தற்போது நடந்து வரும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு வென்ற வீரர்களுக்கு வழங்கப்படும் பதக்கங்களில் ஈபிள் டவர் கட்டப் பயன்படுத்தப்பட்ட இரும்பின் ஒரு பகுதி சேர்க்கப்பட்டுள்ளது, வழங்கப்படும் பதக்கங்களில் ஒரு புறம் ஈபிள் டவர் பொறிக்கப் பட்டுள்ளது. அந்தளவுக்கு பிரான்ஸ் நாட்டின் ஓர் அடையாளம் தான் ஈபிள் டவர்.
ஒவ்வோர் ஆண்டும் எழுபது இலட்சம் பேர் வரை ஏறி இறங்கும் இடமாக ஈஃபிள் கோபுரம் இருக்கிறது என்கிறது பிரான்சு நாட்டுச் சுற்றுலாத் துறைப் புள்ளிவிவரம். பிரான்ஸ் நாட்டின் "இரும்புப் பெண்" என அழைக்கப்படும் ஈபிள் டவர் உலக சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரின் அடையாள மாகவும் மாறிவிட்ட ஈஃபிள் கோபுரம், 1889ஆம் ஆண்டில்தான் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு 1889 ம் ஆண்டு மார்ச் மாதம் 31 ம் தேதி பாரீசில் நடந்த உலக வர்த்தக கண்காட்சியில் தான் திறந்து வைக்கப்பட்டது.
உண்மையில், ஈஃபிள் கோபுரமானது தற்காலிகக் கட்டுமானமாகத்தான் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. சரியாகச் சொன்னால் இருபது ஆண்டுகள் வரை தாக்குப் பிடிக்கக்கூடிய ஒன்றாக இருந்தால் போதும் என்றே, ஈஃபிள் கோபுரப் பணி தொடங்கப்பட்டது. ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரப்படி, மொத்த ஈஃபிள் கோபுரத்தையும் கட்டிமுடிக்க 2 ஆண்டுகள் 2 மாதங்கள் 5 நாள்கள் எடுத்துக்கொண்டுள்ளனர்.
பிரெஞ்சு புரட்சியை நினைபடுத்தும் விதமாகவும், நாட்டின் தொழில் துறையின் வலிமையை காட்டவும் காஸ்டாவ் ஈபிள் என்பவரால் ஈபிள் டவர் கட்டப்பட்டது! ஒட்டுமொத்தக் கோபுரத்தையும் கட்டிமுடிக்கும் திட்டத்தை நிறைவேற்றிய நிறுவனத்தின் உரிமையாளர் தான், கஸ்டவ் ஈஃபிள். இரும்பால் ஆன இந்தக் கட்டுமானத்தின் தொடக்க நிலை வடிவமைப்பாளர், அவரே. ஈபிள் டவர் கட்டுமானத்தில் பலர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதற்கு ஈபிள் பெயரே வைக்கப்பட்டது.
கோபுரக் கட்டுமானத்தில் பணியாற்றிய பொறியாளர்கள், அறிவியலாளர்கள், கணிதவியலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அனைவரின் பெயர்களும் கோபுரத்தின் பக்கவாட்டில் பொறித்து வைக்கப் பட்டுள்ளது. மொத்தம் 72 பேரின் பெயர்கள் அங்குப் பதியப்பட்டிருக்கின்றன
பாரீஸ் நகரத்துக்குப் பெருமை சேர்க்கும் ஓர் அடையாளச் சின்னமான ஈபிள் டவரை. அதன் கட்டுமானம் நிறைவடைந்த போது பெரும்பாலானவர்களுக்கு இது அவ்வளவு பிடித்தமானதாக இல்லை என்பது உண்மை! அழகியலும் தனித்துவமும் வாய்ந்த பாரிஸ் நகரின் எழிலை இந்த இரும்புக் கோபுரம் கெடுத்துவிடும் என்பதே அவர்களுடைய எண்ணமாக இருந்தது!
1897ஆம் ஆண்டில், அங்கிருந்து முதல் வானொலி ஒலிபரப்புச் சேவை தொடங்கப்பட்டது. அதை முன்னிட்டு ஈஃபிள் கோபுரம் நகரத்தின் ராணுவ கேந்திரமான இடமாக மாறிப்போனது. அதாவது, அங்கு சும்மா போய் சுற்றிப் பார்த்துவிட்டு வரக்கூடியதாக மட்டுமன்றி, அதற்கு இராணுவ கேந்திர முக்கியத்துவமும் கிடைத்தது. இதுவே பாரிஸ் நகரத்தினரை ஈஃபிள் கோபுரத்தை மனமொப்பி ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டது.
ஈபிள் டவரை முழுவதுமாக வடிவமைக்க பிரான்ஸ் அரசுக்கு ஆன ஒட்டுமொத்தச் செலவு 7,799,401,31 பிராங்குகள். இரண்டாம் உலகப்போரின் போது 1944 ம் ஆண்டு ஈபிள் டவரை தகர்க்குமாறு பிரான்ஸ் கவர்னருக்கு உத்தரவிட்டார் ஹிட்லர். ஆனால் அவர் அதை நிராகரித்து விட்டார்.
ஈபிள் டவரின் ஒட்டுமொத்த உயரம் 324 மீட்டர்கள், இதில் உச்சியில் உள்ள ஆன்டொனா மட்டும் 24 மீட்டர்கள் ஆகும். கோடையில் ஈபிள் டவர் மீது விழும் அதிகப்படியான வெப்பநிலை காரணமாக இரும்பு விரிவடைந்து சுமார் 6 அங்குலம் வரை வளர்கிறது. அதேபோல் குளிர் காலத்தில் அதே அளவு சுருங்குகிறது. இந்த மாற்றத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியாது.
ஈபிள் டவரின் உட் புறத்திலிருந்து மக்கள் மேல் நோக்கி செல்லும் வகையில் லிப்ட் வசதி உள்ளது. இது மேலும் கீழும் பயணம் செய்யும் தூரம் ஒரு ஆண்டில் 1.03,000 கிமீகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஈபிள் டவர் நிர்மாணிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை அதற்கு 19 முறை பராமரித்து வண்ணப்பூச்சு செய்யப்பட்டுள்ளது. அது உருவாக்கப்பட்ட நாள் முதல் தொடர்ந்து 41 வருடங்களாக "உலகின் உயரமான கோபுரம்" என்ற பெயருடன் விளங்கியது.