
தற்போது உலகெங்கிலும் கவர்ச்சிகரமான ஒயிட் போர்டுகளும், ஐபாடுகளும், கொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகள் பள்ளிகள், கல்லூரிகளை ஆக்கிரமித்த பின்பு கரும்பலகை மற்றும் வெள்ளை சாக்பீஸ்களின் உபயோகம் வெகுவாக குறைந்து விட்டது. அவை அரசுப்பள்ளிகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக ஒரு ஆசிரியர் கரும்பலகையில் வெள்ளை சாக்பீஸால் எழுதி முடித்து அதை அழிக்கும் போது, தூசு ஒரு வெள்ளைப் படலம் போலக் கிளம்பும். ஆசிரியரின் தலைமுடி, உடைகள், முகம், கைகள், விரல்கள் என வெள்ளை வண்ணத்தில் கறை படிந்திருக்கும். நீண்ட நாட்கள் சாக்பீஸ் உபயோகிக்கும் ஆசிரியர்களின் கைகள் வறண்டு காட்சியளிக்கும். சிலருக்கு அதன் தூசி ஒவ்வாமையை தோற்றுவித்து, தோல் அலர்ஜி, மூச்சுப் பிரச்சனையைக் கூட கொண்டு வரும்.
ஆசிரியர்களாலும் முக்கியமாக கணித ஆசிரியர்களாலும், ஓவியர்களாலும் மிகவும் கொண்டாடப்படும் ஒரு சாக்பீஸ் இருக்கிறது. இதன் பெயர் ஹகோரோமோ. அப்படி என்ன விசேஷம் அதில்? இந்த சாக்பீஸ் வெண்ணை போல வழுக்கி கொண்டு எழுதும். பார்க்க இது பளபளப்பாக கெட்டியாக இருக்கும். அதனுடைய உடம்பில் பூசப்பட்டிருக்கும் மெழுகு கோட்டிங் காரணமாக, எழுதும்போது விரல்களிலோ உடைகளிலோ தூசி ஏற்படாமல் இருக்கும். கரும்பலையில் எழுதும் உணர்வேயின்றி ஒரு காகிதத்தில் ஜெல் பேனாவை வைத்து எழுதுவது போன்ற உணர்வை இந்த சாக்பீஸ் தருகிறது என்கின்றனர் இதை உபயோகிக்கும் பேராசிரியர்கள். ஒரே ஒரு சாக்பீஸ் நான்கு லெச்சர்களுக்கு தாங்கும்.
இந்த சாக்பீசை உயரத்தில் இருந்து போட்டாலும் கீழே விழுந்து பீஸ் பீஸாக உடைவதில்லை. கைகளில் தூசியை ஏற்படுத்துவதில்லை. எழுதுபவரின் உள்ளங்கை ஈரமாக வியர்த்திருந்தாலும், எந்த கறையும் படிவதில்லை என்பது ஆச்சரியம். பிற சாக்கீஸ் போல அல்லாமல் இதை எளிதில் கரைவதில்லை. குழந்தைகள் கூட உபயோகிக்க ஏற்றது. உயர்தரமான இயற்கையான கால்சியம் கார்பனேட்டில் தயாரிக்கப்படுகிறது.
நல்ல வெள்ளை வண்ணத்தில் மின்னுவது போல இருக்கிறது. பெரிய வகுப்பறைகளிலும் லெக்சர் ஹாலிலும் கரும்பலகையில் எழுதினால், பளீரென்று எங்கிருந்து பார்த்தாலும் தெரியும். இந்த சாக்பீஸினால் எழுதிய எழுத்துக்களை அழிப்பது மிகவும் சுலபம். பிற சாக்பீஸ்களைப் போல, போர்டில் இருந்து அழித்தால் அதனுடைய தடம் சிறிதாவது மிச்சம் இருக்கும்.
இந்த வகை சாக்பீஸ் எண்பது வருடங்கள் வரை (1932 – 2015)ஜப்பானில் தயாரிக்கப்பட்டு வந்தது. ஜப்பானிய கம்பெனி இதன் தயாரிப்பை நிறுத்திய போது கொரியாவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இதை வாங்கி அதை தயாரிக்க ஆரம்பித்தார். ஆனால் இதற்கு வரவேற்பு இல்லாததால் அந்த உற்பத்தி நின்று விட்டது என்பது வருத்தமான விஷயம்.
ஒரு பெட்டியில் 72 பீஸ் கொண்ட இந்த சாக்பீஸ் இப்போதும் இணையத்தில் விற்பனையாகிறது. இதன் விலை இந்திய ரூபாயில். 7599 ரூபாய். அதிக விலை மற்றும் தொழில்நுட்பப் வளர்ச்சியால் இதன் பயன்பாடு அரிதாகி விட்டது. ஆனாலும் இது கணிதப் பேராசிரியர்களின் விருப்பமாகவும், கனவு சாக்பீசாகவும் இருந்து வருகிறது.