

பாஸ்கர் தன் அம்மாவிடம், “பொன்னியின் செல்வனில் அப்படி என்னதான் அம்மா இருக்கு? அப்பாவும் நீயும் எப்போ பார்த்தாலும் அதை ரொம்பச் சிலாகிச்சுப் பேசறீங்க!” என்றான்.
“எனக்குச் சொல்லத் தெரியலே.. படிக்க நல்லா இருக்கும். உன் அப்பாகிட்டேயே கேள்,” என்றார் அம்மா.
அப்பா சிவராமன், டைனிங் டேபிளில் இருந்த டம்ளரை எடுத்து அண்ணாந்து நீரைப் பருகிக் கொண்டிருந்தார். அவரிடம் பாஸ்கர், “அப்பா, நீங்க சொல்லுங்க.. என்னதான் இருக்கு அந்த நாவலில்?” எனக் கேட்டான்.
அப்பா சிவராமன், “உனக்கு அந்த நாவலைப் பற்றி என்ன தெரியும்?” என்று கேட்டார்.
“1950 முதல் 1954 வரை வந்த நாவல் அது.. 293 அத்தியாயங்கள், 2200 பக்கங்கள், ஐந்து பாகங்கள்.. அது சோழர்களின் கதை. அதானே?” என்றான் பாஸ்கர்.
அப்பா சிரித்தார். “எத்தனையோ நாவல்கள் வந்துவிட்டன. இதைப் பற்றி விளக்கி ஒரு ‘பொன்னியின் செல்வன்’ அளவுக்கே எழுதலாம். கொஞ்சம் மட்டும் சொல்றேன். எத்தனையோ பேர் எழுதினாங்க.. ஆனால் கல்கி எப்படி எழுதுவார் தெரியுமா? கதையைச் சம்பாஷணைகள் மூலம் சொல்வார். பின்புலத்தை ஒரு கட்டுரையாக ஆதாரச் செப்பேடுகள் பற்றிச் சொல்வார்.
நம்மிடமும் கலந்து ஆலோசிப்பார். ‘ஹீரோவை விட்டு நாம ரொம்ப நாள் வந்திட்டோம், அவன் என்ன பண்றான்னு பார்ப்போம்’ என்பார். கதாபாத்திரங்களோடு நாமும் செல்வோம். ஹீரோ வந்தியத்தேவனின் உணர்வுகளை நாமும் அனுபவிப்போம்… என்பார். போதும், நீ படி முதலில்.. அப்புறம் இன்னும் சொல்றேன்.”
புத்தக அலமாரியில் இருந்த முதல் பாகத்தை பாஸ்கர் படிக்க ஆரம்பித்தான். பத்து பக்கங்கள் படித்திருப்பான்... புத்தகத்தை சோபாவில் வைத்துவிட்டு போனை நோண்ட ஆரம்பித்தான்.
அம்மா மெதுவாக சிவராமனிடம், “இந்தக் காலத்துப் பசங்க அவ்வளவுதாங்க... நம்ம காலத்தோட போச்சு அந்த ரசனை எல்லாம்,” என்றார்.
அடுத்த வாரத்தில் ஒரு நாள் இரவு, பாஸ்கர் கையில் அந்த முதல் பாகம் இருந்தது. அடுத்த வாரத்தில் இரண்டாம் பாகம். அடுத்த நாள் மூன்றாம் பாகம். இரவு நான்காம் பாகம். மறுநாள் விடுமுறை எடுத்துவிட்டு ஐந்தாம் பாகம்.
படித்து முடித்தவுடன் ஒரு பெரிய யாத்திரை போய் வந்த பயணி போல அவன் முகம் இருந்தது.
அப்பா, “என்னப்பா முடிச்சிட்டியா?” என்றார்.
பாஸ்கர், “நல்லா எழுதுறார் அப்பா.. என்ன நடை! வைக்க மனசில்லே.. திருப்பிப் படிக்கணும்,” என்றான்.
அடுத்த வாரத்தில் மறுபடியும் படித்தான். “அப்பா… வந்தியத்தேவன் என்னை விடமாட்டேங்கிறான் அப்பா. நந்தினியும் குந்தவையும் தூங்கும்போது டயலாக் பேசுறாங்க. சினிமா எத்தனை கஷ்டப்பட்டு எடுத்திருக்காங்க! சில கதாபாத்திரங்களுக்குச் சில நடிகர்களை மாற்றிப் போட்டு எடுத்திருக்கலாம். உண்மையில் ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் அப்பா? குந்தவை - வந்தியத்தேவன் திருமணம் நடந்ததா?”
அப்பா சிரித்தார். “பொன்னியின் செல்வன் பிடிச்சுக்கிட்டா உன்னை! 1954-ல் கதையை கல்கி எழுதி முடித்ததும் வாசகர்களிடமிருந்து ஒரே கேள்வி மயம்.. ‘நந்தினி என்ன ஆனாள்? ஓடிப்போன டூப்ளிகேட் மதுராந்தகன் என்ன ஆனான்?’ இப்படியாக... அதற்கு ஒரு நீண்ட முடிவுரை - எந்தப் பாத்திரங்கள் பின்னால் என்ன ஆனார்கள் என்று ஒரு விளக்கம் எழுதினார் கல்கி. அப்புறம்தான் ஓய்ந்தார்கள். சரி சொல்லு.. உனக்குப் பிடிச்ச பாத்திரம் யார்?”
“சந்தேகம் என்ன.. வந்தியத்தேவன்! அப்புறம் ஆழ்வார்க்கடியான்,” என்றான் பாஸ்கர்.
அம்மா, “எனக்கு நந்தினி,” என்றார்.
அப்பா, “எனக்கும் வந்தியத்தேவன்தான். அந்த ரோலில் நடிக்க எம்.ஜி.ஆர் ஆசைப்பட்டார். இன்னும் பல பிரபலங்கள் ஆசைப்பட்டார்கள். உண்மையில் வந்தியத்தேவன் நடு வகிடெடுத்து, தீர்க்கமான குறும்புப் பார்வையுடன் உள்ள வாலிபன். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சீரியஸாக முகத்தைக் கடுகடுவென மாற்றிக்கொள்ளாமல், நகைச்சுவை குதூகலம் முகத்தில் படர வலம் வருவான். அந்த முகத்தையோ, அந்த நடை உடை பாவனையையோ படத்தில் காட்டவே முடியாது. எழுத்தில் தான் உணர வைக்க முடியும்.”
பாஸ்கர், “முகம் மட்டும் அல்ல.. வந்தியத்தேவன், நந்தினி, பழுவேட்டரையர் குரலும் கேட்குது அப்பா படிக்கும்போது!” என்றான்.
அதுதான் பொன்னியின் செல்வன்!