1997ஆம் ஆண்டு ஜே.கே.ரவுலிங் எழுதிய ‘ஹாரி பாட்டர் அண்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன்’ புத்தகம் வெளியானது. இந்த புத்தகம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை எழுதினார் ரவுலிங். இதனையடுத்து ஹாரி பாட்டர் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு திரைப் படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. 2007ஆம் ஆண்டு வெளியான ‘ஹாரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ்’ புத்தகத்துடன் இந்த கதை நிறைவடைந்தது.
ஹாரிபாட்டர் புத்தகத்தின் முதல் பகுதிக்கான கதைக்கரு 4 மணி நேரத்தில் உருவானது என்பது தெரியுமா...? ஆம் ஒரு நாள் இங்கிலாந்து மான்செஸ்டரில் இருந்து லண்டன் செல்ல ரயிலுக்கு காத்திருந்தார் ரவுலிங். ரயில் 4 மணி நேரம் தாமதமாக வந்தது. அந்த இடைப்பட்ட நேரத்தில் அவரது கற்பனையில் உருவானதுதான் ஹாரிபாட்டர் கதை. பின் ரயில் பயணத்தில் அந்த கதையை இன்னும் நன்றாக மெருகேற்றினர். எதுவும் மறந்து விடக்கூடாது என்று தனது கைக்குட்டையில் குறிப்பெடுத்து கொண்டாராம்!
பிரிட்டனைச் சேர்ந்த ஜோன் ரவ்லிங் மொழி பெயர்ப்பாளராக ஆக்ஸ்போர்டு டிக்சனரி கம்பெனியில் வேலை பார்த்தார், பின்னர் ஆசிரியையாக பணியாற்றினார். அப்போது ஓய்வு நேரத்தில் நாவல்கள் எழுத துவங்கினார். ஆனால், அதில் ஒன்றுகூட பிரசுரமாகவில்லை. மந்திர தந்திர கதையை அவர் எழுத எடுத்த முயற்சியே பிறகு வெற்றி பெற்றது.
ஆரம்பத்தில் இவருடைய ஹாரிபாட்டர் அண்ட் பிலாசபர்ஸ் ஸ்டோன் கதை 12 முன்னணி பிரிட்டிஷ் புத்தக வெயீட்டாளர்களால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் புளூ பெர்ரி புத்தக நிறுவனம் ஒரு வழியாக பிரசுரிக்க ஏற்றுக்கொண்டது. ஆனால், அவருடைய பெயரை மாற்றவேண்டும் என்று நிபந்தனை விதித்தது. அதன் காரணமாக தனது பாட்டியின் நினைவாக கேத்ரீன் என்ற பெயரை தனது நடு பெயராக சேர்த்து ஜே. கே. ரவுலிங் ஆனார்.
இங்கிலாந்து நாட்டின் பிரபலமான புளூ பெர்ரி புத்தக வெளியீட்டு நிறுவனம் முதலில் "ஹாரிபாட்டர் அண்ட் பிலாசபர்ஸ் ஸ்டோன்" புத்தகத்தை 500 பிரதிகளை ஒரு புத்தகம் 30 பவுண்டு (32 அமெரிக்க டாலர்கள்) என்ற விலையில் 1997ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி வெளியிட்டது. இந்த நாவல் பின்னர் பெரும் எண்ணிக்கையில் விற்பனையாகி உலக அளவில் பிரபலமடைந்தது.
அதன் தொடர்ச்சியாக பின்னர் ஆறு ஹாரிபாட்டர் புத்தகங்கள் எழுதினார் ரவுலிங். தான் எழுதிய 7 ஹாரிபாட்டர் புத்தகங்கள் மூலம் இங்கிலாந்து ராணியின் சொத்து மதிப்பிற்கு இணையாக சம்பாதித்தார்!