக்காது!"
சியெங் மியெங் தொடர்ந்தார்... "ஆயினும் மன்னா, நீங்கள் ஆற்றுக்குள் இருந்திருந்தால், என் தந்திரத்தால் உங்களை ஆற்றுக்கு வெளியே வர வைத்திருக்க முடியும்.”
சியெங் மியெங் தன்னிடம் தோற்றுவிட்டான் என்ற மமதையில் அவர் சொன்னார், "அப்படியா? சரி, இப்போது நான் ஆற்றுக்குள் இறங்குகிறேன். உன்னால் என்னை வெளியே வர வைக்க முடியுமா என்று பார்ப்போம்!"
சொல்லிவிட்டு வேகவேகமாக ஆற்றுக்குள் இறங்கி, இடுப்பளவு நீரில் நின்றுகொண்டார். சியெங் மியெங்கைப் பார்த்துச் சவால் விட்டார், "இதோ நான் நீருக்குள் வந்துவிட்டேன்! இப்போது உன் தந்திரத்தைச் செய்து, என்னைக் கரைக்கு வர வை பார்க்கலாம்!"
சியெங் மியெங் கைகளைத் தட்டி பலமாகச் சிரித்தார். "மன்னா! இதோ, உங்களை ஏமாற்றி ஆற்றுக்குள் இறங்க வைத்துவிட்டேனே! நான் கேட்டதும் நீங்கள் நீருக்குள் இறங்கிவிட்டீர்கள். இதுதான் நான் செய்த தந்திரம். இப்போது பரிசுப் பணத்தைக் கொடுங்கள்!" என்றார்.
மன்னர் திகைத்து நின்றார். சியெங் மியெங் தன்னை வெளியே வரச் சொல்வார் என்று எதிர்பார்த்து அவர் ஆற்றுக்குள் இறங்கினார். ஆனால், சியெங் மியெங்கின் உண்மையான இலக்கு அவரை ஆற்றுக்குள் இறங்க வைப்பதுதான் என்பது இப்போதுதான் புரிந்தது. அவர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு கரையேறினார்.
“நான் இந்த நாட்டுக்கு மன்னன்; தந்திரத்துக்கு நீதான் மன்னன்!” எனப் பாராட்டி, சியெங் மியெங்கிற்குப் பொற்காசுப் பரிசை வழங்கினார்.
சியெங் மியெங்கின் அறிவுக்கூர்மையை மெச்சினாலும், மன்னருக்கு உள்ளூர அவர் மீது ஒரு பொறாமை இருந்தது. எப்படியாவது அவரை வீழ்த்த வேண்டும் என முடிவு செய்து, ஒரு திட்டம் தீட்டினார்.
"உனக்கு ஒரு அதிகாரம் தருகிறேன். இனிமேல் இந்த அரண்மனையில் எங்கே வேண்டுமானாலும் நீ அமரலாம், படுக்கலாம். யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை!" என்றார் மன்னர். சியெங் மியெங் ஏதாவது தவறான இடத்தில் படுத்து, மக்களின் கேலிக்கு உள்ளாக வேண்டும் என்பதே மன்னரின் உள்நோக்கம்.
ஒருநாள் மன்னர் வேட்டைக்குச் சென்றிருந்தபோது, சியெங் மியெங் நேராக மன்னரின் அந்தப்புரத்திற்குச் சென்று, அங்கிருந்த விலை உயர்ந்த பட்டுப் படுக்கையில் படுத்துத் தூங்கினார். வேட்டை முடிந்து திரும்பிய மன்னர் ஆத்திரமடைந்தார்.
"சியெங் மியெங்! எழுந்து நில்! என் படுக்கையில் படுக்கும் அளவுக்கு உனக்கு எவ்வளவு தைரியம்? இதற்காக உனக்கு மரண தண்டனை விதிக்கப்போகிறேன்!" என்று கத்தினார்.
சியெங் மியெங் பதற்றமே இல்லாமல் சொன்னார், "மன்னா, ஏன் கோபப்படுகிறீர்கள்? நீங்கள்தானே சொன்னீர்கள், நான் எங்கு வேண்டுமானாலும் படுக்கலாம் என்று? உங்கள் கட்டளையைத்தான் நான் நிறைவேற்றினேன்."
மன்னர் யோசித்தார்; அவர் கொடுத்த வாக்குறுதி அவருக்கே வினையாக வந்துவிட்டது. உடனே அவர் ஒரு நிபந்தனை விதித்தார், "இனிமேல் நீ அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும் படுக்கலாம்; ஆனால் எனது படுக்கையில் மட்டும் படுக்கக் கூடாது. மீறினால் தண்டனை நிச்சயம்."
சில நாட்களுக்குப் பிறகு, மன்னர் ஓய்வெடுக்கத் தனது அறைக்கு வந்தார். அங்கே மீண்டும் சியெங் மியெங் படுத்திருந்தார். ஆனால் இம்முறை அவர் தரையில் படுத்திருந்தார்; அவரது பாதங்கள் மட்டும் படுக்கையின் மேல் நீட்டியிருந்தன.
மன்னர் கத்தினார், "சியெங் மியெங்! எனது நிபந்தனையை மீறி, எனது படுக்கையில் பாதம் வைத்துப் படுத்திருக்கிறாயே?"
சியெங் மியெங் ஜம்பமாகச் சொன்னார், "உங்கள் படுக்கையில் நான் படுக்கக் கூடாது என்றுதானே நிபந்தனை விதித்தீர்கள்? இப்போது நான் தரையில்தான் படுத்திருக்கிறேன். எனது பாதங்களை உங்கள் படுக்கை மீது வைக்கக் கூடாது என்று நீங்கள் சொல்லவில்லையே!"
மன்னர் மீண்டும் திகைத்தார். ஒவ்வொரு முறை அவர் ஒரு நிபந்தனை விதிக்கும்போதும், சியெங் மியெங் அதில் ஒரு ஓட்டையைக் கண்டுபிடித்துவிடுகிறார். அவர் சிரித்துக்கொண்டே, “உன்னிடம் வாதிட்டு ஜெயிக்க யாராலும் முடியாது. நீயே சிறந்த தந்திரக்காரன்!” என்று பாராட்டிப் பரிசளித்தார்.