பத்து அங்குலம் நாக்கு எதுக்கு தெரியுமா?

பத்து அங்குலம் நாக்கு எதுக்கு தெரியுமா?
Published on
gokulam strip
gokulam strip

ஹாய் குட்டீஸ்...

திரைப்படங்களில், கரடி வேடமணிந்த மனிதன், தன்னை யாராவது தாக்க வந்தால், “அய்யய்யோ நான் கரடி அல்ல. நான் ஒரு மனிதன்” என்று கத்திக்கொண்டு ஓடும் காட்சிகளை ரசித்திருக்கிறோம்.

ஆனால் ஒரு கரடி, “நான் மனிதன் அல்ல. நான் கரடி” என்று குரல் கொடுப்பதைக் கேட்டிருப்போமா?

அண்மையில் அப்படி ஒரு செய்தி.

இந்த வருடம்  ஆகஸ்ட் மாத ஆரம்பம்.

சீனாவில் இருக்கும் ஹாங்சௌ மிருகக்காட்சிசாலையில், (Hangzhou Zoo)   கீழே பள்ளத்தில் சுதந்திரமாக கரடிகள் சுற்றித் திரியும் திறந்தவெளி.

“அந்த மனுஷனைப் பாருங்க,  எவ்வளவு தில்லா கரடி உலவுற ஏரியாக்குள்ள நிக்கறான்.’ அதுவும் கரடி மாதிரி மாஸ்க் போட்டுக்கிட்டு… கையை வேறே அசைக்கிறான்!”

மேலே தடுப்புச் சுவருக்கு அப்பால் நின்றிருந்த பார்வையாளர்கள்தான் இவ்வாறு கூவிக் கொண்டிருந்தார்கள்.

பாறைகளில் தாவி ஏறி வந்து, மேலே மக்களைப் பார்த்து கை அசைத்தது அந்த உருவம். “அது மனிதனல்ல ‘சூரியக் கரடி’ (Sun Bear) என்னும் ஒரு வகைக் கரடிதான்” என்று சத்தியம் செய்தார்கள், மிருகக் காட்சி சாலை நிர்வாகிகள். அந்த உருவத்தின் பின்னங்கால்களின் தசைகள் பார்ப்பதற்கு பேகி பேண்ட் அணிந்த மனிதன் போலதான்  இருந்தன.

“இரண்டு கால்களால் நிற்பதால் நான் மனிதன் என்று சிலர் நினைக்கிறீர்கள்… இல்லவே இல்லை. மற்ற பெரிய கரடிகளைவிட நான் அளவில் சிறியவன்.

நான் மலாயன் கரடி. சூரியக் கரடி” என்று அந்தக் கரடியே குரல் கொடுத்து விளக்குவது போல் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

தென் கிழக்கு ஆசியாவின் ட்ராபிகல் காடுகளில் காணப்படும் குட்டி கரடிகள் இவை.

கரடிக் குடும்பத்தின் பிக்மிக்கள்.

பின்னங்கால்களால் எழுந்து நின்றால், மூன்றடி முதல் நான்கடிதான் உயரம். இது, மற்ற அமெரிக்க கறுப்புக் கரடிகளின் உயரத்தில் பாதிதான்.

ஆனால் இதன் தனித்தன்மை, நீண்ட குறுகிய, பத்து அங்குல நீளம் கொண்ட நாக்கு!

(சாப்பாட்டை வக்கணையாக, விவரிப்புகளுடன், விமர்சனங்களுடன்  சாப்பிடும் போது வீட்டில், “உனக்கு நாக்கு முழ நீளம்” என்று நமது ருசிப்புத் தன்மையைக் குறித்து சொல்வார்கள். இது அந்த நீளமல்ல.. உண்மையாகவே அத்தனை நீளம்)

ஏன்  சூரியக் கரடி என்று பெயர்?

வற்றின் மார்புப்  பகுதியில் இருக்கும்  (fur) ரோமம், பிரைச் சந்திரன் வடிவில் பட்டையாக, மஞ்சள் நிறத்தில் காணப் படுவதால், உதிக்கும் சூரியனைப் போல இருக்கிறதாம். அதனாலேயே சூரியக் கரடி என்று பெயரிட்டார்கள். ஆனால் இந்தக கரடிகளோ,  சூரியனைப் பார்க்க விரும்புவதில்லை. இரவு நேரங்களில் மற்றுமே சுற்றுபவை.

தெற்கு சீன நாட்டின் அடர் காடுகளில் திரியும் ஒரு சூரியக் கரடி, கீழே கிடக்கும் மரத் துண்டு ஒன்றை முகர்ந்து பார்க்கிறது. நாக்கை ஒரு சுழற்று சுழற்றி, மரத்துண்டுக்கடியில் விட்டு, அங்கே பதுங்கி வாழும் பூச்சிகளை கபளீகரம் செய்கிறது. அபூர்வமான காணொளிக் காட்சி இது. தவிர பழங்கள்,  பெர்ரிகள், சிறு பறவைகள், வேர்கள் இவற்றையும்  நீண்ட நாக்கில் இழுத்து மடித்து உள்ளே தள்ளும்.

இரையை கிழிக்கவும் மரங்களில் வேகமாக ஏறவும் நான்கு கால்களிலும் கூரான நீண்ட நகங்கள். வாயில் கூரான பற்கள். சூரியக் கரடி, வெறித்தனமான தேன் விரும்பி. தேன் கூடுகளுக்குள் நீண்ட நாக்கை விட்டு, அந்த தேனடையை அப்படியே, அதில் ஒட்டியிருக்கும் தேனீக்களோடு  உறிஞ்சுவது இதற்கு மிகவும் பிடிக்கும்.

இதன் அடர்த்தியான ஃபர் கொண்ட சருமம், தேனீக்கள் கொட்டினாலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

இவை மிக வேகமாக மரங்களில் ஏறி விடும்.    அனேகமாக மரங்களிலேயே வாழும்

அர்போரியல் (arboreal ) இனத்தவை. மரங்களிலேயே தூங்கும்.. தரையிலிருந்து 23 அடி உயரத்தில் இருக்கும் மரங்களிலும்  விறுவிறு வென்று ஏறி, படுத்துத் தூங்கும்.

அதே வேகத்தில் அசராமல் நீரில் நீந்தக் கூடியவை.

கூச்சம் கொண்ட தனிமை விரும்பிகள் என்றாலும் மிகவும் ஆபத்தானவை. காரணமே இல்லாமல் தாக்கக் கூடியவை.

இவற்றின் பித்தப்பை (gall bladders) மற்றும் அதன் சுரப்பு,  சீன மருத்துவத்தில் உபயோகப்படுத்தப் படுவதால், இவை அதிகம் வேட்டையாடப்படுகின்றன என்பது வருந்தத்தக்க விஷயம்.  எனவே இவை அழியும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு கொசுறு செய்தி:

தற்கு முன்பு சீனாவின் அந்த மிருகக் காட்சி சாலையில், உண்மையான பாண்டாக் கரடிகளை வழிக்குக் கொண்டுவர, ஊழியர்கள், பெரிய பாண்டா கரடி போல வேடமணிந்திருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com