

நிறங்கள் பல இருந்தாலும் சில நிறங்கள் பார்த்தவுடன் கண்ணை பறிப்பதாக இருக்கும். அப்படிப்பட்ட நிறங்களில் பர்புல் நிறத்துக்கு தனி இடம் உண்டு.
திராட்சை, நாவல்பழம், கத்தரிக்காய் போன்றவை நமக்கு தெரிந்த பர்புல் நிற பழங்களும், காய்கறிகளுமாகும்.
இப்போ எதுக்கு பர்புல் நிறத்தை பற்றி பேசுறேன்னு பாக்குறீங்களா? பர்புல் நிறத்தின் கதை சுவாரஸ்யமானது. அதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சிகப்பு நிறம் காதலை குறிக்கும். மஞ்சள் நிறம் சந்தோஷத்தை குறிக்கும். பச்சை நிறம் பசுமையை குறிக்கும். அதை போல பர்புல் நிறம் அரசர்களுக்கு உரிய நிறமாக கருதப்பட்டது என்பது தெரியுமா?
அதிகாரம், ஆடம்பரம், போன்றவற்றை வெளிப்படுத்த பர்புல் நிறத்தை பயன்படுத்தினார்கள். அரசன், அரசியின் நிறமாக பர்புல் நிறம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
16ஆம் நூற்றாண்டில் மெடிடரேனியன் கடற்பகுதியில் உள்ள பியோனிசியன் கலாச்சாரம் தான் முதலில் பர்புல் நிற சாயத்தை தயாரிக்க ஆரம்பித்தனர், டைரியன் பர்புல் என்ற பெயரில்.
மூரக்ஸ் என்ற கடல் நத்தையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு வித திரவத்தை பயன்படுத்தியே பர்புல் நிற சாயம் உருவாக்கினார்கள்.
இதற்காக அவர்கள் ஆயிரக்கணக்கிலான நத்தைகளை அழித்து அதிலிருந்து வரும் திரவத்தை பத்து நாட்களுக்கு உப்பு நீரில் கொதிக்க வைத்து மிக குறைந்த அளவிலே சாயம் தயாரிக்க முடிந்தது. எனவே பர்புல் நிறம் அரிதான ஒன்றாக கருதப்பட்டது.
வில்லியம் ஹென்ரி பெர்கின் என்னும் ஆராய்ச்சியாளர் குயினென் என்னும் கசப்பு மருந்தை மலேரியா நோய்காக தயாரிக்க முயற்சித்து தவறுதலாக பர்புல் நிற சாயத்தை கண்டுப்பிடித்தார்.
இந்த சாயத்தை பெர்கின்மாவே என்றும் அழைப்பார்கள். இவரால் தான் பர்புல் நிறம் செயற்கை சாயமாக அதிகமாக பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
அது வரைக்கும் அரச குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்திய பர்புல் நிற சாயத்தை நடுத்தர மக்களும் பயன்படுத்தும் அளவிற்கு மலிவாக கிடைக்க இதுவே காரணமானது.
1862 வில் நடந்த ராயல் எக்ஸிபிஷனில் விக்டோரியா மகாராணி பெர்கின்மாவே பயன்படுத்தி செய்யப்பட்ட பர்புல் நிற ஆடையை அணிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மாவின் இன்னும் பிரபலமாக காரணமாயிற்று.
இப்படித்தான் அரச குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தி கொண்டிருந்த பர்புல் நிறம் சாமானிய மக்களும் பயன்படுத்த முடிந்ததற்கு ஒரு தற்செயலான விபத்தே காரணமாயிற்று என்பது ஆச்சர்யமான விஷயம் தானே!